தடை விதித்த பாக்.. இன்னொரு எதிரியிடம் பேச்சுவார்த்தை.. ரகசியமாய் காய் நகர்த்தும் இந்தியா!
இந்தியாவுடனான எல்லை மோதல்கள் காரணமாக பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடியுள்ள நிலையில், சீனாவின் சின்ஜியாங் மாகாண வான்வழியைப் பயன்படுத்துவது குறித்து இந்தியாவும் சீனாவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. சீனாவுக்குச் சொந்தமான சின்ஜியாங் மாகாணத்தில் உள்ள ஹோட்டன் பகுதிக்கு மேலேயுள்ள வான்வழிப் பாதையைப் பயன்படுத்துவது குறித்து இந்தியா பரிசீலித்து வருகிறது.
இந்தியாவுடனான எல்லை மோதல்கள் காரணமாக பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடியுள்ளது. காஷ்மீர் விவகாரம், வர்த்தக உறவுகள் முறிவு அல்லது நதிநீர் உடன்படிக்கைகள் தொடர்பான கருத்து வேறுபாடுகள் எழும்போது, இந்திய அரசுக்கு எதிராக, பாகிஸ்தான் தனது வான்வெளித் தடையை ஆயுதமாகப் பயன்படுத்தி வருகிறது. இதற்கிடையே, கடந்த ஆண்டு நடைபெற்ற பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இதை பாகிஸ்தான் நீட்டித்தது. தற்போதும் அது தொடர்கிறது. பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்த முடியாத நிலையில், இந்தியாவிலிருந்து ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்குச் செல்லும் விமானங்கள் அரபிக்கடல் வழியாகவோ அல்லது பிற நீண்ட பாதைகளிலோ சுற்றிச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
இதனால், பயண நேரம் அதிகரிப்பதோடு, எரிபொருள் விரயமும் செயல்பாட்டுச் செலவுகளும் கணிசமாக உயர்வதுடன் இந்திய விமானத் துறைக்குப் பெரும் நிதிச் சுமையும் ஏற்படுகிறது.
இதற்கிடையே, பாகிஸ்தான் தனது வான்வெளியைப் பயன்படுத்த இந்திய விமானங்களுக்குத் தடை விதித்துள்ளதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் குறைக்க, சீனாவின் சின்ஜியாங் மாகாண வான்வழியைப் பயன்படுத்துவது குறித்து இந்தியாவும் சீனாவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. பாகிஸ்தான் வான்வெளியைத் தவிர்க்கும் வகையில், சீனாவுக்குச் சொந்தமான சின்ஜியாங் மாகாணத்தில் உள்ள ஹோட்டன் பகுதிக்கு மேலேயுள்ள வான்வழிப் பாதையைப் பயன்படுத்துவது குறித்து இந்தியா பரிசீலித்து வருகிறது.
இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சகம் சீன அரசுடன் ஒரு வருடமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. ஒருவேளை, இந்த வான்வழிப் பாதை பயன்பாட்டிற்கு வரும்பட்சத்தில், நீண்டதூர சர்வதேச விமானங்களின் பயண நேரமும் விமான நிறுவனங்களுக்கான செயல்பாட்டுச் செலவுகளும் பெருமளவு குறையும். தவிர, பாகிஸ்தானின் வான்வெளித் தடையால் இந்திய விமானப் போக்குவரத்துத் துறை சந்திக்கும் முடக்கத்திற்கு ஒரு மாற்றுத் தீர்வு கிடைக்கும்.

