ஈரான் போர் | இதுவரை ரூ.3.2 லட்சம் கோடி செலவு.. காலியாகும் அமெரிக்காவின் கஜானா!
ஈரானுடன் அமெரிக்கா நடத்திவரும் போர் 7ஆவது மாதத்தைக் கடந்துள்ளது. இந்த, 200 நாட்களில் 3 லட்சத்து 20ஆயிரம் கோடி ரூபாயை அமெரிக்கா செலவிட்டுள்ளது. இதில் செயல்பாட்டுச்செலவுகள், எரிபொருள் செலவுகளுடன் ஏராளமான போர் விமானங்கள், ட்ரோன்கள் இழப்பும் அடங்கும். இது, அமெரிக்காவில் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
2026 பிப்ரவரி 28 அன்று தொடங்கிய அமெரிக்க-ஈரான் மோதல் 200 நாட்களைக் கடந்து 7-ஆவது மாதத்தில் அடிஎடுத்து வைத்துள்ளது. அமெரிக்கா இப்போருக்காகத் தினமும் சராசரியாகப் பல்லாயிரம் கோடிகளைச் செலவிட்டு வரும் நிலையில், இதுவரை செலவிடப்பட்ட தொகை சுமார் ₹3.2 லட்சம் கோடியை ($38–40 பில்லியன் டாலர்) கடந்துள்ளது. இதில் செயல்பாட்டுச்செலவுகள், எரிபொருள் செலவுகளுடன் ஏராளமான போர் விமானங்கள், ட்ரோன்கள் இழப்பும் அடங்கும். சவுதி அரேபியா, கத்தார், பஹ்ரைன், குவைத், ஜோர்டான், ஓமன் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் பெரிதும் சேதம் அடைந்துள்ளன. 7 மாதங்களாக நடந்துவரும் போரால் ஆயுதங்கள், வெடிமருந்துகள், படைவீரர்கள் பற்றாக்குறை நிலவுவதும் பென்டகன் அறிக்கையில் வெட்டவெளிச்சமாகி உள்ளது.
இதுதவிர, மோதலின் தீவிரத்தைப் பொறுத்து மேற்கொண்டு மாதத்திற்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும் என்று அமெரிக்க அரசின் பட்ஜெட் அலுவலகம் கூறியுள்ளது. இச்செலவுகள் மறைமுகமாக விலைவாசி உயர்வுக்கு வித்திடும் என்றும் அந்த உயர்வு ஓராண்டுக்கு நீடிக்கக்கூடும் என்றும் அந்த அலுவலகம் கூறியுள்ளது.
அதிபர் டொனால்டு ட்ரம்பும் குடியரசுக்கட்சியினரும் அமெரிக்கக் குடும்பங்களுக்கு உதவ தங்களிடம் பணம் இல்லை என்று கூறிவந்த நிலையில், இந்த பொறுப்பற்ற போருக்காக பில்லியன் கணக்கான டாலர்களை செலவிட்டுள்ளனர் என்று பிரதிநிதிகள் சபையின் வரவு-செலவுத் திட்டக் குழுவைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சிப் பிரதிநிதி பிரெண்டன் பாயில் விமர்சித்துள்ளார். இன்னொரு புறம், போருக்கான செலவு எதிர்பார்ப்பைவிட அதிகரித்துள்ளதால், அமெரிக்க வரி செலுத்துவோரின் நிதி அதிகளவில் ராணுவத்திற்குத் திருப்பப்பட்டு வரவு செலவுத் திட்டத்தில் பெரும் சுமை ஏற்பட்டுள்ளது.
உலகளாவிய கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) ஏற்பட்ட போக்குவரத்து தடங்கல்களால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து பணவீக்கத்தைத் தூண்டியுள்ளது. இதையடுத்து, போரினால் ஏற்படும் நிதி இழப்பு மற்றும் உயிரிழப்புகள் காரணமாகப் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க நாடாளுமன்றத்திலும் சர்வதேச மட்டத்திலும் அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.

