”LGBTQ+ சமூகத்தினர் சமூகத்தின் ஒரு அங்கமே” - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நேற்று விஸ்வ மங்கள்ய சபா அமைப்பு ஏற்பாடு செய்த "சமகால தாய்மை" (Contemporary Motherhood) என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தன்பாலின ஈர்ப்பாளர்கள் குறித்துப் பேசியிருக்கிறார். இது குறித்து அவர் பேசுகையில், “இன்றைய காலகட்டத்தில் LGBTQ+ மற்றும் அதுசார்ந்த விவகாரங்கள் குறித்துப் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. இதுபோன்ற இயல்புகள் சமூகத்தில் எப்போதும் இருந்துதான் வருகின்றன. இதில் சில இயற்கையிலேயே பிறப்பால் அமைபவை. அதற்கு நாமோ அல்லது அவர்களோ எதுவும் செய்ய முடியாது. சில பண்புகள் மனப்போக்கு அல்லது உடலியல் சார்ந்த விருப்பங்களால் பிற்காலத்தில் ஏற்படுபவை.
நமது சமூகத்திலும் இத்தகைய மனிதர்கள் இருந்திருக்கிறார்கள். நமது பண்பாட்டில் அவர்கள் அமைதியான முறையில் கையாளப்பட்டனர். அவர்களும் மனிதர்களே; வாழும் உரிமை படைத்தவர்கள். சமூக அமைப்பில் அவர்களுக்கும் உரிய இடம் உண்டு. அவர்களை இழிவாகப் பார்க்கக் கூடாது. மகாபாரதத்தில் சிகண்டி ஒரு அரசராக இருந்து மாபெரும் வீரர்களுடன் இணைந்து போரிட்டார். இன்றளவும் கூட அவர்களுக்கென்று தனிக் கடவுள்கள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கும்ப்மேளாவில் பங்கேற்கும் மகாமண்டலேஷ்வர்கள் இருக்கிறார்கள். இந்த விஷயத்தை வீணாக ஆரவாரப் படுத்தாமல், சமூகம் அவர்களிடம் அனுதாபத்துடனும் ஆதரவுடனும் நடந்துகொள்வதை உறுதிசெய்ய அமைதியான முறையில் அணுக வேண்டும்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, இளைய தலைமுறையின் வளர்ப்பு குறித்தும் பேசிய அவர், "நாம் புதிய தலைமுறையினரிடம் எந்தெந்த நற்பண்புகளையும் மதிப்புகளையும் பார்க்க விரும்புகிறோமோ, அவற்றை முதலில் நாம் நமது சொந்த வாழ்க்கையில் கடைப்பிடித்துக் காட்ட வேண்டும்" என்றும் சுட்டிக்காட்டினார்.
அதேபோல, லிவ் இன் உறவுகள் குறித்துப் பேசிய அவர், திருமணம் என்பது தர்மத்தையும் பொறுப்புணர்வையும் வளர்க்கும் ஒரு ஒழுக்கம் என்றும், அதற்கு மாற்றாக உள்ள லிவ்-இன் உறவுகள் பொறுப்பற்ற வாழ்க்கை முறையை ஊக்குவிக்கக்கூடும் என்றும் மோகன் பகவத் கருத்து தெரிவித்தார். உலகின் பல நாடுகளில் அதன் விளைவுகள் தென்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

