“அமெரிக்க முகத்தில் ஈரான் அறைந்தது” மீண்டும் தோன்றிய காமெனி.. கடந்த ஒரு வாரம் ஈரானில் நடந்தது என்ன?
காமேனி எங்கு இருக்கிறார்?
ஈரான் - இஸ்ரேல் இடையே கடந்த 2 வாரங்களாக உக்கிரமான போர் நடைபெற்று வந்தது. இரு தரப்பும் ஏவுகணைகள் மூலம் மாறிமாறி தாக்குதல் நடத்திக்கொண்டன. இதில் பொது மக்கள் உட்பட ஈரானின் ராணுவ உயர் தலைவர்கள் சிலர் கொல்லப்பட்டிருந்தனர். ஜூன் 24 முதல் போர் நிறுத்தம் அமலுக்கு நிலையில் மத்திய கிழக்கு சற்றே அமைதியாகக் காணப்படுகிறது. இதற்கிடையே, ஈரானின் அதிஉயர் தலைவர் காமெனி எங்கே இருக்கிறார் என கேள்விகள் எழுந்தன. தற்போது மீண்டும் தொலைக்காட்சியில் தோன்றியிருக்கிறார்.
ஈரானின் எந்த ஒரு முக்கியமான முடிவாக இருந்தாலும், அதன் இறுதி முடிவை எடுக்கும் கமேனி கடந்த ஒரு வாரமாக பொது வெளியில் தோன்றவில்லை. அவர் பெயரில் ஓரிரு அறிக்கைகள் மட்டும் வெளியாகின. குறிப்பாக, அமெரிக்கா மத்தியஸ்தம் செய்த போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக கமெனி எந்த ஒரு வார்த்தையையும் தெரிவிக்கவில்லை. அதோடு, ஈரான் அரசில் தனக்கு அடுத்த நிலையில் உள்ள தலைவர்களையும் அமைச்சர்களையும் கூட அவர் சந்திக்கவில்லை எனக் கூறப்பட்டது. இத்தகைய சூழலில், காமெனியின் நிலை என்ன என ஈரான் செய்தித்தாள்களும் கேள்வி எழுப்பியிருந்தன. அவர் பொதுவெளியில் தோன்றவில்லை என்பது பொதுமக்களையும் பதற்றப்படுத்தியது. இந்நிலையில்தான் ஈரானின் வெற்றியை அறிவிக்க ஈரானின் தொலைக்காட்சியில் மீண்டும் தோன்றியுள்ளார்.
மறைந்து இருந்தது ஏன்?
கமெனி வெளியில் வராத கடந்த ஒரு வாரத்திற்குள் ஈரானில் ஏகப்பட்ட நிகழ்வுகள் நடந்தன.. கமெனியின் நெருங்கிய உதவியாளரும் இஸ்ரேலின் தாக்குதலில் காயமடைந்ததாகக் கூறப்பட்டது. இவை அனைத்திற்கும் மேலாக, கமெனி அவருக்கு எதிரான கொலை முயற்சிகளில் இருந்து தப்பிப்பதற்காக மின்னணு தகவல்தொடர்புகள் அனைத்தையும் தவிர்த்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
ஈரானின் அரசியல் ஆய்வாளரான ஹம்சே சஃபாவி, “போர் நிறுத்தத்தின்போது கூட, இஸ்ரேல் காமெனியை படுகொலை செய்ய முயற்சிக்கக்கூடும் என ஈரானின் உயரதிகாரிகள் பலர் சந்தேகிக்கின்றனர். எனவே, தீவிர பாதுகாப்பு நெறிமுறைகளை கமெனியைச் சுற்றிலும் அமல்படுத்தி வருகின்றனர்” எனத் தெரிவித்திருந்தார். ஆனால், மூத்த அதிகாரிகளும் ராணுவ தளபதிகளும் ‘கமெனியைச் சந்தித்தீர்களா?’ என்ற கேள்விக்கு பதிலளிப்பதைத் தவிர்த்து வந்தனர்..
அயதுல்லா அலி கமெனியின் ஆவணக் காப்பக அலுவலகத்தின் தலைவரான மெஹ்தி பசேலியிடம் ஈரானின் அரசு தொலைக்காட்சியின் தொகுப்பாளர் சில கேள்விகளைக் கேட்டிருந்தார். முக்கியமாக, “மக்கள் அயதுல்லா அலி காமெனியைப் பற்றி கவலைப்படுகிறார்களே.. அவர் எப்படி இருக்கிறார் என்று சொல்லமுடியுமா?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்திருந்த பசேலி, “உச்சத்தலைவரைப் பாதுகாக்கும் பொறுப்புள்ளவர்கள் தங்களது வேலைகளை சிறப்பாகச் செய்கிறார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.
அதிகாரத்தைக் கைப்பற்ற போட்டி
காமேனி அண்மையில்தான் தன் பதவிக்கு வாரிசுகளாக 3 பேர் பெயர்களை அறிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதற்கிடையே ‘ஈரான் இண்டர்நேஷனல்’ செய்தி நிறுவனம், ஈரானின் புரட்சிகர காவல்படையின் (IRGC) பல உயர்மட்ட உறுப்பினர்கள் இறந்த செய்தியைக் கேட்ட பிறகு மன மற்றும் உடல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள கமெனி முடிவெடுக்கும் செயல்முறைகளில் தடுமாறுவதாகத் தெரிவித்திருந்தது. இதன்காரணமாக, தேசிய பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களும் உயர்மட்ட இராணுவத் தளபதிகளும் காமெனியை படிப்படியாக ஒதுக்கி வைக்க முடிவு செய்ததாகவும் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டிருந்தன. அதேவேளையில், கமெனி இல்லாத நிலையில் ஈரானின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக அரசு அதிகாரிகளும் ராணுவத் தளபதிகளும் கூட்டணிகளை உருவாக்கி போட்டிகளில் ஈடுபடுவதாகவும் செய்திகள் வந்திருந்தன.
மீண்டும் வந்த காமேனி
இந்நிலையில்தான், ஜூன் 19 ஆம் தேதிக்குப் பிறகு காமெனி மீண்டும் தொலைக்காட்சியில் தோன்றியிருக்கிறார். ஈரானில் புதிய அதிகார மையங்கள் உருவாகி வருவதாக செய்திகள் வெளியானதை அடுத்து காமெனி தொலைக்காட்சியில் தோன்றியிருக்கிறார்.
தொலைக்காட்சியில் பார்க்கும்போது சோர்வாக இருந்த காமெனி, தனது நாடு அமெரிக்காவின் முகத்தில் அறைந்ததாகத் தெரிவித்தார். மேலும், அணுசக்தி தளங்கள் மீதான அமெரிக்க தாக்குதல்களின் தாக்கத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிகைப்படுத்திக் காட்டுகிறார் எனக் குற்றம்சாட்டினார். “சியோனிச ஆட்சி முற்றிலுமாக அழிக்கப்படும் என்று அமெரிக்கா உணர்ந்ததால்தான் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போரில் அமெரிக்கா தலையிட்டது” எனத் தெரிவித்திருக்கிறார்.
ஈரான் ஒருபோதும் சரணடையாது
“அவர்கள் எங்கள் அணுசக்தி நிலையங்களைத் தாக்கினர், இது நிச்சயமாக சர்வதேச நீதிமன்றங்களில் குற்றவியல் வழக்குத் தொடர தகுதியானது, ஆனால், அவர்கள் குறிப்பிடத்தக்க எதையும் செய்துவிடவில்லை” எனத் தெரிவித்துள்ளார். ஈரான் சரணடைதல் தொடர்பாகப் பேசிய கமெனி, ஈரான் ஒருபோதும் சரணடையாது எனவும், மீண்டும் அமெரிக்கா ஈரானைத் தாக்க முடிவு செய்தால் அதற்கு கடுமையான விலையைக் கொடுக்க வேண்டிவரும் என்றும் எச்சரித்திருக்கிறார்.