மடகாஸ்கரில் வெடித்த Gen-Z போராட்டம்.. மீண்டும் அரங்கேறிய பழைய கதை.. தப்பிச் சென்ற அதிபர்!
மடகாஸ்கரில் வெடித்த Gen-Z போராட்டம் காரணமாக, அந்நாட்டு அதிபர் தப்பிச் சென்றுள்ளார். இதனால், மீண்டும் அங்கே பழைய கதையே அரங்கேறியிருப்பதாகக் கூறப்படுகிறது.
மடகாஸ்கரில் வெடித்த Gen-Z போராட்டம்!
சமீபகாலமாக, சில நாடுகளில் அரசாங்க ஊழலுக்கு எதிராகப் போராடும் இளைஞர்களின் போராட்டம் உலக அளவில் கவனம் பெற்று வருகிறது. இது, ’gen z’ எனப் பரவலாக அழைக்கப்படுகிறது. மேலும், அத்தகைய போராட்டங்களால் வன்முறைகளும் தலைவிரித்தாடுகின்றன. அதனால் உயிரிழப்புகளும் அரங்கேறுகின்றன. ஆனால், போராட்டத்தின் விளைவே மாற்றம் பிறக்கிறது. அந்த வகையில், கிழக்கு ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் நீண்டகாலமாக நிலவிவரும் கடுமையான மின்வெட்டு மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சுமார் 3 கோடி மக்கள் வசிக்கும் மடகாஸ்கரில் நகர்ப்புற வறுமை ஒரு முக்கியப் பிரச்னையாகும். 2022ஆம் ஆண்டு நிலவரப்படி நாட்டின் 75% குடியிருப்பாளர்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மடகாஸ்கர், உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகத் தொடர்கிறது. உலக வங்கியின் கூற்றுப்படி, மக்கள்தொகையில் முக்கால்வாசி பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர், மேலும் சர்வதேச நாணய நிதியம், மூன்றில் ஒரு பங்கினர் மட்டுமே மின்சாரம் பெறுவதாகக் கூறுகிறது. இதைக் கண்டித்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு தலைநகர் அண்டனானரிவோவில் இளைஞர்கள் மாபெரும் போராட்டத்தைத் தொடங்கினர். ‘ஜென் இசட்’ மற்றும் ‘லியோ டெலஸ்டேஜ்’ என்ற பெயர்களில் சமூக வலைதளங்கள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்ட இந்தப் போராட்டம், கென்யா மற்றும் நேபாளத்தில் நடைபெற்ற இளைஞர் போராட்டங்களை பிரதிபலித்தது.
குடிமைக் குழுக்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் இறுதியில் இளைஞர் அமைப்பாளர்களுடன் இணைந்து, போராட்டங்களின் நோக்கத்தையும் அளவையும் விரிவுபடுத்தின. அமைதியான முறையில் தொடங்கிய இந்தப் போராட்டம், நாளடைவில் வன்முறையாக மாறியது. ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, செப்டம்பர் மாத இறுதியில் இருந்து போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல்களில் குறைந்தது 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்துள்ளனர்.
போராட்டக்காரர்களுடன் இணைந்த ராணுவம்.. தப்பிச் சென்ற அதிபர்!
இதற்கிடையே, ராஜோலினாவின் 2009 ஆட்சிக் கவிழ்ப்பில் தீர்க்கமான பங்கைக் கொண்டிருந்த ஓர் உயரடுக்கு இராணுவப் பிரிவான CAPSAT, போராட்டக்காரர்களுக்கு தனது ஆதரவை அறிவித்தபோது, அக்டோபர் 11 திருப்புமுனை ஏற்பட்டது. அந்தப் பிரிவைச் சேர்ந்த வீரர்கள் ஆர்ப்பாட்டங்களில் இணைந்து, பொதுமக்களுடன் அணிவகுத்துச் சென்றனர். மேலும், CAPSAT தளபதிகள் இராணுவத்தின் கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டதாக அறிவித்து, புதிய இராணுவத் தலைவரை நியமித்தனர். அதேபோல், மடகாஸ்கரின் தேசிய துணை ராணுவப் படையான ஜென்டர்மேரியும் போராட்டக்காரர்களுடன் இணைந்தது. அதன் அதிகாரிகளில் ஒரு பிரிவு, மூத்த அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்ற ஒரு முறையான விழாவில், ஏற்கெனவே இருந்த தளபதியை பணிநீக்கம் செய்து புதிய தலைவரை நியமித்ததாக அறிவித்தது. இப்படி, CAPSAT மற்றும் ஜென்டர்மேரி இரண்டும் எதிர்ப்பாளர்களுடன் இணைந்ததால், மடகாஸ்கர் அதிபர் ஆண்ட்ரி ராஜோலினாவின் அதிகாரம் சிதைந்தது. இதையடுத்து, அவர், செயின்ட் மேரி விமான நிலையத்திலிருந்து பிரெஞ்சு இராணுவ விமானத்தில் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதை அவர் தனது முகநூல் பக்கத்தில் வீடியோ வாயிலாகவும் உறுதிப்படுத்தியுள்ளார். அதில், "என் உயிரைப் பாதுகாப்பதற்காக, ஒரு பாதுகாப்பான இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயம் எனக்கு ஏற்பட்டது" என்று அவர் தனது இருப்பிடத்தை வெளியிடாமல் வீடியோ வெளியிட்டுள்ளார். அதேநேரத்தில், ”தாம் பதவியை ராஜினாமா செய்யவில்லை என்றும் மடகாஸ்கரை அழிக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்" எனவும் அவர் அறிவித்துள்ளார்.
எனினும், அவர் தப்பிச் சென்றது 2009ஆம் ஆண்டை நினைவுபடுத்துகிறது எனப் பலரும் குறிப்பிடுகின்றனர். 2009ஆம் ஆண்டு அன்டனனரிவோவின் இளம்மேயராக இருந்த ரஜோலினா, அப்போதைய அதிபர் மார்க் ரவலோமனானாவுக்கு எதிராக இராணுவ ஆதரவுடன் ஆட்சிக் கவிழ்ப்புக்கு வழிவகுத்த போராட்டங்களுக்கு தலைமை தாங்கினார்.
மீண்டும் திரும்பிய பழைய கதை!
இப்போது அவருக்கு எதிராகத் திரும்பியுள்ள அதே உயரடுக்குப் பிரிவான CAPSAT, அந்தக் கையகப்படுத்துதலில் முக்கிய பங்கு வகித்துள்ளது. ரஜோலினா 2014 வரை ஓர் இடைக்கால அரசாங்கத்தை வழிநடத்தினார், பின்னர் 2018இல் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றார் மற்றும் எதிர்க்கட்சிகளால் புறக்கணிக்கப்பட்ட வாக்கெடுப்பில் 2023இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருப்பினும், காலப்போக்கில், அவரது நிர்வாகம் ஊழலால் குற்றஞ்சாட்டப்பட்டது. இதற்கிடையே, அக்டோபர் மாத நடுப்பகுதி வரை, அன்டனனரிவோ மற்றும் வடக்கில் உள்ள அன்ட்சிரனானா உட்பட பிற முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவுகள் அமலில் உள்ளன. போராட்டக்காரர்கள் பொது இடங்களை ஆக்கிரமித்து, கோஷங்களை எழுப்பி, அதிபரின் அதிகாரப்பூர்வ ராஜினாமாவிற்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.
அதிபர் பதவி காலியாக அறிவிக்கப்பட்டால், புதிய தேர்தல்கள் ஏற்பாடு செய்யப்படும் வரை செனட் தலைவர் அதிகாரத்தை ஏற்றுக்கொள்வார் என்று மடகாஸ்கரின் அரசியலமைப்புச் சட்டம் கூறுகிறது. ஜீன் ஆண்ட்ரே ந்த்ரேமஞ்சரி தற்போது செனட் சபையின் தற்காலிகத் தலைவராகப் பணியாற்றி வருவதால், மாற்றத்தை வழிநடத்துவதில் அவரது பங்கு முக்கியமானது என்பதை நிரூபிக்கக்கூடும். அதேநேரத்தில், CAPSAT அதிகாரிகள் முறையான அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் எந்தவொரு திட்டத்தையும் மறுத்து வருகின்றனர். "அடுத்து என்ன நடக்கும் என்பதை மடகாஸ்கர் மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்" என்று கர்னல் ராண்ட்ரியானிரினா தெரிவித்துள்ளார்.