“என்ன ஆனாலும் நாங்கள் நிறுத்தமாட்டோம்” அமெரிக்காவுக்கு ஈரானின் பதில்..
ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான மோதலில் அமெரிக்கா சமரச முயற்சிகளை மேற்கொண்டாலும், இஸ்ரேலுக்கு மறைமுகமாக உதவுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக ஈரானில் மூன்று இடங்களில் அமைந்திருக்கும் அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்க விமானப்படை தாக்குதலை நடத்தியுள்ளது.
இஸ்ரேல் ஈரான் இடையே ஒரு வாரத்திற்கும் மேலாக நீடித்து வரும் போர் தற்போது இன்னும் தீவிரமான கட்டத்தினை எட்டியிருக்கிறது. ஈரானின் அணு சக்தித் திட்டங்களால் தனது நாட்டுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதும் இஸ்ரேல் ஈரான் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக ஈரானின் அணு ஆராய்ச்சி மையங்கள் மீது இந்தத் தாக்குதல்கள் தீவிரமாக நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, அணு ஆராய்ச்சி மையங்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானைச் சேர்ந்த 10 அணு சக்தி விஞ்ஞானிகள் தற்போதுவரை கொல்லப்பட்டிருக்கின்றனர்.
இந்தத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஈரானும் பல்வேறு வகையான தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இஸ்ரேலின் கலிலி, நெகவ், டெல் அவிவ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஈரான் தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி வருகிறது. இத்தகைய சூழலில்தான் அமெரிக்காவும் போரில் இறங்கப்போவதாக செய்திகள் வெளியாகின. இதுதொடர்பாக ட்ரம்ப் ஆலோசித்து வருவதாகவும் விரைவில் முடிவெடுக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில் அமெரிக்கா ஈரானைத் தாக்கியுள்ளது மத்தியக் கிழக்கில் மிகப்பெரிய மோதலுக்கான அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்
ஈரானில் உள்ள ஃபோர்டோ, நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் என மூன்று அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இந்தத் தாக்குதலை ‘மிகவும் வெற்றிகரமானது’ எனக் குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், அமைதி பாதைக்கு திரும்பாவிட்டால் மிகப்பெரிய தாக்குதல்கள் நடத்தப்படும் எனவும் ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். வெள்ளை மாளிகையில் ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பேசிய ட்ரம்ப், ஈரானை மத்திய கிழக்கின் கொடுமைக்காரன் எனக் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி, ஈரானின் பதில் நடவடிக்கைகள் மிக வலுவுடன் எதிர்கொள்ளப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
நேற்று கூட அமெரிக்காவின் பி 2 ஸ்டெல்த் குண்டு வீச்சுப் போர் விமானங்கள் அமெரிக்காவின் ஒரு இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு மாற்றப்பட்டதாக செய்திகள் வெளியானது. தற்போது அந்த விமானங்களின் மூலமே ஈரானில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது.
தாக்குதலை அடுத்து ஈரானிய உச்ச தலைவரின் பிரதிநிதியும், அரசு நடத்தும் கெய்ஹான் செய்தித்தாளின் ஆசிரியருமான ஹொசைன் ஷரியத்மதாரி, ஈரானின் அணு சக்தி நிலையங்கள் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க அழைப்பு விடுத்துள்ளார். பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்த வேண்டும் என்றும், அமெரிக்க, பிரிட்டிஷ், ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு நாட்டின் கப்பல்களுக்கு எதிராக ஹார்முஸ் ஜலசந்தியை மூட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
மிகவும் மூர்க்கத்தனமானவை
அமெரிக்காவின் இந்தத் தாக்குதலை கண்டித்துள்ள ஈரானின் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்ஸி, “ஐநா சபை பாதுகாப்புக் கவுன்சிலின் நிரந்தர உறுப்பினரான அமெரிக்கா ஈரானின் அமைதியான அணுசக்தி நிலையங்களைத் தாக்கியதன் மூலம் ஐ.நா. சாசனம், சர்வதேச சட்டம் மற்றும் NPT ஆகியவற்றை அமெரிக்கா மீறியுள்ளது. இன்று காலை நடந்த நிகழ்வுகள் மிகவும் மூர்க்கத்தனமானவை மற்றும் நீண்ட கால விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. ஐநாவின் ஒவ்வொரு உறுப்பினரும் அமெரிக்காவின் இந்த ஆபத்தான சட்டவிரோதமான குற்றவியல் நடத்தை குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஐ.நா. சட்டத்தின் கீழ், தற்காப்புக்கான உரிமையை அங்கீகரிக்கும் விதிகளின் அடிப்படையில், ஈரான் அதன் இறையாண்மை, நலன் மற்றும் மக்களைப் பாதுகாக்க அனைத்து வாய்ப்புகளையும் கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்க தாக்குதலுக்குப் பின், பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லையென ஈரானிய செய்தி ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு உள்நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்றங்களைக் குறைக்க முயன்று வருவதாகக் கூறப்படுகிறது. அணு சக்தி நிலையங்களுக்கு சேதம் ஏற்பட்டாலும், அணு சக்தி நடவடிக்கைகள் தொடரும் என ஈரானின் அணுசக்தி அமைப்பு தெரிவித்துள்ளது.
நிறுத்தப்போவதில்லை
இதுதொடர்பாக ஈரானின் அணுசக்தி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், சர்வதேச சட்டத்திற்கு முரணான இந்த நடவடிக்கை துரதிருஷ்டவசமானது என்றும், இது சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் (IAEA) ஒத்துழைப்புடனும் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச சமூகம் இந்த சட்டவிரோத செயலைக் கண்டித்து ஈரானின் நியாயமான உரிமைகளை அடைய ஆதரவளிக்க வேண்டுமென எதிர்பார்ப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, எதிரிகளின் தீய சதித்திட்டங்கள் இருந்தபோதும் ஈரானின் அணுசக்தி அமைப்பு தேசிய தொழில்துறையின் வளர்ச்சிப் பாதையை நிறுத்த அனுமதிக்காது என தெரிவித்துள்ளது. இது நாட்டின் அணுசக்தியின் வளர்ச்சியைப் பற்றிய வெளிப்படையான குறிப்பாகவே பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் இந்த தாக்குதல்களை அடுத்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு நன்றி தெரிவித்துள்ளார். “மத்திய கிழக்கு மற்றும் அதற்கு அப்பால் உள்ள பகுதிகளை அமைதியின் எதிர்காலத்திற்கு இட்டுச் செல்ல உதவும் ஒரு 'வரலாற்றுத் திருப்புமுனையை' டிரம்ப் உருவாக்கினார்” என நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நடைபெறும் போரில் மீண்டும் அமெரிக்கா உள்நுழைவதால், வரும் காலக்கட்டங்கள் மிகுந்த எச்சரிக்கைக்கு உகந்த காலக்கட்டங்களாகப் பார்க்கப்படுகிறது.