ஈரான் போர் | அமெரிக்கா உண்மையில் செலவிட்டது எவ்வளவு?
அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்ற போர், தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் இழுபறியாகவே இருந்துவருகிறது.
இந்நிலையில் சுமார் எட்டு வாரங்களாக நடைபெற்ற போரில் ஏறத்தாழ 25 பில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளது என்றும், இது உலகப் பொருளாதாரத்தைப் பேரழிவுக்கு உள்ளாக்கக்கூடிய ஒரு போருக்கு வழிவகுத்து, வரலாற்றிலேயே மிக மோசமான உலகளாவிய எரிசக்தி நெருக்கடியைத் தூண்டியுள்ளது என்றும் பென்டகனின் உயர்மட்ட நிதி அதிகாரி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார் . ஆனால், அவர் கூறிய எண்ணிக்கை முற்றிலும் துல்லியமானது அல்ல என்று ஊடக அறிக்கைகள் சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்ஸெத் இந்த செலவு குறித்த எந்த கருத்தையும் உறுதிப்படுத்த மறுத்துவிட்டார்.
உண்மையான மதிப்பீடு $40-50 பில்லியன் டாலர்களாக இருக்கலாம் என்றும், பஹ்ரைன், குவைத், ஈராக், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் குறைந்தது ஒன்பது அமெரிக்க இராணுவத் தளங்களைப் பழுதுபார்ப்பது, அத்துடன் அந்த நாடுகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகளுக்கு இழப்பீடு வழங்குவது ஆகியவற்றை உள்ளடக்கியிருக்கும் என்றும் சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. என்பிசி நியூஸ் வெளியிட்ட செய்தியில் சேதம் மிக அதிகமாக இருக்கும் என்றும் பழுதுபார்ப்புச் செலவு பல பில்லியன் டாலர்கள் வரை ஆகலாம் என்றும் கூறியுள்ளது.
கடந்த வாரம் தி நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில் ஈரானின் சமச்சீரற்ற போர்முறையால் - அதாவது, 50,000 டாலர் மதிப்புள்ள ஷாஹெட் ஆளில்லா விமானங்களைச் சுட்டு வீழ்த்துவதற்காக, 4 மில்லியன் டாலர் மதிப்புள்ள பேட்ரியாட் இடைமறிப்பு ஏவுகணைகளை அமெரிக்கா பயன்படுத்தியது. இந்தப் போரில் ட்ரம்ப் 1,200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளைப் பயன்படுத்தியுள்ளார் என்று கூறியது. அமெரிக்கா 1,000-க்கும் மேற்பட்ட டோமஹாக் ஏவுகணைகளையும் பயன்படுத்தியுள்ளது, அவை ஒவ்வொன்றும் தோராயமாக 3.6 மில்லியன் டாலர் மதிப்புடையது.
ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்ட ஏவுகணைகளை மீண்டும் நிரப்புவதற்கும், விமானங்களை மாற்றுவதற்கும், மற்றும் THAAD வான் பாதுகாப்பு அமைப்புக்கான AN/TPY-2 ரேடார்கள் போன்ற, அழிக்கப்பட்ட அல்லது சேதப்படுத்தப்பட்ட உபகரணங்களுக்கு ஆகும் செலவு சேர்க்கப்பட்டுள்ளதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஒவ்வொரு ரேடாரின் விலையும் 500 மில்லியன் டாலர் முதல் 1 பில்லியன் டாலர் வரை ஆகும் என்றும் அநத அறிக்கை கூறியுள்ளது.
பிப்ரவரி 28 அன்று சண்டை தொடங்கியதிலிருந்து, போரின் உண்மையான செலவு ஒரு தெளிவற்றதாகவே இருக்கிறது. முதல் வாரத்தின் முடிவில், தி டைம்ஸ், ஃபாக்ஸ் நியூஸ் மற்றும் ராய்ட்டர்ஸ் ஆகியவை பென்டகன் அதிகாரிகளை மேற்கோள் காட்டி, மொத்த செலவு சுமார் $11.3 பில்லியன் என மதிப்பிட்டன; நான்காவது வாரத்தின் முடிவில், இந்தச் செலவு 25 பில்லியன் டாலரைக் கடந்ததாக செய்தி. அதனால் இந்த 25 பில்லியன் டாலர் செலவு என்ற செய்தியில் உண்மையில்லை என்றும் அதிகமாகவே செலவு ஆகியிருக்கிறது என்றும் கூறப்படுகிறது .

