மடகாஸ்கர் Gen Z போராட்டம் | தப்பியோடிய அதிபர்.. ஆட்சியைக் கைப்பற்றிய ராணுவம்!
மடகாஸ்கரின் உயரடுக்கு CAPSAT இராணுவப் பிரிவின் மூத்த நபரான கர்னல் மைக்கேல் ராண்ட்ரியானிரினா, நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் நீண்டகாலமாக நிலவிவரும் கடுமையான மின்வெட்டு மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதிக்குள்ளாகினர். சுமார் 3 கோடி மக்கள் வசிக்கும் மடகாஸ்கரில் நகர்ப்புற வறுமை ஒரு முக்கியப் பிரச்னையாக இருக்கிறது. 2022ஆம் ஆண்டு நிலவரப்படி நாட்டின் 75% குடியிருப்பாளர்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மடகாஸ்கர், உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகத் தொடர்கிறது. உலக வங்கியின் கூற்றுப்படி, மக்கள்தொகையில் முக்கால்வாசி பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர். மேலும் சர்வதேச நாணய நிதியம், மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே மின்சாரம் பெறுவதாகக் கூறுகிறது.
இதைக் கண்டித்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைநகர் அண்டனானரிவோவில் இளைஞர்கள் மாபெரும் போராட்டத்தைத் தொடங்கினர். ‘ஜென் இசட்’ மற்றும் ‘லியோ டெலஸ்டேஜ்’ என்ற பெயர்களில் சமூக வலைதளங்கள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தப் போராட்டம், கென்யா மற்றும் நேபாளத்தில் நடைபெற்ற இளைஞர் போராட்டங்களை பிரதிபலித்தது. போராட்டத்திற்கு பொதுமக்கள், தொழிற்சங்கங்கள், எதிர்க்கட்சிகளின் ஆதரவு பெருகியது. இதனால் நாடு முழுவதும் போராட்டத்திற்கு ஆதரவு கிடைத்தது.
இதற்கிடையே, ராஜோலினாவின் 2009 ஆட்சிக் கவிழ்ப்பில் தீர்க்கமான பங்கைக் கொண்டிருந்த ஓர் உயரடுக்கு இராணுவப் பிரிவான CAPSATவும் போராட்டக்காரர்களுக்கு தனது ஆதரவை வழங்கியது. அதேபோல், மடகாஸ்கரின் தேசிய துணை ராணுவப் படையான ஜென்டர்மேரியும் போராட்டக்காரர்களுடன் இணைந்தது. இப்படி, CAPSAT மற்றும் ஜென்டர்மேரி இரண்டும் எதிர்ப்பாளர்களுடன் இணைந்ததால், மடகாஸ்கர் அதிபர் ஆண்ட்ரி ராஜோலினாவின் அதிகாரம் சிதைந்தது. அவர், நாட்டைவிட்டுத் தப்பிச் சென்றார். அதேநேரத்தில், ”தாம் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றும் மடகாஸ்கரை அழிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்" எனவும் அவர் வீடியோ வாயிலாக தெரிவித்திருந்தார். மறுபுறம், போராட்டக்காரர்கள் அதிபரின் அதிகாரப்பூர்வ ராஜினாமாவிற்கு அழைப்பு விடுத்தனர்.
இந்த நிலையில்தான் CAPSAT அதிகாரிகள் முறையான அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர். உயரடுக்கு CAPSAT இராணுவப் பிரிவின் மூத்த நபரான கர்னல் மைக்கேல் ராண்ட்ரியானிரினா, இராணுவம் நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றிவிட்டதாகவும், நாடாளுமன்றத்தின்கீழ் சபையைத் தவிர அனைத்து அரசியல் நிறுவனங்களையும் கலைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், மடகாஸ்கரின் உயர் அரசியலமைப்பு நீதிமன்றம், ராண்ட்ரியானிரினாவை அதிபர் பதவி ஏற்க முறையாக அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து, ஆண்ட்ரி ராஜோலினா ஆட்சி முற்றிலும் கலைக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு நாட்களுக்குள் ராண்ட்ரியானிரினா பதவியேற்கக்கூடும் என்று நெருக்கமான வட்டாரங்கள் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்துள்ளன. இராணுவத் தலைமையிலான நிர்வாகம் இரண்டு ஆண்டுகள் வரை நீடிக்கும் என்றும், பின்னர் இடைக்கால அரசாங்கத்தின்கீழ் புதிய தேர்தல்களை நடத்தும் என்றும் ராண்ட்ரியானிரினா அறிவித்தார்.