அமெரிக்கா: திடீரென ஏற்பட்ட அதீத காட்டுத்தீ... லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றம்!
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸின் பசிபிக் பாலிசேட்ஸ் சுற்றுப்பகுதிகளில் கடந்த செவ்வாயன்று காலை 10:30 மணிக்கு (18:30 GMT) காட்டுத்தீ தொடங்கியதாக California Department of Forestry and Fire Protection அறிவித்தது. கலிஃபோர்னியா பகுதிகளில் பொதுவாக ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் காட்டுத்தீ ஏற்பட்டு அக்டோபர் வரை நீடிக்கும். ஆனால் இந்த ஆண்டு குளிர் காலமான ஜனவரியில் எதிர்பாராத விதமாக தீ ஏற்பட்டுள்ளது.
வனப்பகுதிகளில் பரவிய காட்டுத்தீ ஏராளமான மரங்களை அழித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தீயை அணைக்க தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகிறது. தற்போதைக்கு அப்பகுதிகளில் 1,80,000 குடியிருப்புவாசிகளை வெளியேறுமாறு அரசு அறிவுறுத்தியது.
அவர்களில் பலர் தங்களால் இயன்ற பொருட்களை எடுத்துக்கொண்டு தங்கள் வீடுகளை விட்டு வெளியேறுகிறார்கள். மேலும் 2,00,000 குடியிருப்பாளர்கள் கூடிய விரைவில் வெளியேற்றப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தது 10 பேர் இறந்துள்ள நிலையில் அவர்களின் அடையாளங்கள் ஆராயப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.
தீ விபத்துகளுக்கான காரணம் குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது. வீடுகளை இழந்தவர்களில் சிலர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதனை வெளியிட்டு வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து கருத்து தெரிவித்திருக்கும் காப்பீட்டுத் துறை, “அமெரிக்க வரலாற்றிலேயே அதிக இழப்புகளை ஏற்படுத்திய காட்டுத்தீயாக இதனை பார்க்கிறோம்” எனக் கூறியுள்ளனர். அடுத்த சில நாட்களுக்கு மழை குறித்தான வானிலை அறிவிப்புகள் எதுவும் வெளியாகததால் தீயை அணைப்பதில் சிக்கல் காணப்படுகிறது. தற்போது அங்கிருக்கும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த கலிபோர்னியாவின் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.