இஸ்ரேல் - ஈரான் போர் | ”இருநாடுகளுக்கு இடையே மத்தியஸ்தம் செய்யத் தயார்” - ரஷ்யா அறிவிப்பு!
அணு ஆயுத விவகாரம் தொடர்பாக, ஈரானைக் குறிவைத்து இஸ்ரேல் கடந்த சில நாட்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. அதாவது, அணு ஆயுதத்தைத் தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி ஈரான் மீது 'ஆபரேஷன் ரைசிங் லயன்' என்ற பெயரில் கடந்த ஜூன் 13ஆம் தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்குப் பதிலடியாக ஈரானுமும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. தற்போது இருநாடுகளும் மாறிமாறி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தாக்குதலில் ஈரானில் அதிகமான பலி எண்ணிக்கை ஏற்பட்டுள்ளது. முக்கியமாக, அந்நாட்டின் தளபதிகள், அணு விஞ்ஞானிகள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப்வுக்கு எதிராக அந்நாட்டு உச்சபட்ச தலைவர் அலி கமேனி பதிலடி கொடுத்திருந்தார். மேலும், இந்தப் போரில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா களமிறங்கியிருக்கும் நிலையில், அவற்றுக்கு எதிராக சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் போரை விரைவில் நிறுத்த வேண்டும் எனவும் இஸ்ரேலை வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்துவைக்கத் தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபா் விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆட்சியாளர் முகமது பின் ஸாயத் அல் நஹ்யானுடன் புதின் தொலைபேசி வாயிலாக பேசினார். அப்போது, ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் தற்போது நடைபெற்றுவரும் மோதல் விரைவில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும் என்பதை இருவரும் ஒப்புக்கொண்டனர். அத்துடன் ஈரான் அணுசக்தி திட்டங்கள் குறித்த சா்ச்சைக்குரிய பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்கான அரசியல் மற்றும் தூதரக முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இரு தலைவா்களும் வலியுறுத்தினார்.
இந்த உரையாடலின்போது, ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பரஸ்பர தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இரு தரப்பினருக்கும் இடையே மத்தியஸ்தம் செய்துவைக்கத் தயாராக இருப்பதாக புதின் கூறினார். மேலும், இது தொடா்பாக ஏராளமான வெளிநாட்டுத் தலைவா்களுடன் பேசிவருவதையும் அல் நஹ்யானிடம் புதின் எடுத்துரைத்தார்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது