
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக பகை நீடித்து வந்தாலும், தற்போது நடக்கும் போரின் கோர தாக்குதல் காஸா பகுதியில் வாழ்வோரை உருக்குலைத்து வருகிறது. கடந்த 7ம் தேதி தனது முதல் தாக்குதலை ஹமாஸ் அமைப்பு தொடங்கிய நிலையில், 18 நாட்களாக போர் நீடித்து வருகிறது.
சில நிமிடங்களில் ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவிய ஹமாஸ், 200க்கும் மேற்பட்ட பொதுமக்களை பணையக்கைதிகளாக சிறைபிடித்துச் சென்றது.
இந்நிலையில், கடந்த 7ம் தேதி நடந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பினர் பொதுமக்களை தாக்கியதை ஒப்புக்கொள்வது போன்ற வீடியோவை இஸ்ரேல் தற்போது வெளியிட்டுள்ளது. ஹமாஸ் படைக்குழுவைச் சேர்ந்தவரை இஸ்ரேல் பாதுகாப்பு படை வீரர்கள் பிடித்து விசாரிப்பதாக அந்த வீடியோ உள்ளது.
அந்த வீடியோவில் ஹமாஸ் படையைச் சேர்ந்தவராக காட்டப்பட்ட அந்த நபர், “இஸ்ரேல் மக்களை பிணையக்கைதிகளாக பிடித்து வரச்சொன்னார்கள்.
அப்படி பிணையக்கைதியாக அழைத்து வந்தால் 10,000 டாலர் உதவித்தொகையும், அடுக்குமாடி குடியுருப்பும் தருவதாக கூறினார்கள். குழந்தைகள், வயதான பெண்களை கடத்தி வருமாறு கூறினார்கள்.
எந்த அளவுக்கு முடியுமோ, அந்த அளவுக்கு வீடுகளை கொள்ளையடித்து, மக்களை பணையக்கைதியாக அழைத்துவரச்சொன்னார்கள். நான் ஒரு வீட்டுக்குள் நுழைந்தபோது நாய் குரைத்தது. அப்போது அங்கிருந்த பெண்ணின் சடலத்தை கண்மூடித்தனமாக சுட்டேன். அதைப்பார்த்த எனது தளபதி, குண்டுகளை வீணாக்காதே என்று கத்தினார்.
இஸ்ரேலில் நுழைந்த நாங்கள் பல வீடுகளை அப்படியே எரித்துவிட்டோம்” என்று பகீர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதனைப்பார்த்த நெட்டிசன்கள், தாக்குதலின் உக்கிரம் குறித்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இருப்பினும் அவர் ஹமாஸை சேர்ந்தவர்தானா என்பதை இஸ்ரேல் ஆதாரத்தோடு நிரூபிக்க வேண்டுமென்றும், இல்லாதபட்சத்தில் இது இஸ்ரேலின் சதியாக இருக்கக்கூடும் என்றும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.