மோடியின் நம்பிக்கை நாயகன் பிரகலாத் ஜோஷி.. அதனால்தான் கல்வித்துறை அமைச்சரா?
பிரச்சினைகளை சமாளிக்கும் திறமையால் மோடியின் நம்பிக்கையை பெற்ற பிரகலாத் ஜோஷி, கல்வித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆர்.எஸ்.எஸ். பின்னணியிலிருந்து வந்த அவர், 1994 இத்கா மைதானப் போராட்டத்தால் முன்னிலைப்படினார். கர்நாடக பாஜக நெருக்கடிகளை சமாளித்து, டெல்லி அரசியலுக்கு உயர்ந்தார். 2024 சம்பு எல்லை விவசாயிகள் போராட்டத்தையும் திறம்பட முடிவுக்கு கொண்டுவந்தார்.
பிரச்சினைகளை சமாளிப்பவர் ’பிரகலாத் ஜோஷி’ என்ற காரணத்தினாலேயே, அவருக்கு கல்வி அமைச்சர் பொறுப்பை பிரதமர் மோடி வழங்கியிருப்பதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கர்நாடகாவைச் சேர்ந்த 63 வயதான மூத்த தலைவரான ஜோஷியின் அரசியல் பயணம் ஆர்.எஸ். எஸ் அமைப்பில் தொடங்கியது. 1994ஆம் ஆண்டு ஹூப்ளியில் நடந்த இத்கா மைதானப் போராட்டத்தைத் தொடர்ந்து அவர் முக்கியத்துவம் பெற்றார்.
இது வட கர்நாடகாவில் பாஜக தனது செல்வாக்கை விரிவுபடுத்த உதவியது. எடியூரப்பா தற்காலிகமாக வெளியேறியதைத் தொடர்ந்து 2013இல் கர்நாடக பாஜக பெரும் நெருக்கடியைச் சந்தித்தபோது, ஜோஷி மாநிலப் பிரிவின் தலைவராகப் பொறுப்பேற்று 2016 வரை பணியாற்றினார். இதனை தொடர்ந்து டெல்லி அரசியலுக்கு அவர் அழைத்துவரப்பட்டார்.
அரசியல் மற்றும் நிர்வாக ரீதியான மிக முக்கியமான சவால்களை எதிர்கொள்ளும்போது ஜோஷி திறம்படச் செயல்பட்டதே மோடியின் நம்பிக்கையை இவர் வென்றெடுத்ததற்கான காரணமாக சொல்லப்படுகிறது. குறிப்பாக 2024ஆம் ஆண்டில் சம்பு எல்லையில் நடந்த விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்ததில் ஜோஷி முக்கியப் பங்கு வகித்தார். பாஜகவின் பல்வேறு நெருக்கடியான தருணங்களை சமாளித்த பிரகலாத் ஜோஷி, தற்போது வினாத்தாள் கசிவு விவகாரத்திலும் விடை தருவார் என்று நம்பப்படுகிறது.

