
காஸாவின் மிகப்பெரிய மருத்துவமனையான Al-Ahli மருத்துவமனையில் இஸ்ரேல் தாக்குதலில் காயம் பட்டவர்களுக்கு
சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. போருக்கு அஞ்சிய மக்கள் பெருமளவில் அங்கு தஞ்சமடைந்திருந்தனர்.
அவர்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் உட்பட 500-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரமல்லா உள்ளிட்ட மேற்குக்கரை நகரங்களில் 100-க்கணக்கான பாலஸ்தீன மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல, லெபனான் தலைநகர் பெய்ரூட், ஜோர்டான் தலைநகர் அம்மான் ஆகிய இடங்களில் இஸ்ரேலிய தூதரகத்தின் முன்பாக மக்கள் பெருமளவில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இஸ்ரேல் பயணத்தைத் தொடர்ந்து ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா ஏற்பாடு செய்த கூட்டத்தில் பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ், எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா எல்-சிசி ஆகியோர் பங்கேற்க இருந்தனர். ஆனால், மருத்துவமனை மீதான தாக்குதலை கண்டித்து அப்பாஸ் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று அறிவித்தார்.
இதையடுத்து கூட்டம் ரத்து செய்யப்பட்டது. மருத்துவமனை தாக்குதலை கண்டித்து 3 நாள் துக்கம் அறிவித்துள்ளது ஜோர்டான். மருத்துவமனை மீதான தாக்குதலையடுத்து, ஐநா பாதுகாப்பு கவுன்சில், அவசரக்கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று ஐக்கிய அரபு அமீரகமும், ரஷ்யாவும் அழைப்பு விடுத்துள்ளன.