சிரியாவின் நிலைக்கு அமெரிக்கா - இஸ்ரேல் சதி காரணமா? ஈரான் பகீர் குற்றச்சாட்டு - நடப்பது என்ன?
சிரியா
மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான சிரியாவை பஷார் அல் அசாத் கடந்த 24 ஆண்டுகளாக ஆட்சி செய்துவந்த நிலையில், ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (HTS) தலைமையிலான கிளர்ச்சிப் படை சமீபத்தில் தலைநகர் டமாஸ்கஸை கைப்பற்றியது. இதன் மூலம் அதிபர் அசாத் குடும்பத்தின் 54 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது மட்டுமின்றி, 13 ஆண்டுகால உள்நாட்டுப்போரும் முடிவுக்கு வந்ததாக பார்க்கப்படுகிறது. உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்து அசாத்தின் பதவி கவிழ்க்கப்பட்டபின், வங்கிகள் மீண்டும் திறக்கப்பட்டன, போக்குவரத்து மீண்டும் தொடங்கியது, கடைகள் திறக்கப்பட்டன.
சிரியாவின் அடுத்தடுத்த நிகழ்வுகள் எவ்வாறு இருக்கும் என்றும், சிரியாவில் புதிதாக அமைந்துள்ள அரசு எவ்வாறு செயல்படும் என்பது குறித்தும் உலகநாடுகள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.
இத்தகைய சூழலில்தான், “சிரியாவில் நடந்தது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கூட்டுத்திட்டத்தின் விளைவு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதற்கான ஆதரங்களும் எங்களிடம் உள்ளன” என ஈரானின் Supreme Leader அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளதாக அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், துருக்கியையும் மறைமுகமாக சாடிய அவர், ஒவ்வொரு நாட்டின் இலக்கும் வேறு என்றும், ஒரு நாடு சிரியாவின் நிலங்களைக் கைப்பற்ற முயற்சித்தால், அமெரிக்க இந்த பிராந்தியத்தில் தனது நிலையை வலுப்படுத்த முயற்சிக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
சிரியா உள்நாட்டுப்போரில் அமெரிக்கா
அமெரிக்காவும் சிரியாவின் அரசியல் மாற்றத்தை ஆதரித்துள்ளது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன், “சிரியாவில் அரசியல் மாற்ற செயல்முறையை வாஷிங்டன் முழுமையாக ஆதரிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். அதேசமயத்தில் சிரியாவில் 2012 ஆம் ஆண்டு மூடப்பட்ட அமெரிக்க தூதரகத்தை மீண்டும் திறக்க வாய்ப்பு இல்லை என அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் தெரிவித்துள்ளார்.
சிரியா உள்நாட்டுப் போரில் அமெரிக்காவின் செயல்பாடுகள் குறித்து ஆராயப்படுகின்றன. சிரியாவில் உள்நாட்டுப் போர் உச்சத்தில் இருந்த 2011 ஆம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமா, சிரிய அரசுக்கு எதிரான மக்களது எதிர்ப்பினை ஆதரித்தார். சில குழுக்களுக்கு அமெரிக்கா படைகளைக் கொடுத்தும் உதவியிருந்தது. ஆனால், 2019 ஆம் ஆண்டு ட்ரம்ப் அதிபராக பதவியேற்றபின், சிரியாவில் இருக்கும் அமெரிக்க படைகளை திரும்ப உத்தரவிட்டார். தற்போதும், சிரியா விவகாரத்தில் அமெரிக்கா தலையிடக் கூடாது என பைடன் அரசுக்கு டொனால்ட் ட்ரம்ப் அறிவுறுத்தியுள்ளார். அதேவேளையில், சிரியாவில் மட்டும் 900 அமெரிக்க துருப்புகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
சிரியா மீது இஸ்ரேலின் தாக்குதல்
இத்தகைய சூழலில்தான், தலைநகர் டமாஸ்கஸில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் உள்கட்டமைப்பு உட்பட சிரியாவில் இராணுவ தளங்கள் அமைந்துள்ள இடங்கள், ஆயுதங்களை உற்பத்தி செய்யும் இடங்கள் மீது கடந்த 48 மணி நேரத்திற்குள் சுமார் 480 தாக்குதல்களை நடத்தியதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. அதேபோல் சிரியாவின் கடற்படை மீது தாக்குதல் நடத்தியதை இஸ்ரேலும் உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்ரேலின் பாதுகாப்புப் படைகள் (IDF) அறிக்கையின்படி, திங்கள்கிழமை இரவு அல்-பைடா மற்றும் லதாகியாவில் உள்ள துறைமுகங்களைத் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கு 15 கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலுக்கு அச்சுறுத்தல் உள்ள திறன்களை அழிப்பதை நோக்கமாகக் கொண்டு தாக்குதல் நடத்தப்படுவதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ் தெரிவித்துள்ளார் என்று IDF அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதாவது மேற்குறிப்பிட்டுள்ள இடங்கள் தீவிரவாதிகளில் கைகளில் சிக்கிவிடும் முன் அழித்துவிடும் நோக்கத்தில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியாவின் தற்போதைய சூழலைப் பயன்படுத்தி நாட்டை ஆக்கிரமித்து, அதன் இறையான்மையை இஸ்ரேல் மீறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என கத்தார் தெரிவித்துள்ளது. சிரியாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அதன் ஆக்கிரப்பு மனப்பான்மையை வெளிப்படுத்துவதாக துருக்கி தெரிவித்துள்ளது.
நெதன்யாகு எச்சரிக்கை
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேலின் புதிய ஆட்சியாளர்களை எச்சரித்துள்ளார். அல் அசாத்தின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற வேண்டாம் என்றும் ஈரானை மீண்டும் சிரியாவில் அனுமதிக்கும் பட்சத்தில் இஸ்ரேல் பலமாக பதிலளிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையேதான் இத்தாலியின் கோரியர் டெல்லா செரா செய்தி நிறுவனம் சிரியாவின் இடைக்கால பிரதமர் முகமது அல் பஷீரை பேட்டி கண்டிருந்தது. அதில் பிரதமர் பஷீர் அரசின் மூன்று முக்கிய நோக்கங்களைத் தெரிவித்திருந்தார். “அனைத்து சிரிய நகரங்களிலும் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மீட்டெடுப்பது, உலகம் முழுக்க சிதறிக்கடக்கும் மில்லியன் கணக்கான சிரிய அகதிகளை மீண்டும் நாட்டிற்கு கொண்டு வருவது, மின்சாரம், உணவு, தண்ணீர் போன்ற அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறையை முடிவுக்குக் கொண்டுவருவது” இவை மூன்றும் அரசின் முக்கிய நோக்கங்களாக தெரிவிக்கப்பட்டுள்ளது.