அமெரிக்கா | 47ஆவது அதிபராக பதவியேற்றார் டொனால்டு ட்ரம்ப்!
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்ப்வும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான கமலா ஹாரிசும் போட்டியிட்டனர். இருவருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவிய நிலையில், டொனால்டு ட்ரம்ப் மீண்டும் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து ஜனவரி 20ஆம் தேதி (இன்று) ட்ரம்ப் பதவியேற்பதாகத் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவருடைய பதவியேற்பு விழா பணிகள் வெள்ளை மாளிகையில் வேகம்பிடித்தன. இந்த நிலையில், பதவியேற்பு விழா தலைநகர் வாஷிங்டனில் இன்று நடைபெற்றது. கடுமையான குளிர் காரணமாக வெள்ளை மாளிகை கட்டடத்தின் உள் அரங்கில் நிகழ்ச்சி நடைபெற்றது. 1985ஆம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா உள் அரங்கில் நடப்பது இதுவே முதல்முறையாகும். ட்ரம்பின் பதவியேற்பு விழாவில் உலக நாட்டுத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர். மேலும், அமெரிக்க முன்னாள் அதிபர்கள் பராக ஒபாமா, பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ், தற்போதைய அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டார். மேலும் தொழிலதிபர்கள் எலான் மஸ்க், சுந்தர் பிச்சை உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.
பதவியேற்பு விழாவை முன்னிட்டு வெள்ளை மாளிகைக்கு வந்த டொனால்டு ட்ரம்புவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிபர் ஜோ பைடன் அவரை வரவேற்றார். பின்னர் இருவரும் சுமார் 35 நிமிடங்கள் தனிமையில் சந்தித்துப் பேசினர். அங்கிருந்து பதவியேற்பு விழா நடைபெற உள்ள கேப்பிட்டலுக்கு புறப்பட்டனர். ட்ரம்ப்க்கு முன்னதாக, அமெரிக்க துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜே.டி.வான்ஸ் பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து ட்ரம்ப்வும் அமெரிக்க அதிபராகப் பதவியேற்றார். அப்போது ட்ரம்ப்விற்கு பீரங்கிக் குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. இதன்மூலம் அமெரிக்காவின் இரண்டாவது அதிபர் ஆன பட்டியலில் ட்ரம்புவும் இடம்பிடித்துள்ளார். ட்ரம்பின் இந்தப் பதவியேற்பு விழாவுக்கு 1,700 கோடி ரூபாய் செலவில் தடபுடலாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.