ஒரேநாளில் இஸ்ரேலை அலறவிட்ட ஈரான்.. ”பதிலடி கொடுக்கப்படும்” என நெதன்யாகு சவால்!
அணு ஆயுத விவகாரம் தொடர்பாக, ஈரானைக் குறிவைத்து இஸ்ரேல் கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. அதாவது, அணு ஆயுதத்தைத் தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி ஈரான் மீது 'ஆபரேஷன் ரைசிங் லயன்' என்ற பெயரில் கடந்த ஜூன் 13ஆம் தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக ஈரானுமும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. தற்போது இருநாடுகளும் மாறிமாறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த தாக்குதலில் ஈரானில் அதிகமான பலி எண்ணிக்கை ஏற்பட்டுள்ளது. முக்கியமாக, அந்நாட்டின் தளபதிகள், அணு விஞ்ஞானிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையே, ஈரானுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ஆனால், அதற்கு பதிலடி கொடுத்த ஈரானின் உச்சபட்ச தலைவரான அலி கமேனி, “போர் தொடங்கிவிட்டது; அமெரிக்கா இதில் தலையிட்டால் அதற்கும் பதிலடி கொடுக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், 7வது நாளான இன்று ஈரான், இஸ்ரேலில் உள்ள மருத்துவனைகள் மற்றும் குடியிருப்புகளை ஏவுகணைகள் மூலம் தாக்கியது. அங்கு, பீர்ஷெபாவில் உள்ள சொரோகா மருத்துவமனையின் மீது ஈரான் ராணுவம் தாக்கியதில் அது பலத்த சேதமடைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், டெல் அவிவில் உள்ள இஸ்ரேலிய பங்குச் சந்தை கட்டடமும் ஈரானின் ஏவுகணைகளால் தாக்கப்பட்டுள்ளது. அக்கட்டடமும் பரவலாக சேதமடைந்துள்ளது. ஈரான் தரப்பால், இன்று காலை இஸ்ரேலின் பல பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் இதுவரை 32 பேர் பலியாகி இருப்பதாகவும், பலர் காயமடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே, ஈரான் நடத்திய கொடூரத் தாக்குதலை இஸ்ரேல் கண்டித்துள்ளது. இதுகுறித்து அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ”ஈரானின் பயங்கரவாத கொடுங்கோலர்கள், இன்று காலை பீர்ஷெபாவில் உள்ள சொரோகா மருத்துவமனை மற்றும் நாட்டின் மையத்தில் உள்ள பொதுமக்கள் மீது ஏவுகணைகளை ஏவினர். தெஹ்ரானில் உள்ள கொடுங்கோலர்களிடமிருந்து முழு விலையையும் நாங்கள் வசூலிப்போம்” என அவர் எச்சரித்துள்ளார்.