
இஸ்ரேல் - ஹமாஸ் படைக்குழு இடையே நடந்து வரும் போரில், மருத்துவமனை மீது நடந்தேறிய தாக்குதலானது பெரும் கரும்புள்ளியாக மாறியுள்ளது. போரானது கடந்த 7ம் தேதி தொடங்கினாலும் 17ம் தேதி அன்று இரவு நேரத்தில் காஸாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள அல் அஹ்லி அரப் மருத்துவமனை மீது நடந்த தாக்குதல் உலகையே உலுக்கியது.
‘நாங்கள் வடக்கைத்தான் தாக்கப்போகிறோம். மக்கள் தெற்கு பகுதிக்கு சென்றுவிடுங்கள்’ என்று இஸ்ரேல் கூறியதுதான் இதற்கு காரணம். ஒருசில விநாடிகளில் மருத்துவமனையை உருக்குலைத்த இந்த தாக்குதலில் 471 உயிர்கள் பலியாகின.
இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல்தான் காரணம் என்று ஹமாஸ் கூறிய நிலையில், ஹமாஸின் ஏவுகணைதான் மருத்துவமனை மீது விழுந்து வெடித்துள்ளது என்று இஸ்ரேல் மற்றும் அமெரிக்க நாடுகள் குற்றம்சாட்டின. சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோக்களையும் வைத்துக்கொண்டு, ஹமாஸை குற்றம் சாட்டியது இஸ்ரேல்.
இந்நிலையில், The New York Times நடத்திய ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி, தாக்குதலுக்கு உள்ளான மருத்துவமனை அல் அஹ்லி அரப், காஸாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையின், வடமேற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளில் இருந்து இஸ்ரேல் நோக்கி ஹமாஸ் படையினர் ராக்கெட்டுகளை ஏவி வருகின்றனர்.
அதே சமயம், காஸா எல்லை அருகில் இருக்கும் நாஹல் ஓஷ் என்ற பகுதியில் இருந்து இஸ்ரேல் ஏவுகணைகளை ஏவி வருகிறது.
இந்த போரில் இதுவரை 8,000க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேலை நோக்கி ஹமாஸ் ஏவியுள்ள நிலையில், அவற்றில் 15 சதவீதமானவை தோல்வியடைந்ததாக கூறப்படுகிறது. இதனை தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்ட இஸ்ரேல், ஹமாஸின் ராக்கெட்டே மருத்துவமனை தாக்குதலுக்கு காரணம் என்கிறது.
இந்நிலையில், நான்கு புறங்களிலும் இருந்து எடுக்கப்பட்ட வீடியோக்களையும், அல்ஜசீரா செய்தி நிறுவனத்தின் வீடியோவையும் வைத்து ஆய்வு செய்த The New York Times, ஒரு முடிவை வெளியிட்டுள்ளது. அதன்படி, மருத்துவமனையை தாக்கிய ராக்கெட் இஸ்ரேலில் இருந்து ஏவப்பட்டதுதான். மருத்துவமனைக்கு 2 மைல்களுக்கு முன்பாகவே அது விண்ணில் வெடிக்கவைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
அதே சமயம், இஸ்ரேலை நோக்கி காஸாவில் இருந்து ராக்கெட் ஏவப்பட்டதற்கும், மருத்துவமனை மீதான தாக்குதலுக்கும் இடையே 25 விநாடி கால இடைவெளி இருப்பதும் தெரியவந்துள்ளது. காஸாவில் இருந்து ஏவப்பட்ட ராக்கெட்டுகள் இஸ்ரேலை தாக்கியிருக்கலாம் என்றும் கணிக்கப்படுகிறது. ஆனால், மருத்துவமனையை தாக்கிய ஏவுகணையின் வகை குறித்த தகவல் இதுவரை கிடைக்கவில்லை.
இந்த மருத்துவமனை தாக்குதலில் காஸாவை குற்றம்சாட்டும் இஸ்ரேல், இதுவரை எந்த ஒரு ஆதாரத்தையும் வெளியிடாததும் குறிப்பிடத்தக்கது. பாதுகாப்புக்காக காஸாவின் தெற்கு பகுதிக்கு செல்லுங்கள் என்று கூறிய இஸ்ரேல், சிகிச்சைக்காக மருத்துவமனையில் தஞ்சம் புகுந்த அப்பாவி உயிர்களை கொல்வதா என்பதே ஒட்டுமொத்த மக்களின் கேள்வியாகவும் இருக்கிறது.