இந்திய தேசியக் கொடி அவமதிப்பு.. மீண்டும் சர்ச்சை பதிவு.. மன்னிப்பு கோரிய மாலத்தீவு Ex அமைச்சர்!

இந்திய தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் கருத்து பதிவிட்ட மாலத்தீவின் முன்னாள் அமைச்சர் மரியம் ஷியுனா மன்னிப்பு கோரியுள்ளார்.
மரியம் ஷியுனா
மரியம் ஷியுனாட்விட்டர்

இந்திய தேசியக் கொடி அவமதிப்பு

மாலத்தீவில் ஏப்ரல் 21ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து அங்கேயும் தேர்தல் பணிகள் சூடுபிடித்துள்ளன. அந்த வகையில், எதிர்க்கட்சியான மாலத்தீவு ஜனநாயகக் கட்சியை விமர்சிக்கும் வகையில், அந்நாட்டின் முன்னாள் அமைச்சர் மரியம் ஷியூனா “எம்டிபி மிகப்பெரிய சரிவை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. மாலத்தீவு மக்கள் அவர்களிடம் விழ விரும்பவில்லை” எனப் பதிவிட்டு அசோக சக்கரம் போன்ற படத்தைப் பதிவிட்டு இருந்தார்.

அதாவது, அந்தக் கட்சியின் படத்திற்குப் பதிலாக இந்திய தேசியக் கொடியில் அங்கம் வகிக்கும் அசோக சக்கரம் போன்ற படத்தைப் பகிர்ந்திருந்தார். இது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், இந்தியர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மன்னிப்பு கோரிய மரியா ஷியுனா

இதையடுத்து அவர் மன்னிப்பு கோரியுள்ளார். இதுகுறித்து அவர் தன் எக்ஸ் தளத்தில், “எனது சமீபத்திய பதிவின் கருத்தால் ஏதேனும் குழப்பம் ஏற்பட்டிருந்தால் அதற்கு எனது மனப்பூர்வமான மன்னிப்பைத் தெரிவித்துக் கொள்கிறேன். மாலத்தீவின் எதிர்க்கட்சியான எம்டிபிக்கு நான் அளித்த பதிலில், பயன்படுத்தப்பட்ட படம் இந்தியக் கொடியை சார்ந்திருந்தது என் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இது முற்றிலும் தற்செயலானது என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

மேலும் இது ஏதேனும் தவறான புரிதலை ஏற்படுத்தியிருந்தால், அதற்காக நான் வருந்துகிறேன். இந்தியாவுடனான உறவை மாலத்தீவு ஆழமாக மதிக்கிறது. எதிர்காலத்தில் நான் பகிரும் உள்ளடக்கத்தை சரிபார்ப்பதில் அதிக விழிப்புணர்வுடன் இருப்பேன்” என தெரிவித்துள்ளார்.

இந்தியாவைப் பற்றி விமர்சிப்பது மரியம் ஷியுனாவுக்கு இது முதல்முறையல்ல. ஏற்கெனவே இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறிய 3 அமைச்சர்களில் அவரும் ஒருவர். அதைத் தொடர்ந்து அவர் அமைச்சர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: இந்திய தேர்தலை சீர்குலைக்க சதி? சீனா போடும் திட்டம்.. மைக்ரோசாஃப்ட் எச்சரிக்கை!

மரியம் ஷியுனா
“பிடிவாதத்தை விட்டுவிடுங்க; இந்தியாவின் உதவி வேணும்”- மாலத்தீவு அதிபருக்கு முன்னாள் அதிபர் அட்வைஸ்!

இந்தியா - மாலத்தீவு உறவில் விரிசல்

இந்தியா - மாலத்தீவு உறவில் சமீபகாலமாக விரிசல் அதிகரித்து வருகிறது. அதற்கு முக்கியக் காரணம், தற்போதைய மாலத்தீவு அதிபரான முகமது முய்சு சீன ஆதரவாளராக அறியப்படுவதுதான். மாலத்தீவின் புதிய அதிபராக பதவியேற்ற முகமது முய்சு, அரசுமுறை பயணமாக சீன நாட்டிற்குச் சென்றிருந்தார். அங்கு அவர், அந்நாட்டுடன் பல்வேறு யுக்திகளை முன்னெடுத்தார். அப்போது இருநாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதனொரு அங்கமாக, தாயகம் திரும்பிய அதிபர் முய்சு, மாலத்தீவில் இருந்து இந்தியா தனது படைகளை வாபஸ் பெறுமாறு, காலக்கெடு (கடந்த மார்ச் 10) விதித்தார்.

அதன்படி, இந்திய ராணுவ வீரர்களும் முதற்கட்டமாக தாயகம் திரும்பினர். இது மேலும் இரு நாடுகளுக்குள் விரிசலைத் தூண்டியது. இதற்குப் பிறகு, ”மாலத்தீவின் பொருளாதார நிலைக்கு ஏற்ப கடனைத் திருப்பிச் செலுத்துவது குறித்து இந்திய அரசுடன் பேச்சுவாா்த்தை மேற்கொண்டு வருகிறேன்” என இந்திய அரசின் ஆதரவைப் பெற பல்டி அடித்தார்.

அப்போது, இந்தியாவின் ஆதரவாளரான மாலத்தீவு முன்னாள் அதிபர் இப்ராஹிம் முகமது சோலி, “பிடிவாதமாக இருப்பதை விட்டுவிடுங்கள். இந்தியாவின் ஆதரவு மாலத்தீவுக்கு தேவை” என முகமது முய்சுவுக்கு ஆலோசனை வழங்கினார். ஆனாலும் அவர் அதைக் காதில் வாங்கவில்லை. தொடர்ந்து இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற்றப்படுவர் எனக் கூறியிருந்தார்.

இதையும் படிக்க: பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி தேர்வெழுத அனுமதி மறுப்பு... தனியார் பள்ளியின் அதிர்ச்சி செயல்!

மரியம் ஷியுனா
தொடரும் விரிசல்: இந்தியாவுக்கு ஆதரவு.. திடீர் பல்டி அடித்த மாலத்தீவு அதிபர்.. என்ன காரணம்?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com