\
Iran Deal Depends on Abraham Accords, Says Trump
ட்ரம்ப் - ஷெபாஸ் ஷெரீப்Pt web

ஈரானுடன் சுமூக உறவு ஏற்பட வேண்டுமா? ஆபிரகாம் உடன்படிக்கையில் இணையுங்கள்.. ட்ரம்ப் நிபந்தனை!

ஈரானுடன் சுமூக உடன்பாடு எட்டப்பட வேண்டுமென்றால், பாகிஸ்தான், சவுதி அரேபியா உள்ளிட்ட இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகள் ஆபிரகாம் உடன்படிக்கையில் இணைய வேண்டும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கபடுகிறது.
Published on

பிப்ரவரி 28-ஆம் தேதி இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து தொடங்கிய மேற்காசியப் போர், தற்போது மூன்றாவது மாதத்தை எட்டியுள்ளது. இந்தச் சூழலில், உலகின் சுமார் 20 சதவீத எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகம் நடைபெறும் முக்கிய கடல் வழித்தடமான ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால், உலக நாடுகளில் கடுமையான எரிபொருள் பற்றாக்குறையும் விலை உயர்வும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகள் அதிக பாதிப்பை சந்தித்து வருகின்றன.

ஈரான் - அமெரிக்கா
ஈரான் - அமெரிக்காweb

இந்நிலை தான், பாகிஸ்தானின் மத்தியஸ்தம் காரணமாக இந்தப் போர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளுக்கும் பாகிஸ்தான் மத்தியஸ்தராக செயல்பட்டு வந்தது. இப்பேச்சுவார்த்தையில் ஈரானிடம் இருக்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் பிரதான கோரிக்கையாக இருந்தது. அதனை ஈரான் ஒத்து கொள்ளாததால் பேச்சு வார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படாமலேயே இருந்து வந்தது. அதேசமயம், தொடர்ந்து நடைபெற்று வந்த அமைதி பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக, தனது அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை கைவிட ஈரான் ஒப்புக்கொண்டுள்ளதாக தி நியூயார்க் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது. இதன்மூலம், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Iran Deal Depends on Abraham Accords, Says Trump
"இந்தியா என்னை 100% நம்பலாம்.. மோடியின் தீவிர ரசிகன் நான்.." - ட்ரம்ப் பேச்சு

இந்தசூழலில் தான், இன்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைதளப்பதிவில், ஈரானுடனான பேச்சுவார்த்தைகள் சுமூகமாக நடைபெற்று வருவதாகவும், ஈரானுடன் சுமூக உடன்பாடு எட்டப்பட வேண்டுமென்றால், பாகிஸ்தான், சவுதி அரேபியா உள்ளிட்ட இஸ்லாமிய பெரும்பான்மை நாடுகள் ஆபிரகாம் உடன்படிக்கையில் இணைய வேண்டும் எனவும் வலியுறுத்தியிருப்பது பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளியிருக்கிறது.

பாகிஸ்தான்
பாகிஸ்தான்Pt web

ஆபிரகாம் ஒப்பந்தம் என்பது கடந்த 2020-ம் ஆண்டு மேற்காசியாவில், இஸ்ரேல் மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கிடையே அதிகாரப்பூர்வ உறவை உருவாக்க அமெரிக்கா முன்னெடுத்த அமைதி ஒப்பந்தமாகும். எளிமையாக சொன்னால், இஸ்ரேலை ஒரு நாடாக ஏற்றுக்கொண்டு, அதனுடன் நட்பு மற்றும் வர்த்தக உறவை தொடங்குவது. இந்த ஒப்பந்தத்தில், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், மொராக்கோ ஆகிய நாடுகள் ஏற்கனவே இணைந்திருக்கின்றன. அதேசமயம், சவுதி அரேபியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் இணையவில்லை.

குறிப்பாக, பாகிஸ்தான் 1967-க்கு முந்தைய எல்லைகளின் அடிப்படையில், கிழக்கு ஜெருசலேமைத் தலைநகராகக் கொண்ட ஒரு சுதந்திர பாலஸ்தீன அரசு உருவாக்கப்பட்ட பின்னரே அத்தகைய நடவடிக்கை சாத்தியமாகும் என்று கூறி, பாகிஸ்தான் நீண்ட காலமாக இஸ்ரேலை அங்கீகரிக்க மறுத்து வருகிறது. இந்தசூழலில் தான், ஆபிரகாம் உடன்படிக்கையில் இஸ்லாமிய நாடுகள் இணைய வேண்டும் என்ற ட்ரம்பின் வலியுறுத்தல் பாகிஸ்தானுக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுடன் பொருளாதார, இராணுவ மற்றும் அரசியல் உறவுகளையும் பாகிஸ்தான் பேணி வரும் அதேசமயம், இந்த ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையெழுத்திட்டால், மிகப்பெரிய உள்நாட்டு மதக்கலவரத்தை சந்திக்கக்கூடும் என்ற ஆபத்தும் அந்நாட்டுக்கு இருக்கிறது. அந்தவகையில், ஈரான் போர் நிறுத்த விவகாரத்தில் பாகிஸ்தான் மதில் மேல் பூனையாக சிக்கிக்கொண்டுள்ளது.

Iran Deal Depends on Abraham Accords, Says Trump
மருத்துவ உலகுக்கு குட் நியூஸ்.. ஒரு சொட்டு ரத்தம் போதும்.. 15 நிமிடத்தில் புற்றுநோயை கண்டறியலாம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com