\
iran blasphemy case najmeh amini death sentence
Model imageGoogle gemeni

‘என் பெயரை நினைவில் கொள்ளுங்கள்..’ - சிறையில் அழும் அப்பாவி சிறுமி.. மரண தண்டனை விதித்த ஈரான்!

"என் பெயரை நினைவில் கொள்ளுங்கள்" என்ற வாசகம், ஈரானிய அதிகார எல்லைகளைத் தாண்டி, சிறைச்சாலைகளுக்குள் முடக்கப்படும் மனித உரிமைக் குரல்களுக்கான அடையாளமாக மாறியுள்ளது.
Published on: 
Summary

சமூக வலைதளங்களில் மதம் மற்றும் அரசுக்கு எதிரான கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறி, 23 வயது இளம்பெண் ஒருவருக்கு ஈரானிய நீதிமன்றம் மரண தண்டனை விதித்திருப்பது சர்வதேச அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானில் சமூக வலைதளங்கள் மற்றும் இணையம் வாயிலாக மத நம்பிக்கைகள் அல்லது ஆட்சிக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் மீது 'இறைநிந்தனை' (Blasphemy) மற்றும் 'பூமியில் குழப்பத்தை ஏற்படுத்துதல்' (Corruption on Earth) போன்ற கடுமையான சட்டப் பிரிவுகளின்கீழ் மரண தண்டனை வரை விதிக்கப்படுகிறது. அந்த வகையில், நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் நாடு தழுவிய அரசாங்க எதிர்ப்புப் போராட்டங்களின்போது கைது செய்யப்பட்ட 23 வயதான ஈரானியப் பெண் ஒருவருக்கு, இறைநிந்தனை செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

iran
iranreuters

ஈரானின் அடிப்படைவாத ஆட்சிக்கு எதிரான போராட்டங்கள் கொடூரமான அடக்குமுறைக்கு உள்ளானபோது, ​​ஜனவரி 31 அன்று மஷ்ஹத் நகரைச் சேர்ந்த கணக்கியல் மாணவியான நஜ்மே அமினி பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார். ஆகஸ்ட் மாதம் மஷ்ஹத் புரட்சிகர நீதிமன்றத்தின் முன் ஆஜர்படுத்தப்பட்ட அமினி, இறைவனுக்கு எதிரான பகை, நபியை அவமதித்தல் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார். ஈரானின் இஸ்லாமிய தண்டனைச் சட்டத்தின்படி, இக்குற்றங்களுக்கு மரண தண்டை விதிக்கப்படுகிறது. மேலும், மற்றொரு வழக்கில், அமினிக்கு 12 ஆண்டுகள் மற்றும் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

iran blasphemy case najmeh amini death sentence
எல்லைக்குள் நுழையத் தடை.. லிஸ்டில் பாகிஸ்தான், ஈரான் உள்ளிட்ட 31 நாடுகள்.. இஸ்ரேல் போட்ட உத்தரவு!

இந்த நிலையில்தான், கடந்த மாதம் சிறையிலிருந்து வெளியிடப்பட்ட ஓர் ஒலிப்பதிவில், அமினி தனது வழக்கை விசாரிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட அமைப்புகளை வலியுறுத்தி இருந்தார். இந்தத் தீர்ப்பு இறுதியானது அல்ல என்றும், ஈரானின் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்றும் அவர் அதில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அதில், ”இன்று நான் என்னை ஒரு கதாநாயகியாகக் காட்டிக்கொள்ள விரும்பவில்லை. எனக்கு ஒரே ஒரு விஷயம்தான் வேண்டும்: நானே என் குரலாக இருக்க வேண்டும்.

நான் எண்ணற்ற நம்பிக்கைகளும் கனவுகளும் கொண்ட ஓர் அப்பாவி சிறுமி. என்னை இழந்து விடுவோமோ என்ற பயத்தில், ஒவ்வோர் இரவும் தங்கள் இரவை விடியலாக மாற்றும் ஒரு குடும்பம் எனக்கு இருக்கிறது. என் பெயரை நினைவில் கொள்ளுங்கள்; என்னால் மீண்டும் பேச முடியாமல் போகலாம். ஆனால், நான் உயிரோடு இருக்கும்வரை, எனக்கு ஒரே ஒரு நம்பிக்கை உண்டு: தூக்குமேடை என் வாழ்வின் முடிவைக் குறிப்பதற்கு முன், எனது செழிப்பான, சுதந்திரமான ஈரானைக் காண்பேன் என்பதே அது” எனத் தெரியப்படுத்தியதாகச் சொல்லப்படுகிறது.

iran blasphemy case najmeh amini death sentence
ஈரான் போர் | இதுவரை ரூ.3.2 லட்சம் கோடி செலவு.. காலியாகும் அமெரிக்காவின் கஜானா!

இதைத் தொடர்ந்து, அவரது மரண தண்டனையை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், வெளிப்படையான மற்றும் நியாயமான மேல்முறையீட்டு வாய்ப்பை வழங்க வேண்டும் என்றும் உலக நாடுகள் ஈரானிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. மேலும், "என் பெயரை நினைவில் கொள்ளுங்கள்" என்ற வாசகம், ஈரானிய அதிகார எல்லைகளைத் தாண்டி, சிறைச்சாலைகளுக்குள் முடக்கப்படும் மனித உரிமைக் குரல்களுக்கான அடையாளமாக மாறியுள்ளது. இதனால், ஈரானின் சட்டக் கட்டமைப்பு மற்றும் தனிநபர் சுதந்திரம் குறித்த விவாதங்களை உலக அரங்கில் மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், ஓஸ்லோவைச் சேர்ந்த 'ஈரான் மனித உரிமைகள்' (IHRNGO) அமைப்பின் தகவலின்படி, இந்த ஆண்டில் ஈரானில் ஏற்கெனவே 600-க்கும் மேற்பட்ட மரணதண்டனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com