\
Anti-Taliban fighters seized Afghan district
Model Imagechatgpt

ஆப்கன் அரசுக்கே ஆட்டத்தைக் காட்டிய புதிய தலிபான் எதிர்ப்புக் குழு.. மாவட்டத்தை கைப்பற்றி மிரட்டல்!

2021 ஆகஸ்ட்டில் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, தலிபான் எதிர்ப்புப் போராளிகள் குழு ஒன்று ஒரு மாவட்டத் தலைமையகத்தை தற்காலிகமாகவேனும் கைப்பற்றியது இதுவே முதல்முறையாகும்.
Published on

ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சியை எதிர்த்துப் போராடும் 'செபஹியான்-இ மீஹான்' (Sepahian-e Mihan) என்ற புதிய தலிபான் எதிர்ப்பு ஆயுதக் குழு, பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் உள்ள மாவட்டத்தைக் கைப்பற்றிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கும் பாகிஸ்தானுக்கும் ஏற்கெனவே எல்லைப் பிரச்னை காரணமாக அவ்வப்போது தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. அதிலும் தலிபான்கள் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு, இருதரப்பிலும் கடுமையான கருத்து மோதலும் நிலவி வருகிறது. இந்த நிலையில், தலிபான்கள் ஆட்சிக்கு எதிராகவே இன்னொரு புதிய அமைப்பு முளைத்து, அதற்கு எதிராய்ச் சவால்விடும் அளவுக்கு வளர்ந்துள்ளது. தலிபான் எதிர்ப்புப் போராளிகள் குழுவான செபஹியான்-இ மீஹான், தேசத்தின் வீரர்கள் என அழைக்கப்படுகிறது. இந்தக் குழுவின் தளபதியாக அப்துல் கையூம் மலங் (Abdul Qayum Malang) உள்ளார். இவர் முன்னாள் ஆப்கான் சிறப்புப் படை அதிகாரியாகப் பணியாற்றியவர் ஆவார்.

தலிபான்
தலிபான்

இந்த நிலையில்தான், வடகிழக்கு ஆப்கானிஸ்தானின் படாக்ஷான் (Badakhshan) மாகாணத்தில் உள்ள யாஃப்தால்-இ பயீன் (Yaftal-e Paeen) மாவட்ட நிர்வாக தலைமையகத்தை இந்தக் குழு கைப்பற்றியது.

இந்த மாவட்டம் மாகாணத் தலைநகரான பைசாபாத்தில் (Faizabad) இருந்து வெறும் 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது பாகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் சீன எல்லைகளுக்கு அருகில் இருக்கும் மலைப்பாங்கான பகுதி என்பதால், தலிபான் எதிர்ப்புப் படைகள் இங்கு நிலைகொண்டுள்ளன. இந்தச் சூழலில்தான் இப்போராளிகள் திடீரென மாவட்டத்தின் நிர்வாக அலுவலகங்கள், காவல் தலைமையகம் மற்றும் உளவுத்துறை அலுவலகங்கள் மீது ஒருங்கிணைந்த தாக்குதலை நடத்தி, அங்கிருந்த தலிபான் படைகளை ஆயுதங்களை இழக்கச் செய்து தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

மேலும், மாவட்டத்தில் இருந்த தலிபான்களின் கொடியை இறக்கி, தங்களது இயக்கத்தின் புதிய நீல நிறக் கொடியை ஏற்றி தங்களின் கட்டுப்பாட்டைப் பறைசாற்றினர். 2021 ஆகஸ்ட்டில் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, தலிபான் எதிர்ப்புப் போராளிகள் குழு ஒன்று ஒரு மாவட்டத் தலைமையகத்தை தற்காலிகமாகவேனும் கைப்பற்றியது இதுவே முதல்முறையாகும். வார இறுதி விடுமுறை (ஜூலை 17) காரணமாக, மூத்த அதிகாரிகள் வெளியில் இருந்த நேரத்தைப் பயன்படுத்தி இத்தாக்குதலை நடத்தியதாக தலிபான் தரப்பில் கூறப்பட்டது. எனினும், தலிபானின் கூடுதல் படைகள் அனுப்பப்பட்ட பிறகு, போராளிகள் அங்கிருந்து பின்வாங்கியதாகவும், சில மணிநேரங்களிலேயே மாவட்டத்தை மீண்டும் தலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com