குடியேற்றத்திற்கு எதிராக லண்டனில் பேரணி.. குழுவினரைக் கூட்டிய டாமி ராபின்சன் யார்?
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ’Unite the Kingdom’ என்ற பெயரில் நேற்று (செப்.13) மிகப்பெரிய பேரணி நடத்தப்பட்டது.
பிரிட்டனில் திடீரென வெடித்த பேரணி
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ’Unite the Kingdom’ என்ற பெயரில் நேற்று (செப்.13) மிகப்பெரிய பேரணி நடத்தப்பட்டது. பெரும்பாலான படகுகளில் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து அங்கீகாரம் இல்லாமல் அந்நாட்டுக்குள் குடியேறு நபர்களால்தான் இந்தப் பேரணி திடீரென விஸ்வரூபமெடுத்தது. தீவிர வலதுசாரி ஆர்வலர் டாமி ராபின்சன் ஏற்பாடு செய்த லண்டன் பேரணியில், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர். ஆனால், நகர காவல் துறை 1,10,000 - 1,50,000 பேர் கலந்துகொண்டிருக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. எனினும், இந்தப் பேரணி சமீபத்திய தசாப்தங்களில் இங்கிலாந்தின் மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களில் ஒன்றாகும் எனக் கூறப்படுகிறது. ’Unite the Kingdom’ பேரணியில் பங்கேற்றவர்கள் இங்கிலாந்தின் செயிண்ட் ஜார்ஜ் சிவப்பு-வெள்ளைக் கொடியையும், ஐக்கிய இராஜ்ஜியத்தின் மாநிலக் கொடியான யூனியன் ஜாக்கையும் ஏந்தி, "எங்கள் நாட்டை நாங்கள் திரும்பப் பெற விரும்புகிறோம்" என்று கோஷமிட்டனர்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புடன் தொடர்புடைய "அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குங்கள்" என்ற தொப்பிகளைப் பல போராட்டக்காரர்கள் அணிந்திருந்தனர். பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை விமர்சிக்கும் வாசகங்களும் முழங்கப்பட்டன. வெஸ்ட்மின்ஸ்டர் பாலத்தைக் கடந்து, டவுனிங் தெரு அருகே கூடிய பேரணியாளர்கள், தீவிர வலதுசாரி பிரமுகர்களின் உரைகளுக்காகக் காத்திருந்தனர். அப்போது காணொளி வாயிலாகப் பேசிய உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க், ”நீங்கள் வன்முறையைத் தேர்ந்தெடுத்தாலும் இல்லாவிட்டாலும், வன்முறை உங்களைத் தேடி வருகிறது. நீங்கள் எதிர்த்துப் போராடுங்கள் அல்லது இறந்துவிடுங்கள்" என அவர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டினார். இப்படி ஒருகட்டத்தில் அமைதியாக நடைபெற்ற இந்தப் பேரணி, இறுதியில் காவலர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதலை வரவழைத்தது. அப்போது போலீசார் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட 25 பேர் கைது செய்யப்பட்டனர்.
பிரிட்டனுக்குள் மேலும் பதற்றம்
ஆனால், பேரணி குறித்து பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை. மாறாக, அவர் தனது மகனுடன் லண்டனின் எமிரேட்ஸ் மைதானத்தில், நாட்டிங்ஹாம் ஃபாரஸ்டுக்கு எதிரான ஆர்சனலின் பிரீமியர் லீக் போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்தார். மறுபுறம், பிரிட்டிஷ் அரசியல் விவாதத்தில் குடியேற்றம் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இங்கிலாந்து அதிக எண்ணிக்கையிலான புகலிடக் கோரிக்கைகளைக் கண்டுள்ளது. நடப்பாண்டில் இதுவரை 28,000க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து சிறிய படகுகளில் வந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குடியேற்றம், தேசிய அடையாளம் மற்றும் பேச்சு சுதந்திரம் குறித்த விவாதங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில் இந்தப் பேரணியும் பிரிட்டனுக்குள் மேலும் பதற்றத்தை விதைத்துள்ளது.
யார் இந்த டாமி ராபின்சன்?
ஸ்டீபன் யாக்ஸ்லி-லெனான் என்ற இயற்பெயர் கொண்ட டாமி ராபின்சன் ஒரு பிரிட்டிஷ் தீவிர வலதுசாரி ஆர்வலர் ஆவார். 2000களின் பிற்பகுதியிலும் 2010களிலும் இஸ்லாமிய வெறுப்பு வார்த்தை பேச்சுகள் மற்றும் வன்முறை தெருப் போராட்டங்களுக்குப் பெயர் பெற்ற ஒரு குழுவான இங்கிலீஷ் டிஃபென்ஸ் லீக்கின் நிறுவனர் ஆவார். வெறுப்புணர்வை ஏற்படுத்தும் நடத்தைக்காக 2018இல் எக்ஸ் தளத்திலிருந்தும், வெறுப்பு பேச்சுக் கொள்கைகளை மீண்டும் மீண்டும் மீறியதற்காக 2019இல் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமிலிருந்தும் அவர் தடை செய்யப்பட்டார். 2022இல் எலான் மஸ்க் எக்ஸ் தளத்தைக் கைப்பற்றும் வரை அவரது செல்வாக்கு குறைந்தது. ஆனால், இப்போது அவருக்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான பின்தொடர்பவர்கள் உள்ளனர். டாமி ராபின்சன் அமெரிக்க வலதுசாரி குழுக்களுடன் உறவுகளை வளர்த்துக் கொண்டார். ஃபாக்ஸ் நியூஸ் மற்றும் இன்ஃபோவர்ஸ் போன்ற ஊடகங்களில் தோன்றினார். மேலும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட மத்திய கிழக்கு மன்றத்திலிருந்து நிதியுதவி பெற்றார். ஆகஸ்ட் 2024இல், சவுத்போர்ட்டில் ஒரு கொடிய கத்திக்குத்துக்குப் பிறகு, தாக்குதல் நடத்தியவர் ஒரு முஸ்லிம் என்ற தவறான கூற்றுகளைப் பரப்பினார். டாமி ராபின்சன் மீது 2005இல் தாக்குதல், 2012இல் பாஸ்போர்ட் மோசடி, 2014இல் அடமான மோசடி மற்றும் 2018இல் நீதிமன்ற அவமதிப்பு உள்ளிட்ட பல குற்றவியல் தண்டனைகள் உள்ளன. அவர் நான்கு தனித்தனி சிறைத் தண்டனைகளை அனுபவித்துள்ளார். ராபின்சன் கடந்த அக்டோபரில் இந்தப் பேரணியைத் திட்டமிட்டிருந்தார். ஆனால், வழக்கு ஒன்றின் காரணமாக அவர் அப்போது சிறையில் இருந்தார்.