ஈரான் - இஸ்ரேல் போர்| பாசுமதி அரிசி பாதிப்பு.. தவிக்கும் ஏற்றுமதியாளர்கள்!
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டாக சேர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தி வருவதால், இந்தியாவில் குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் பாசுமதி அரிசி ஏற்றுமதியாளர்கள மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
உலக உற்பத்தியில் 70%-க்கும் அதிகமான பங்களிப்பை வழங்கி, உலகின் முன்னணி பாசுமதி அரிசி ஏற்றுமதியாளராக இந்தியா உள்ளது. 2024–25ஆம் ஆண்டில், சுமார் ரூ.50,000 கோடி மதிப்புள்ள சுமார் 60 லட்சம் டன் பாசுமதி அரிசியை ஏற்றுமதி செய்தது, இதில் கிட்டத்தட்ட பாதி அளவிற்கு மேற்கு ஆசியாவிற்கு அனுப்புகிறது.
ஈரானில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய அரிசி ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு (IREF), ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளில் வாங்குபவர்களுடன் புதிய ஒப்பந்தங்களில் நுழைவதைத் தவிர்க்குமாறு உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இந்த மோதல் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் என்றும், சரக்கு மற்றும் காப்பீட்டு செலவுகளை கடுமையாக உயர்த்தக்கூடும் என்றும் கூட்டமைப்பு எச்சரித்துள்ளது.
சவுதி அரேபியா, ஈரான், ஈராக், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஏமன் முதலிய இந்த நாடுகள் இந்தியாவின் மொத்த பாசுமதி அரிசி ஏற்றுமதியில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பங்களிக்கின்றன என்றும் ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு கூறியுள்ளது.
பஞ்சாப் பாசுமதி அரிசி ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவர் ரஞ்சித் சிங் ஜோசன், ஈரானில் நடைபெறும் மோதல் வரலாற்று ரீதியாக இந்தியாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான நீண்டகால அரிசி வர்த்தகத்தை அச்சுறுத்துகிறது என்றார். போர் தொடர்ந்தால், வர்த்தகம் ஸ்தம்பித்து, ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்தும் என்றும், பாசுமதி அரிசியின் விலைகள் வீழ்ச்சியடையும் என்றும், இறுதியில் விவசாயிகளைப் பாதிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
கப்பல் நிறுவனங்கள் சரக்கு கப்பல்களை நடுவழியில் நிறுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது. புவிசார் அரசியல் பதட்டங்கள் காரணமாக கடந்த சில மாதங்களாக இந்தியாவில் இருந்து ஈரானுக்கு நேரடி ஏற்றுமதி ஏற்கனவே குறைந்துள்ளது. கடந்த மூன்று மாதங்களில், சுமார் மூன்று லட்சம் டன் பாசுமதி அரிசி ஈரானுக்கு அனுப்பப்பட்டது. அங்கிருந்து சிறிய கப்பல்கள் ஈரானிய துறைமுகங்களுக்கு பொருட்களை கொண்டு சென்றன. செங்கடல் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தியில் அதிகரித்த ஆபத்துகள் குறித்து ஏற்றுமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளுக்கு சரக்குகள் செல்லும் பாதையில் ஏற்றுமதியாளர்களுக்கு இடையூறுகள் மற்றும் பணம் செலுத்துவதில் தாமதம் இருக்கிறது . சில கப்பல்கள் அருகிலுள்ள துறைமுகங்களில் நிறுத்தப்பட்டு, சரக்குகளை இறக்கிவிட்டதாகவும், ஏற்றுமதியாளர்களால் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிப்புகளை வெளியிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

