ஈரான் செய்த மாபெரும் தவறு.. களமிறங்கும் பிரான்ஸ் படைகள்! ஒட்டுமொத்தமாக மாறும் களம்!
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பிரான்ஸ் தனது ராணுவத்தை சைப்ரஸுக்கு அனுப்பவுள்ளதாக அறிவித்துள்ளது. சைப்ரஸ் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதால், பிரான்ஸ் அதற்கு பதிலடி கொடுக்கத் தயாராக உள்ளது. இது ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதான தாக்குதலாக கருதப்படும் என்று பிரான்ஸ் அதிபர் மெக்ரான் கூறியுள்ளார்.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் இஸ்ரேல் படைகள் அமெரிக்க ஆதரவுடன் ஈரான் மீது தாக்குதல் நடத்தின. இஸ்ரேலின் இந்த தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தியது. முதலில் இந்த தாக்குதலில் திணறிய ஈரான் பின்னர் அதிலிருந்து மீண்டு இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தியது.
அதோடு அமெரிக்க படைகள் தங்கள் ராணுவ தளங்களை வைத்திருந்த வளைகுடா நாடுகள் மீதும் ஈரான் தாக்குதலை தீவிரப்படுத்தியது. அதன்படி சவுதி அரேபியா, UAE, கத்தார், பக்ரைன், ஓமன் ஆகிய நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது.
ஈரான் செய்த தவறு..
அதே போல சைப்ரஸ் நாட்டில் அமைந்துள்ள பிரிட்டனுக்கு சொந்தமான அக்ரோதிரி (Akrotiri) விமானப்படை தளத்தின் மீதும் ஈரான் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது. அதுவரை பிரிட்டன் ஈரானுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்காத நிலையில், அதன்பின்னர் பிரிட்டன் தனது ராணுவ தளத்தை பயன்படுத்த அமெரிக்காவுக்கு அனுமதி அளித்தது.
சைப்ரஸ் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினராக உள்ள நிலையில், அந்த நாட்டின் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது ஐரோப்பிய நாடுகளிடையே அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சைப்ரஸ் மீது தாக்குதல் நடத்திய ஈரானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது ராணுவத்தை அனுப்பவுள்ளதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் (Emmanuel Macron) அறிவித்துள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், சைப்ரஸ் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) ஒரு அங்கம். எனவே, சைப்ரஸ் மீதான எந்தவொரு தாக்குதலும் ஒட்டுமொத்த ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதான தாக்குதலாகவே கருதப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகப்படுத்துவதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையெனில் பிரான்ஸ் தனது நட்பு நாடுகளைப் பாதுகாக்கத் தயங்காது என்றும், பிரான்ஸ் தனது அதிநவீன போர் விமானங்களையும், போர் கப்பல்களையும் சைப்ரஸ்க்கு அனுப்பத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அதோடு, ஹார்முஸ் நீரிணையை மீட்பதே எங்கள் இறுதியான நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே சைப்ரஸ் மீதான தாக்குதல் காரணமாக இங்கிலாந்து ஈரானுக்கு எதிராக திரும்பியுள்ள நிலையில், தற்போது பிரான்ஸும் ஈரானுக்கு எதிராக திரும்பியுள்ளது.

