கனடா : பிரதமர் பதவிக்கான போட்டியில் இந்தியர்.. மகுடம் சூடுவாரா?
ரிஷி சுனக், கமலா, லியோ வரத்கர், தருமன் சண்முகரத்னம், முகமது இர்ஃபான் அலி, மகேந்திர சவுத்ரி போன்ற பெயர்கள் இந்திய தன்மை கொண்டவை. ஆனால் இவர்கள் இந்திய வேர்கள் கொண்டவர்கள். வெளிநாடுகளில் தலைமைப்பதவி வகித்தவர்கள், வகித்து வருபவர்கள்.
இந்த வரிசையில் மேலும் ஒருவர் சேர்வாரா என்ற கேள்வி இந்த வாரம் எழுந்துள்ளது. இந்தியாவின் கர்நாடகாவை பூர்விகமாக கொண்ட சந்திரா ஆர்யா கனடா பிரதமர் போட்டியில் களமிறங்கியுள்ளார். லிபரல் கட்சி சார்பில் போட்டியிடுவதற்காக அதிகாரப்பூர்வமாக விண்ணப்பித்துள்ளார் சந்திரன் ஆர்யா. இதன் பின் கனடா நாடாளுமன்றத்தில் தனது தாய்மொழியான கன்னடத்தில் உணர்ச்சி மிகு உரை ஒன்றையும் ஆற்றினார் ஆர்யன் சந்திரா. பிரபல எழுத்தாளர் கூவேம்பு, நடிகர் ராஜ்குமார் பெயரையும் அப்போது மேற்கோள் காட்டி பேசினார்.
ஒட்டவா மாகாணத்தில் நெப்பியான் என்ற தொகுதியில் மக்கள் பிரதிநிதியாக உள்ளார் இவர். உலகின் முக்கிய பதவிகளில் ஒன்றுக்கு தன் மகன் போட்டியிடுவார் என்பதை கனவில் கூட நினைத்துப்பார்க்கவில்லை என்கிறார் சந்திரன் ஆர்யாவின் தந்தை கோவிந்தையா. கனடா நாடாளுமன்றத்தில் இந்திய வம்சாவளி உறுப்பினர்கள் பலர் இருந்த போதும் குறுகிய காலத்தில் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளார் சந்திரன் ஆர்யா. இந்தியாவுடனான கனடா நாட்டின் உறவுகள் உரசல் மிக்கதாக உள்ள நிலையில் இந்திய வம்சாவளியினர் ஒருவரே அந்நாட்டின் அதிபர் பதவியை நெருங்குவது வியப்புக்குரிய ஒன்று.
கனடாவில் இந்தியர்கள் மக்கள் தொகை கணிசமாக உள்ளது சந்திரனுக்கு சாதகமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. தமிழகத்தை பூர்விகமாக கொண்ட கனடாவின் போக்குவரத்துத்துறை அமைச்சர் அனிதா ஆனந்தும் பிரதமர் பதவிக்கு போட்டியிட முடிவு செய்து பின்னர் பின்வாங்கிவிட்டார். பிரதமர் என்ற உயர் பதவிக்கான போட்டியில் வெற்றி தோல்வி என்பதை விட அந்த உயர் பதவிக்கு போட்டியிடுமளவுக்கு இந்தியர்கள் உயர்ந்துள்ளதை எதேச்சையான நிகழ்வாக பார்க்க முடியாது. இதை அவர்களின் உழைப்புக்கும் உண்மைத்தன்மைக்கும் கிடைத்த, கிடைக்கும் பரிசாகவே பார்க்கவேண்டியுள்ளது.
உலகெங்கும் 15 நாடுகளில் அமைச்சர்கள் அல்லது பிரதமர்கள் அல்லது அதிபர்கள் என்ற உயர்ந்த நிலையில் சுமார் 200 இந்திய வம்சாவளியினர் உள்ளதாக கூறுகிறது 3 ஆண்டுகளுக்கு முன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு. ஒரு காலத்தில் காலனி நாடாக இந்தியா இன்று பல நாடுகளுக்கு தலைவர்களை தந்து வருவதை காலத்தின் அழகிய முரணாகவே பார்க்க வேண்டியுள்ளது.