நாளை பேச்சுவார்த்தை | கடும் நிபந்தனையில் ஈரான்.. ஒப்பந்தம் முறியுமா? இஸ்ரேலைச் சாடிய பாகிஸ்தான்!
இதற்கிடையில், பெய்ரூட் மீதான இஸ்ரேலின் கடுமையான தாக்குதல்கள் மற்றும் ஹார்முஸ் நீரிணையில் நிலவும் பதற்றத்தால், அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் முறியும் அபாயத்தில் உள்ளது.
பதற்றம் நிறைந்த சூழலில் பாகிஸ்தானில் நாளை நடைபெறும் அமெரிக்கா, ஈரான் பேச்சுவார்த்தைக்காக இஸ்லாமாபாத்தில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. முக்கிய சாலைகளில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். உள்ளூர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய அலுவலகங்கள், தூதரகங்கள் உள்ள பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு பொது மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்கும் வெளிநாட்டு விருந்தினர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிக்கப்படும் என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மோஷின் நக்வி உறுதியளித்துள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்காவுடனான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில், யுரேனியம் செறிவூட்டும் ஈரானின் உரிமையை தக்கவைப்பது மிக முக்கிய அம்சமாக இருக்கும் என்று அந்நாட்டின் அணுசக்தித் துறைத் தலைவர் முகமது எஸ்லாமி தெரிவித்துள்ளார். ஆனால், ஈரான் தனது மண்ணில் யுரேனியம் செறிவூட்டுவதை முழுமையாக நிறுத்த வேண்டும் என்றும், ஏற்கெனவே செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை சர்வதேச அணுசக்தி முகமையிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் அமெரிக்கா நிபந்தனை விதித்துள்ளது.
தங்களது அணுசக்தித் திட்டம் அமைதிப் பயன்பாட்டிற்கானது என்றும், அந்த உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது என்றும் ஈரான் திட்டவட்டமாகக் கூறியுள்ளது. பாகிஸ்தானில் இருநாடுகளும் பேச்சுவார்த்தை நடத்த உள்ள நிலையில், யுரேனிய இருப்பு மற்றும் ஏவுகணைச் சோதனைகள் தொடர்பாக இன்னும் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இதற்கிடையில், பெய்ரூட் மீதான இஸ்ரேலின் கடுமையான தாக்குதல்கள் மற்றும் ஹார்முஸ் நீரிணையில் நிலவும் பதற்றத்தால், அறிவிக்கப்பட்ட போர் நிறுத்தம் முறியும் அபாயத்தில் உள்ளது.
முன்னதாக, இஸ்ரேலை முற்றிலும் அழிக்க வேண்டும் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் பதிவிட்டிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.‘இஸ்ரேல் மனிதகுலத்துக்கு சாபம்’என்றும், அதனை உலக வரைபடத்திலிருந்து அகற்ற வேண்டும் என்றும் அவர் பதிவிட்டிருந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இஸ்ரேல் பிரதமர் அலுவலகம், அமைதி பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கும் ஒரு நாடு, இத்தகைய வன்மமான கருத்துகளைக் கூறுவது ஏற்கத்தக்கதல்ல என்று கூறியுள்ளது. பாகிஸ்தான் ஒரு நடுநிலையான மத்தியஸ்தராகச் செயல்படுவதில் தங்களுக்குச் சந்தேகம் இருப்பதாகவும் இஸ்ரேல் சாடியுள்ளது. இதனை அடுத்து அமைச்சர் கவாஜா தனது பதிவை நீக்கியிருந்தார்.

