ஈரான் வான்வெளியில் நடந்த மோதல்.. சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க ட்ரோன்.?
பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதலைத் தொடங்கின. இந்தப் போரின் முதல் நாளிலேயே ஈரானின் உச்சபட்ச தலைவர் அயத்துல்லா கமெனி கொல்லப்பட்டார். இதனால் போர் உக்கிரமடைந்தது. இந்தப் போர் ஒரு மாதத்தை கடந்துவிட்ட சூழலில், மத்திய கிழக்கில் பதற்றம் நீடித்து வருகிறது. உலகின் மிக முக்கியமான எண்ணெய்ப் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் நீரிணையை முழுமையாக ஈரான் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. அதனால் சர்வதேச அளவில் எரிபொருள் முதல் பொருளாதாரம் வரை கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.
மேலும், ஈரானின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவை கைப்பற்ற அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் பேட்டியில் கூறியதால் பதற்றம் அதிகரித்துள்ளது. ஹார்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் அனுமதி அளித்தாலும், அமெரிக்கா தங்கள் மண்ணில் கால் வைத்தால் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது கடும் தரைவழித் தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
இப்படி பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில் ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள லொரெஸ்தான் மாகாணத்தின் தலைநகரான கொர்ரமாபாத் நகரில், அமெரிக்கத் தயாரிப்பான 'லூகாஸ்' ரக ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஈரானின் வான்பரப்பிற்குள் ஊடுருவிய அமெரிக்காவின் அதிநவீன, குறைந்த செலவிலான 'லூகாஸ்' ட்ரோனைத் தாங்கள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 'லூகாஸ்' என்பது அமெரிக்காவால் சமீபத்தில் போர்க்களத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 'காமிகாஸே' வகை ட்ரோன் ஆகும். இது இலக்குகளை நேரடியாக மோதி அழிக்கும் திறன் கொண்டது. லொரெஸ்தான் மாகாணத்தின் முக்கிய நகரான கொர்ரமாபாத் பகுதியில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

