புதிய தலைவர் மீது தாக்குதல்? வெளிவந்த அதிர்ச்சி தகவல்.. ஈரான் சொல்வது என்ன?
கடந்த சில வாரங்களாக அமெரிக்கா எந்நேரம் வேண்டுமானாலும் ஈரானை தாக்கும் என்றே பரவலாக பேசப்பட்டது. அப்படி இந்த போர் ஏற்பட்டால் இரு தரப்புக்கும் அதிக சேதம் ஏற்படும் என்றும் மதிப்பிடப்பட்டது. ஆனால், அனைவரின் எதிர்பார்ப்புக்கு மாறாக போர் தொடங்கிய 24 மணி நேரத்துக்குள் ஈரானின் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். ஈரானை 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி புரிந்துவந்த அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டுள்ளது ஈரானில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து ஈரானின் பதிலடி முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்தது.
மேலும் அயதுல்லா அலி காமேனியின் மகன் மொஜ்தாபா கமேனி (Mojtaba Khamenei) ஈரானின் அடுத்த அதிஉயர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதனிடையே போர் தொடங்கிய முதல் நாளில் இஸ்ரேல் தாக்குதலில் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்ட நிலையில், அதே தாக்குதலில் அவரின் மகன் மொஜ்தாபா கமேனியும் காயமடைந்ததாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் அவர் தெஹ்ரானில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாகவும், செயற்கை சுவாசக் கருவி (Ventilator) பொருத்தப்பட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. மேலும் சிகிச்சையில் இருந்த நபரைத்தான் ஈரானின் புதிய தலைவராக மதகுருமார்கள் தேர்ந்தெடுத்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
ஈரானிய அரசு ஊடகங்கள்கூட புதிய தலைவரான மொஜ்தாபா கமேனியை காயமடைந்த வீரர் என்ற பொருள் கொண்ட ஜான்பாஸ் (Jaanbaz) என்று அழைத்து வருவதை குறிப்பிட்டு இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்தச் செய்திகள் உண்மை என்று சொல்லும் வகையில் புதிய தலைவராக பொறுப்பேற்ற பின்னர் மொஜ்தாபா கமேனி ஒருமுறைகூட பொதுவெளிக்கு வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

