US-க்கு தண்ணி காட்டிய சீனா.. 1,300 ஷிப்மென்ட் முழுக்க ஆயுதங்கள்.. அசுரபலம் பெற்ற ஈரான்?
செய்தியாளர் - கார்த்திகேயன்
அணு ஆயுதச் சோதனையில் ஈடுபட்டதாக கூறி, ஈரான் மீது, அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து, கடந்த பிப்ரவரி மாதம் முதல் கூட்டுத் தாக்குதலை நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக, அண்டை நாடுகளில் உள்ள அமெரிக்காவின் ராணுவத் தளங்களை தாக்கியதோடு, ஹார்முஸ் நீரிணையையும் மூடி, பெரும் அதிர்ச்சியை தந்தது ஈரான். இவ்வாறு இரு நாடுகளும், மாறிமாறி தாக்குதல் நடத்தியதால், இரு தரப்பிலும் பெரும் போர்ப் பதற்றம் நீடித்து வந்தது. அமெரிக்க மாதிரியான பெரும் வல்லரசு நாட்டையே எதிர்க்கும் அளவுக்கு, ஈரான் ராணுவ பலம் இருந்தது பலருக்கும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது.
இப்படியான சூழ்நிலையில், ஈரானின் இந்த அசுர பலத்திற்கு காரணமாக சீனா இருந்துள்ளதற்கான ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. அதாவது, ஈரானுக்கு யாரும் உதவக் கூடாது என்பதற்காக, அமெரிக்கா பெரும் பொருளாதாரத் தடைகளை விதித்திருந்த போதிலும் அந்த தடைகளை மீறி, 2026-ஆம் ஆண்டின் முற்பகுதியில், 1,300 ஷிப்மென்ட்களில், ஈரானுக்கு சீனா ஆயுதங்களை அனுப்பி வைத்திருப்பதாக, ஆங்கில ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
ஈரானின் பாதுகாப்புத்துறையை வலுப்படுத்தும் நோக்கில் இந்த ஆயுதங்கள் அனுப்பப்பட்டிருப்பதாகவும், ஈரானிய சுங்கத்துறை பதிவுகளை வைத்து, இது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அந்த ஆங்கில ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ட்ரோன்கள் மற்றும் பிற ஆயுதங்களுக்கு பயன்படுத்தக்கூடிய உதிரிபாகங்கள் இந்த ஏற்றுமதிகளில் அடங்கும் என்றும், கூறப்படுகிறது. மொத்தமாக, ஜனவரி 2025 முதல் ஜூன் 2026 வரையிலான காலக்கட்டத்தில், ஜிபிஎஸ் சாதனங்கள், மோட்டார்கள் மற்றும் விமான இயந்திர பாகங்கள் போன்றவற்றையும், சீனா அனுப்பியதாக, ஊடக செய்திகள் தகவல் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே 60 நாள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்ட அதே நாளான ஜூன் 17 அன்றும், ஈரானை ஒரு ஷிப்மெண்ட் அடைந்திருப்பதாக, கூறப்படுகிறது. மேலும், இரண்டு நாட்களுக்குப் பிறகு, ட்ரோன்களில் பயன்படுத்தக்கூடிய 6 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள பாகங்களைச் சுமந்து கொண்டு டஜன் கணக்கான ஏற்றுமதிகள் வந்து சேர்ந்தன என்றும் சொல்லப்படுகிறது. ஐக்கிய நாடு சபை கூட்டத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே வார்த்தை மோதல் நடைபெற்றிருக்கும் சூழலில் அமெரிக்காவில் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு சிகப்பு கம்பள வரவேற்பு கொடுக்கப்பட்டிருக்கும் வேளையில் இத்தகைய தகவல் வெளியாகி இருப்பது சர்வதேச அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

