’மெஜாரிட்டியை பொறுத்தே சட்டம் அமையும்’ - நீதிபதியின் அபாயகரமான கருத்து; உச்சநீதிமன்றம் கொடுத்த பதில்
அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் கடந்த டிச. 8 ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் வலதுசாரி அமைப்பான விஸ்வ இந்து பரிஷத் நடத்திய நிகழ்ச்சியில் பங்கேற்று சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டிருந்தார். இதற்கு ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஒவைசி உட்பட பலர் தங்களது கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில், மூத்த வழக்கறிஞரும், சமூக செயற்பாட்டாளரும், தனியார் அமைப்பான 'நீதித்துறை பொறுப்புடைமை மற்றும் சீர்திருத்தங்களுக்கான பிரசாரம்'(சிஜேஏஆர்)வின் ஒருங்கிணைப்பாளருமான பிரஷாந்த் பூஷண், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவுக்கு இதுத்தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்.
அதில், நீதிபதி சேகர் குமார் யாதவ் கூட்டத்தில் பேசியது அரசியலமைப்பு விதிகளான 14, 21, 25, 26 ஆகியவற்றையும் அரசியலமைப்பில் உள்ள மதச்சார்பின்மையின் அடிப்படை கொள்கைகளை மீறியதாகவும் கடிதத்தில் வலியறுத்தியுள்ளார். எனவே, இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவரை பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யவும் கோரியுள்ளார்.
மேலும், உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் (எஸ்சிபிஏ) தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபல், நீதிபதி யாதவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அதற்கு மத்திய அரசு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்தநிலையில், அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி தொடர்பான வழக்கு பரிசீலனையில் உள்ளது என்றும், இது குறித்து உயர்நீதிமன்றத்திடம் விவரங்களை கோரியுள்ளோம் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முன்னதாக உயர் நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் பேசியது என்ன?
"இது ஒரு இந்துஸ்தான் நாடு என்பதைக் கூற எனக்கு எந்த தயக்கமும் இல்லை. இங்கு மெஜாரிட்டியாக வாழ்பவர்களுக்கு ஏற்றவகையில் இந்நாடு செயல்படுகிறது. இதுதான் சட்டம். இதை ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி சொல்வதாக யாரும் கருதக் கூடாது. சட்டம் என்பது மெஜாரிட்டியை பொறுத்தே அமையும். இதையே ஒரு சமூகம் அல்லது குடும்பத்தில் எடுத்துக் கொள்ளுங்கள். இதிலும் மெஜாரிட்டியின் மகிழ்ச்சிக்கு வழிவகுப்பதே ஏற்கப்படுகிறது" போன்ற கருத்துக்களை பேசியிருந்தார்.