பாகிஸ்தானில் இன்று பேச்சுவார்த்தை.. முடிவுக்கு வருமா மத்திய கிழக்குப் போர்? எச்சரிக்கும் ட்ரம்ப்!
அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல் பிப்ரவரி 28-ம் தேதி தொடங்கிய நிலையில், ஒரு மாதத்தைக் கடந்தும் நடைபெற்றது. உலகின் 20 சதவீதம் கச்சா எண்ணெய் வர்த்தகம் நடக்கும் ஹார்முஸ் நீரிணைப் பகுதியை ஈரான் முடக்கிய நிலையில், உலகம் முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதையடுத்து, ஹார்முஸை திறக்க வேண்டும் உள்ளிட்ட 15 கோரிக்கை அடங்கிய தற்காலிக போர் நிறுத்தத்தை அமெரிக்க முன்மொழிந்த நிலையில், அதனை ஈரான் தொடர்ந்து மறுத்து வருவதாக கூறப்பட்டது.
இதையடுத்து, ஹார்முஸைத் திறக்காவிடில் ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவோம் எனத் தெரிவித்திருந்த ட்ரம்ப். முதற்கட்டமாக 2 நாட்கள் ஈரானுக்கு கெடு விதித்திருந்தார். ஈரானின் ஒத்துழைப்பு காரணமாக, மேலும் 10 நாட்களுக்கு ஈரான் மீது தாக்குதல் நடத்தப்போவதில்லை எனவும் தெரிவித்தார் எனினும் ஈரான் தொடர்ந்து இதை மறுத்து வந்தது.
இந்த சூழலில் தான், ஏப்ரல் 6-அன்று ஹார்முஸைத் திறக்க ஈரானுக்கு 24 மணி நேரம் கெடு விதிப்பதாகவும், இதுவே கடைசி கெடுவாக இருக்கும் எனவும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இந்தக் கெடு முடிய சில மணி நேரங்களே இருந்த நிலையில், பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தின் காரணமாக 2 வார காலத்திற்கு போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்வதாக ஈரான் அமெரிக்கா உள்ளிட்ட இரு நாடுகளும் ஒப்புதல் அளித்தன. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் இதற்கு ஆதரவளித்தார். தொடர்ந்து, பாகிஸ்தானில் ஏப்ரல் 10-ம் தேதி நிரந்தரப் போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேசமயம், போர் நிறுத்தம் தொடர்பான ஈரானின் 10 கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் என ட்ரம்ப் தெரிவித்திருந்தார். அதில், லெபனான் - காஸா - ஏமன் மீதான தாக்குதலை இஸ்ரேல் உடனே நிறுத்த வேண்டும் என்பதையும் கோரியிருந்தது. ஆனாலும், லெபனான் மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்து வருகிறது. கடந்த வியாழக்கிழமை லெபனானின் பெய்ரூட் மற்றும் மத்தியப்பகுதிகளில் நடத்திய தாக்குதலில், 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த சூழலில் தான், ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியான், லெபனான் மீதான இஸ்ரேலின் இந்த தாக்குதல்கள், அமெரிக்கா-ஈரான் இடையே எட்டப்பட்ட ஆரம்பகட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறும் செயல். இஸ்ரேலின் இத்தகைய தொடர் தாக்குதல்கள் நடைபெறுமானால், வரும் நாட்களில் நடைபெறவிருக்கும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் அர்த்தமற்றதாகிவிடும். எங்கள் மீண்டும் துப்பாக்கியைத் தூக்கத் தயங்காது எனத் தெரிவித்திருக்கிறார்.
இந்த சூழலில், இஸ்லாமாபாத்தில் ஈரான் அமெரிக்கா இடையிலான பேச்சு வார்த்தை நடைபெறுமா என சந்தேகம் ஏற்பட்டிருந்தது. இதற்கிடையில், இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவிடன் லெபனான் மீதான தாக்குதலை நிறுத்துமாறு அறுவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான், நேற்று பாகிஸ்தானின் இஸ்லாமாபத்தில் நடைபெறுவதாக இருந்த பேச்சுவார்த்தை இன்று நடைபெறவிருக்கிறது. இதற்காக, அமெரிக்க தரப்பில், துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழு இஸ்மாபாத் வந்திருக்கிறது. இதில், சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்காப், அதிபர் ட்ரம்பின் மருமகன் ஜெராட் குஷ்னர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஈரான் தரப்பில் இருந்து, வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி, வெளியுறவு துணை அமைச்சர் மஜித் த்க்த் ரவஞ்சி ஆகியோர் பங்கேற்கின்றனர். பேச்சுவார்த்தை நடத்தும் அமெரிக்கா தரப்பில் இருந்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ராணுவ தளபதி அசிம் முனீர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
பதற்றம் நிறைந்த சூழலில் பாகிஸ்தானில் இன்று நடைபெறும் அமெரிக்கா, ஈரான் பேச்சுவார்த்தைக்காக இஸ்லாமாபாத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முக்கிய சாலைகளில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய அலுவலகங்கள், தூதரகங்கள் உள்ள பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் வெளிநாட்டு விருந்தினர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிக்கப்படும் என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோஷின் நக்வி உறுதியளித்துள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்காவுடனான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில், யுரேனியம் செறிவூட்டும் ஈரானின் உரிமையை தக்கவைப்பது மிக முக்கிய அம்சமாக இருக்கும் என்று அந்நாட்டின் அணுசக்தித் துறைத் தலைவர் முகமது எஸ்லாமி தெரிவித்துள்ளார். ஆனால், ஈரான் தனது மண்ணில் யுரேனியம் செறிவூட்டுவதை முழுமையாக நிறுத்த வேண்டும் என்றும், ஏற்கெனவே செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை சர்வதேச அணுசக்தி முகமையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளது.
இந்த பேச்சுவார்த்தைக் குறித்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தப் பேச்சுவார்த்தை முடிவுகள் குறித்து 24 மணி நேரத்தில் தெரியவரும், எங்களுடன் ஒப்பந்தம் இறுதி செய்யப்படாவிட்டால் ஈரானுக்கு மோசமான விளைவுகள் ஏற்படும். எங்கள் போர்க்கப்பங்களில் ஆயுதங்களை ஏற்றிவருகிறோம். ஒப்பந்தம் ஏற்படாவிட்டால், அந்த ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் எனத் தெரிவித்துள்ளார். மத்தியக்கிழக்கில் ஏற்பட்டு வரும் பதற்றம் தணியுமா அல்லது மீண்டும் தொடருமா என்பது இந்த பேச்சுவார்த்தையின் மூலம் தெரியவரும்.

