’இனிமேதான் Start..' ஆறி வரும் காயங்கள்.. பணிகளில் தீவிரம்.. களத்தில் இறங்கிய ஈரான் உச்ச தலைவர்!
அலி கமேனி இறந்த அன்றே, அவரது மகன் மொஜ்தபாவும் தாக்கப்பட்டதாகவும், கடுமையான காயம் காரணமாக அவர் கோமா நிலைக்குச் சென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. எனினும், அவரைப் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. தாக்குதலில் ஏற்பட்ட கடுமையான காயங்களிலிருந்து மொஜ்தபா காமேனி குணமடைந்து வருவதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.
அமெரிக்கா - இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெற்ற போர், இரண்டு வார காலத்திற்கு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து நடைபெறாமல் இருப்பதற்காக, பாகிஸ்தானில் இருதரப்பிலும் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு ஏற்படவில்லை எனில், ஈரான் மீது தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக, தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தின் பின்னணியில் ஈரானின் உச்சபட்ச தலைவர் மொஜ்தபா காமேனி இருப்பதாகக் கூறப்பட்டது. பிப்ரவரி 28ஆம் தேதி அமெரிக்கா - இஸ்ரேலிய தாக்குதலில் அந்நாட்டின் உச்சபட்ச தலைவராக இருந்த அலி கமேனி மரணத்திற்குப் பிறகு, அவரது மகன் மொஜ்தபா கமெனி உச்சபட்ச தலைவர் பதவியை ஏற்றதாகச் செய்திகள் வெளியாகின.
ஆனால், அவர் இன்னும் பொதுவெளியில் தோன்றாததும், அவர் கூறியதாக அந்நாட்டு அரசு ஊடகத்தில் அறிக்கை வாசிக்கப்பட்டதும் அமெரிக்காவிற்கும் இஸ்ரேலுக்கும் இன்னும் சந்தேகத்தை ஏற்படுத்தி வருகிறது. காரணம், அலி கமேனி இறந்த அன்றே, இவரும் தாக்கப்பட்டதாகவும், கடுமையான காயம் காரணமாக அவர் கோமா நிலைக்குச் சென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. எனினும், அவரைப் பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. அவர் பற்றிய தகவலைச் சேமிக்கும் நிலையில் இஸ்ரேல் உளவுத்துறை ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில், தாக்குதலில் ஏற்பட்ட கடுமையான காயங்களிலிருந்து மொஜ்தபா காமேனி குணமடைந்து வருவதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. அந்தத் தாக்குதலில் மொஜ்தபா காமேனியின் முகம் சிதைந்து போனதாகவும், அவரது இரண்டு கால்களிலும் பலத்த காயங்கள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காயங்கள் இருந்தபோதிலும், அவர் மனரீதியாக விழிப்புடன் இருப்பதாகவும், நிர்வாகப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அவர் மூத்த அதிகாரிகளுடனான கூட்டங்களில் காணொளிக் கலந்துரையாடல் மூலம் பங்கேற்பதாகவும், போர் மற்றும் வாஷிங்டனுடனான பேச்சுவார்த்தைகள் உள்ளிட்ட முக்கியப் பிரச்னைகள் குறித்த முடிவுகளில் தொடர்ந்து பங்கு கொள்வதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தைக்கு மத்தியில் அவரது உடல்நலம் பற்றி வெளியாகியிருப்பது பேசுபொருளாகி உள்ளது. முன்னதாக, அவர் கோமா நிலையில் இருப்பதாகவும், அவரது முகம் சிதைந்திருப்பதாகவும், அவர் ஒரு காலை இழந்திருப்பதாகவும் இதுகுறித்த புகைப்படங்கள் விரைவில் வெளியாகும் எனவும் அமெரிக்கா - இஸ்ரேல் உளவுத்துறை தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தன. எனினும், அவரது காயங்களின் தீவிரத்தை விவரிக்கும் அதிகாரப்பூர்வ ஈரானிய அறிக்கை எதுவும் இதுவரை வெளியாகவில்லை. மேலும், அவரது உடல்நிலை அல்லது அவர் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாதது குறித்த கேள்விகளுக்கு ஈரானின் ஐக்கிய நாடுகள் சபை தூதரகமும் பதிலளிக்கவில்லை. மறுபுறம், ஈரானின் 10 அம்ச திட்டங்களை அமெரிக்கா ஏற்காவிட்டால், போர் தொடரவும் வாய்ப்புள்ளது. அப்போது, அதற்கான ஆலோசனைகளையும் திட்டங்களையும் மொஜ்தபா காமேனியே வழங்கலாம் எனவும் கூறப்படுகிறது. காரணம், ஈரானின் அரசியல் அமைப்புக்குள், உச்ச அதிகாரம் உன்னத தலைவரிடமே உள்ளது. அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியை மேற்பார்வையிடுவதுடன், புரட்சிகரப் பாதுகாப்புப் படை உள்ளிட்ட முக்கிய இணை நிறுவனங்களுக்கும் கட்டளையிடுகிறார்.

