‘நாங்க சொல்ற ரூட்டுல போங்க..’ ஹார்முஸ் பகுதியில் புது வழியை காட்டும் ஈரான்.. ஏன் தெரியுமா?
கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையைக் கடக்கும்போது அவை தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்பிருக்கிறது. ஆகையால், அந்த விபத்தைத் தடுக்கும் வகையில், ஈரான் தற்போது மாற்று வழிகளையும் ஆலோசனைகளையும் வெளியிட்டுள்ளது. குறிப்பாக, புதிய வரைபடங்களுடன் கூடிய வழிகளை வெளியிட்டுள்ளது. அதைப் பின்பற்றி கப்பல்கள் செல்லுமாறு அது வலியுறுத்தியுள்ளது.
கிட்டத்தட்ட ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்ற ஈரான் - இஸ்ரேல் - அமெரிக்கா இடையேயான போர், தற்போது 2 வார கால போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளப்பட்டு உள்ளது. இதையடுத்து, ஈரானும் ஹார்முஸ் நீரிணையைத் திறந்துள்ளது. அதேநேரத்தில், ஹார்முஸ் ஜலசந்தியைக் கடக்கும் கப்பல்களுக்காக ஈரான் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. போர் நடைபெற்ற சமயத்தில், எதிரி கப்பல்களுக்கு ஈரான் தடை விதித்திருந்தது. அப்போது அந்தக் கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து சென்றால், அவற்றைத் தாக்கும் நோக்கில் ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் கடலில் கண்ணிவெடிகளை வீசியிருப்பதாக எச்சரிக்கை விடுத்திருந்தனர். அவற்றை, ரிமோட் மூலம் வெடிக்க வைப்போம் எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், போர் நிறுத்தத்தை அடுத்து ஹார்முஸ் வழியாக அனைத்துக் கப்பல்களும் செல்ல ஈரான் அனுமதித்துள்ளது. ஆனால், ஈரான் ஏற்கெனவே வீசிய கண்ணிவெடிகள் கடலில் ஆங்காங்கே இருப்பதாகக் கூறப்படுகிறது. அவை எங்கெங்கு கிடக்கின்றன என்பது ஈரானுக்கு மட்டுமே தெரியும் வகையில் உள்ளது.
இந்தச் சூழலில், கப்பல்கள் ஹார்முஸ் நீரிணையைக் கடக்கும்போது அவை தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்பிருக்கிறது. ஆகையால், அந்த விபத்தைத் தடுக்கும் வகையில், ஈரான் தற்போது மாற்று வழிகளையும் ஆலோசனைகளையும் வெளியிட்டுள்ளது. குறிப்பாக, புதிய வரைபடங்களுடன் கூடிய வழிகளை வெளியிட்டுள்ளது. அதைப் பின்பற்றி கப்பல்கள் செல்லுமாறு அது வலியுறுத்தியுள்ளது.
மேலும், ஜலசந்தியைக் கடக்கும்போது தங்கள் படைகளுடன் நெருக்கமாக ஒருங்கிணைந்து செயல்படுமாறு கப்பல்களை இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) கடற்படை வலியுறுத்தி உள்ளது. அதன்படி, ஓமன் கடலில் இருந்து நுழையும் கப்பல்கள், வளைகுடாவிற்குள் செல்வதற்கு முன் லராக் தீவின் வடக்கே செல்ல வேண்டும். வளைகுடாவிலிருந்து வெளியேறும் கப்பல்கள், அபாயகரமான பகுதிகளுடனான தொடர்பைக் குறைக்கும் பொருட்டு, பரிந்துரைக்கப்பட்ட பாதையைப் பின்பற்றி, தீவின் தெற்கே கடந்து ஓமன் கடலை நோக்கித் தொடருமாறு கேட்டுக்கொண்டு உள்ளது.

