தேர்வு சீர்திருத்த குழுவினர் மீது விமர்சனம்.. சர்ச்சையில் சிக்கியவர்கள் யார்?
நீட் கசிவு விவகாரம் தேசிய அளவில் பெரும் அதிர்வை ஏற்படுத்திய நிலையில், சீர்திருத்த குழுவில் நந்தன் நிலேகேனி, எஸ்.சோம்நாத், தபன் டேகா உள்ளிட்டோருடன், தேசிய கல்விக் கொள்கை 2020-இல் சர்ச்சை கிளப்பிய அனிதா கர்வால், ஐஐடி சென்னை இயக்குநர் காமகோட்டி ஆகியோர் சேர்க்கப்பட்டிருப்பது எதிர்ப்பை தூண்டியுள்ளது. மத சார்பு, இந்தி-சம்ஸ்கிருத திணிப்பு, ஐஐடி வளாகத்தின் அரசியல் பயன்பாடு போன்ற குற்றச்சாட்டுகள் மீண்டும் முன்வைக்கப்படுகின்றன.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் இந்திய அளவில் மிகப்பெரும் பிரச்சினையாக உருவெடுத்தது. அதனைத் தொடர்ந்து இதற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்தர் பிரதான் பதவி விலக வேண்டும் என்றும், நீட் தேர்வில் சீரமைப்பு செய்யவேண்டும் என்றும் CJP கட்சி டெல்லியில் போராட்டத்தை அறிவித்தது.
இந்த போராட்டம் தொடர்ந்து தன்னிச்சையான மாணவர் போராட்டமாக இந்தியா முழுவதும் வெடித்தது. அதனைத் தொடர்ந்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்தர் பிரதான் ராஜினாமா செய்தார். மேலும் பிரதமர் மோடி தேர்வு சீர்திருத்தங்களுக்காக இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகேனி (nandan nilekani) தலைமையில் உயர்மட்ட குழு அமைத்து உத்தரவிட்டுள்ளார்.
இக்குழுவில் இஸ்ரோ முன்னாள் தலைவர் எஸ்.சோம்நாத் (S. Somanath) , உளவுத்துறை முன்னாள் இயக்குநர் தபன் டேகா (Tapan Deka) , சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி (V. Kamakoti ), ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் அனிதா கர்வால் (Anita Karwal) மற்றும் அம்ரித் லால் மீனா (Amrit Lal Meena) ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.
அதே நேரம் சர்ச்சைக்கு பெயர்போனவர்களும் இக்குழுவில் இணைக்கப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. குறிப்பாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி அனிதா கர்வால் முன்னாள் சிபிஎஸ்இ (CBSE) தலைவராகவும், பள்ளிக் கல்வித் துறைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். அதே போல பா.ஜ.க அரசின் தேசியக் கல்விக் கொள்கை 2020 (NEP 2020) உருவாக்கத்திலும், அதை அமல்படுத்துவதிலும் முக்கியப் பங்காற்றியவர்.
தேசியக் கல்விக் கொள்கை பாடத்திட்டத்தில் அறிவியல் பூர்வமான ஆய்வுகளை விட, மத சார்புடைய மற்றும் வலதுசாரி கொள்கை சார்ந்த பாடங்கள் சேர்க்கப்படுவதாக இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் குற்றம்சாட்டியிருந்தன. மேலும் இதற்கு அனிதா கர்வால் முக்கிய பங்கு வகித்தார் என்றும் விமர்சனம் எழுந்திருந்தது. மேலும் தேசிய கல்வி கொள்கையில் இந்தி, சம்ஸ்கிருத திணிப்பும் தேசியக் கல்விக் கொள்கையில் உள்ளதாக தமிழ்நாட்டிலும் எதிர்ப்பு எழுந்தது.
அதே போல சென்னை ஐஐடி இயக்குநர் காமகோட்டி மீதான சர்ச்சை குறித்தும் விவாதிக்கப்படுகிறது. மாட்டு கோமியத்தில் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் மருத்துவப் பண்புகள் இருப்பதாக பேசியது, 'காசி தமிழ் சங்கமம்' போன்ற பா.ஜ.க அரசின் கலாச்சார நிகழ்வுகளுக்கு ஐஐடி வளாகத்தை முதன்மை அமைப்பாகப் பயன்படுத்த அனுமதித்தது, ஐஐடியில் ஆர்.எஸ்.எஸ்-ன் கல்வி அமைப்பான 'பாரதிய சிக்ஷா மண்டல்' மற்றும் அதன் சார்புடையவர்களை வைத்து நிகழ்ச்சி நடத்தியது உள்ளிட்டவை தற்போது சமூகவலைதளங்களில் விவாதிக்கப்படுகிறது. இப்படி சர்ச்சையில் சிக்கியவர்கள் மத்திய அரசு அமைத்துள்ள தேர்வு சீர்திருத்தங்களுக்காக குழுவில் இடம்பெற்றுள்ளது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

