ஈரான்| ஹார்முஸ் நீரிணை என்றால் என்ன..? ஒரு முடிவால் ஆடிப்போன உலக நாடுகள்! என்ன விளைவுகள் ஏற்படும்..?
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மாறிமாறி தாக்குதல்களால், ஹார்முஸ் நீரிணை வழியாக கடல் போக்குவரத்தை நிறுத்துவதாக ஈரான் அதிரடி முடிவை விடுத்துள்ளது. இதனால் எண்ணெய் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த நீரிணை மூடப்பட்டால், உலகளாவிய எண்ணெய் விலை உயர்வு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளது.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத் தாக்குதலில் ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதை அடுத்து, பதிலடி கொடுக்கும் நோக்கில் ஈரான் ராணுவம் குவைத், சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை தாக்கி வருகிறது. அதேசமயம், இஸ்ரேல் மற்றும் அமெரிக்க கூட்டுப் படைகள் ஈரானையும் தாக்கி வருகின்றன.
மாறிமாறி நடத்தப்படும் தாக்குதல் காரணமாக, பொதுமக்கள் அச்சத்தில் இருக்கும் இந்தச் சூழலில்தான், உலகலாவிய எரிசக்தி பாதையான ஹார்முஸ் நீர்ச்சந்தி வழியாகச் செல்லக்கூடாது என ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்காரணமாக, நூற்றுக்கணக்கான எண்ணெய்க் கப்பல்கள் கடற்பரப்பிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
ஈரான் கடற்படை அறிவிப்பால் கலங்கி நிற்கும் உலகநாடுகள்..
ஹார்முஸ் நீரிணை வழியாக கடல் போக்குவரத்தை நிறுத்துவது என்பது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களுக்கு ஈரான் பதிலடி கொடுக்கும் ஒரு பிரதான வழியாகும். இந்த நீரிணை எண்ணெய் சந்தைக்கு ஒரு அத்தியாவசிய பாதையாக இருந்துவருகிறது, இது உலகின் கடல்வழி எண்ணெய் வர்த்தகத்தில் கால் பகுதியை கையாளுகிறது. பாரசீக வளைகுடாவைச் சுற்றியுள்ள பெரும்பாலான சப்ளையர்கள் தங்கள் ஏற்றுமதிக்கு இதைத்தவிர வேறு கடல் வழியைக் கொண்டிருக்கவில்லை.
இதனால் அமெரிக்கா மட்டுமில்லாமல் உலகநாடுகளும் பெரிய பாதிப்பை எதிர்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முக்கியமாக இந்த நீரிணை வழியாக பெரும்பாலான சரக்குகள் ஆசியாவிற்கே அனுப்பப்படுகின்றன.
இந்தசூழலில் தான் ஈரான் கடற்படை ஹார்முஸ் நீரிணையை மூடுவதாகவும், மீறி நீர்ச்சந்தியை பயன்படுத்தினால் தாக்குதல் நடத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது. ஈரானிய கடற்படையின் வானொலி ஒலிபரப்பைக் கேட்டதாக கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே மூன்று எண்ணெய் டேங்கர்கள் மீதான தாக்குதலுக்கு ஈரான் பொறுப்பேற்றுள்ள நிலையில், இப்பிரச்னை பூதாகரமாக வெடித்துள்ளது.
என்னென்ன விளைவுகள் ஏற்படும்..?
சுமார் 35 கிலோ மீட்டர் அகலம், 165 கிலோ மீட்டர் நீளம் கொண்ட ஹோர்முஸ் நீரிணை பாரசீக வளைகுடாவையும் ஓமன் வளைகுடாவையும் இணைக்கிறது. உலகின் 20% கச்சா எண்ணெய் போக்குவரத்து இதன் வழியாக நடக்கிறது. 30% வரையிலான எரிவாயுவும் இதன் வழியாகத்தான் நடைபெறுகிறது.
இந்த நீர்ச்சந்தி முடங்கியிருப்பதன் காரணமாக கச்சா எண்ணெய்க் கப்பல்கள், எரிவாயு கப்பல்கள் பல ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு சுற்றிச்செல்லும் நிலை ஏற்படும். விலை உயர்வு, கால தாமதம் உள்ளிட்டவற்றால் பல நாடுகளில் எரிபொருளுக்கு சிக்கல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த நீரிணை மூடப்பட்டால், கச்சா எண்ணெய் விலை 100 டாலர் வரை கூட உயரும் என அஞ்சப்படுகிறது.
தரவுகளின் படி 2025ஆம் ஆண்டில் டேங்கர்கள் ஒரு நாளைக்கு மட்டுமே சுமார் 16.7 மில்லியன் பீப்பாய்கள் கச்சா எண்ணெய் மற்றும் கண்டன்சேட்டை ஹார்முஸ் நீரிணை வழியாக கொண்டு சென்றன. இப்படியான ஒரு போக்குவரத்தை ஈரான் மூடியிருப்பது உலக நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது.

