உலகம் முழுவதும் நாடுகளை உலுக்கும் 'Gen Z' போராட்டங்கள்.. ஏன்.. எதற்கு?
உலகம் முழுவதும் சில நாடுகளை உலுக்கும் 'Gen Z' போராட்டங்கள் குறித்து இக்கட்டுரையில் காண்போம்..
ஒரு பெரிய மாற்றத்திற்கான விதையே புரட்சி ஆகும். அந்தப் புரட்சி மட்டும் பெரிய அளவில் வெடித்துவிட்டால் போதும், எப்படிப்பட்ட அரசும் அதிகாரமும் சறுக்கலைச் சந்திக்கும். அதற்கு உதாரணம் இலங்கை, வங்கதேசம், சிரியா ஆகிய நாடுகள்... இதைத்தான் நமக்கு பல காலங்களாக வரலாறுகள் உணர்த்தியுள்ளன; உணர்த்தி வருகின்றன. அந்த வகையில், இன்றும் சில நாடுகளில் புரட்சிகள் வெடித்து வருகின்றன. சமீபத்தில்கூட நேபாளத்தில் வெடித்த இளைஞர்கள் போராட்டம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுத்தது. அதுகுறித்த ஒரு செய்தித் தொகுப்பை இங்கே காண்போம்...
சமீப காலமாக, சில நாடுகளில் அரசாங்க ஊழலுக்கு எதிராகப் போராடும் இளைஞர்களின் போராட்டம் உலக அளவில் கவனம் பெற்று வருகிறது. இது, ’ஜெனரல் இசட்’ எனப் பரவலாக அழைக்கப்படுகிறது. மேலும், அத்தகைய போராட்டங்களால் வன்முறைகளும் தலைவிரித்தாடுகின்றன. அதனால் உயிரிழப்புகளும் அரங்கேறுகின்றன. ஆனால், போராட்டத்தின் விளைவே மாற்றம் பிறக்கிறது. அந்த வகையில், சமீபத்திய வாரங்களில் ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் ’ஜெனரல் இசட்’ போராட்டங்கள் பரவி வருகின்றன. அதில் மடகாஸ்கர், மொராக்கோ, நேபாளம், பெரு, பிலிப்பைன்ஸ் என அடக்கம்.
மொராக்கோ ’Gen Z 212’ குழுவினர் போராட்டம்
மொராக்கோவில், சிறந்த பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் கோரி, கசபிளாங்கா உட்பட 12 முக்கிய நகரங்களில் ’Gen Z 212’ என்ற குழுவினர் கடந்த சில நாட்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். 2030ஆம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடரை போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளுடன் இணைந்து நடத்துவதற்கான ஏற்பாடுகளை மொராக்கோ அரசு செய்து வருகிறது. கால்பந்து தொடரை பிரம்மாண்டமாக நடத்தி பெயர் எடுப்பதற்கு மொராக்கோ நாடு இப்போதே திட்டமிட்டுள்ள நிலையில், அதற்காக அந்த நாடு எடுத்து வரும் நடவடிக்கை, உலக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. தவிர, அரசுப் பணமும் அதற்காக பன்மடங்கில் செலவழிக்கப்பட்டு வருகிறது.
அதேசமயம், பல பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் நிதிப் பற்றாக்குறையுடன் மோசமான நிலையில் இருப்பதையும் அவர்கள் வேறுபடுத்திக் காட்டுகிறார்கள். இதன் காரணமாகவே, Gen Z 212 என்று அறியப்படும் தலைவர் இல்லாத இயக்கம் ஏற்பாடு செய்துள்ள இந்த ஆர்ப்பாட்டங்கள், அந்நாட்டை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன. இவை, மொராக்கோவில் பல ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களில் ஒன்றாக மாறியுள்ளது. அமைச்சகத்தின் மதிப்பீடுகளின்படி, நாடு முழுவதும் ஆர்ப்பாட்டக்காரர்களில் சுமார் 70% பேர் சிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், மொராக்கோவில் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானோர் வேலையில்லாமல் இருப்பதால் இந்தப் போராட்டங்கள் நடந்துள்ளதாக அந்நாட்டின் புள்ளிவிவர நிறுவனம் தெரிவித்துள்ளது. 2014 உலகக் கோப்பை போட்டியை நடத்துவதற்கு முன்னதாக, பிரேசிலிலும் இதேபோன்ற போராட்டங்கள் நடைபெற்றன என்பது கவனிக்கத்தக்கது.
மடகாஸ்கரில் வெடித்த போராட்டம்
அதேபோல், ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் நீண்ட காலமாக நிலவி வரும் கடுமையான மின்வெட்டு மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதைக் கண்டித்து, கடந்த வாரம் தலைநகர் அண்டனானரிவோவில் இளைஞர்கள் மாபெரும் போராட்டத்தைத் தொடங்கினர். ‘ஜென் இசட்’ மற்றும் ‘லியோ டெலஸ்டேஜ்’ என்ற பெயர்களில் சமூக வலைதளங்கள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தப் போராட்டம், கென்யா மற்றும் நேபாளத்தில் நடைபெற்ற இளைஞர் போராட்டங்களை பிரதிபலித்தது. அமைதியான முறையில் தொடங்கிய இந்தப் போராட்டம், நாளடைவில் வன்முறையாக மாறியது. இந்த மோதல்களில் இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. மடகாஸ்கரில் நகர்ப்புற வறுமை ஒரு முக்கியப் பிரச்னையாகும். 2022ஆம் ஆண்டு நிலவரப்படி நாட்டின் 75% குடியிருப்பாளர்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பெரு மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் போராட்டம்
அடுத்து, பெரு நாட்டில் இளைஞர்கள் தனியார் ஓய்வூதிய நிதியில் பணம் செலுத்த வேண்டும் என்ற சீர்திருத்த நடவடிக்கை நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, போராட்டங்கள் வெடித்தன. இதற்கிடையே, ஊழல், பொருளாதார பாதுகாப்பின்மை மற்றும் அதிகரிக்கும் குற்றங்களும் ஆர்ப்பாட்டங்களுக்குப் பங்களித்துள்ளன.
அடுத்து, பிலிப்பைன்ஸில் வெள்ள நிவாரணத் திட்டங்களுக்கு பில்லியன் கணக்கான வரி செலுத்துவோர் டாலர்களை இழந்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டை எதிர்த்து ஊழல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தில் குதித்தனர். நாடு ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 20 வெப்ப மண்டல புயல்களைச் சந்திக்கிறது, இதனால் இயற்கைப் பேரழிவுகள் மற்றும் வெள்ள நிகழ்வுகளுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடியதாக உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் வெள்ளத் திட்டங்களில் ஏற்பட்ட ஊழல்களால் சுமார் 1.85 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது. சுற்றுச்சூழல் அமைப்பான கிரீன்பீஸ் இந்த எண்ணிக்கையை அதிகமாகக் குறிப்பிட்டுள்ளது.