காஸாவில் இஸ்ரேல் அமைக்கும் ’மனிதாபிமான நகரம்’.. காட்டமாக விமர்சித்த முன்னாள் பிரதமர்!
இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னை என்பது பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர், 2023இல் இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 252 பேர் பணயக் கைதிகளாகவும் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு, இரு நாடுகளும் பிணைக்கைதிகளை பரிமாறிக் கொண்டன. எனினும், இன்றுவரை அங்கு போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடர்ந்து நடைபெற்று வரும் போரில், இதுவரையில், 57,800க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்திருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தெற்கு காஸாவில் உள்ள ராஃபாவில் கட்டட இடிபாடுகளுக்கிடையே, 'மனிதாபிமான நகரம்' ஒன்றை கட்டும் செயல்பாட்டுத் திட்டங்களை வகுக்க இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளார். ’ஆரம்பத்தில் 6,00,000 மக்களையும், இறுதியில் முழு பாலஸ்தீன மக்களையும் தங்க வைக்கும் வகையில் இது கட்டமைக்கப்படும் எனவும், இந்த நகரத்திற்குள் நுழைந்ததும், பாலஸ்தீனியர்கள் மற்ற நாடுகளைத் தவிர வேறு நாடுகளுக்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்’ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், “இஸ்ரேல் உருவாக்க நினைக்கும் நகரம், ஒரு வதை முகாமாக இருக்கும் என்றும் பாலஸ்தீனியர்களை அங்கு வைப்பது இன அழிப்புக்குச் சமம்” என்றும் இஸ்ரேல் முன்னாள் பிரதமர் எஹுட் ஓல்மெர்ட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “இஸ்ரேல் ஏற்கெனவே காஸா மற்றும் மேற்குக் கரையில் போர்க்குற்றங்களைச் செய்து வருகிறது. இந்த முகாம் கட்டுவது அந்தக் குற்றங்களில் பெரிய அளவில் அதிகரிக்க வழிவகுக்கும். காஸாவின் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளை அகற்ற அவர்கள் ஒரு முகாமைக் கட்டும் அதேவேளையில், பாலஸ்தீனியர்களைக் காப்பாற்றுவது அவர்களின் குறிக்கோள் அல்ல. மாறாக, அவர்களை நாடு கடத்துவதும் தூக்கி எறிவதுமே ஆகும். இஸ்ரேல் உருவாக்க நினைக்கும் நகரம், ஒரு வதை முகாமாக இருக்கும். தவிர, பாலஸ்தீனியர்களை அங்கு வைப்பது இன அழிப்புக்குச் சமம்” எனத் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய மனித உரிமைச் செயல்பாட்டாளர்களும் இந்தத் திட்டத்தை மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்கான ஒரு வரைபடம் என்று விவரித்துள்ளனர். இது செயல்படுத்தப்பட்டால் இனப்படுகொலைக்கு சமமாகிவிடும் என்று அவர்கள் எச்சரித்துள்ளனர்.