ட்ரம்ப்பின் 20 மாத ஆட்சியில் கதிகலங்கிய உலகம்.. கடிவாளம் போடுவார்களா அமெரிக்கர்கள்?
ட்ரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி ஆட்சியில் அமர்ந்த உடனே சரமாரியாக பிற நாட்டுப் பொருட்களுக்கு 25.. 50.. 100.. 200.. 500 என இறக்குமதி வரியை மனம்போன போக்கில் உயர்த்தினார். இதனால் இந்தியா, சீனா உட்பட பல நாடுகள் பாதிக்கப்பட்டன. ட்ரம்ப் நடத்திய வரி யுத்தம் தொழிற்துறையினரை திக்குத்தெரியாத காட்டில் தள்ளியதில் இருந்து உலக பொருட்கள் விநியோகச் சங்கிலியை பாதிப்பது வரை பொருளாதார நிலநடுக்கத்தையே ஏற்படுத்திவிட்டது. இன்னொருபுறம் பல ஏழை நாடுகளுக்கு யுஎஸ் எய்டு என்ற பெயரில் அமெரிக்கா காலங்காலமாக அளித்த உதவியையும் ட்ரம்ப் நிறுத்திவிட்டார். இதனால் ஆப்பிரிக்க நாடுகளில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு, தொற்றுநோய்த் தடுப்பூசிகள் கிடைக்காமல் போயுள்ளது.
அமெரிக்காவின் உதவிகள் நிறுத்தத்தால் ஆண்டுதோறும் உலகளவில் கூடுதலாக 10 லட்சம் இறப்புகள் நேரும் எனக் கூறியது சென்டர் ஃபார் குளோபல் டெவலப்மென்ட் என்ற அமைப்பு. பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியதால் காலநிலை மாற்ற பாதிப்புகளைத் தடுக்கும் உலகளாவிய நடவடிக்கைகளும் மந்தமடைந்துள்ளன. கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக்குவோம், வெனிசுலா 51ஆவது மாகாணமாகிவிடும்... கிரீன்லாந்தையும் சேர்த்துக்கொள்வோம், காஸாவை வசப்படுத்தி அழகிய சுற்றுலா பூமியாக்குவோம் என்பது போன்ற பேச்சுகளும் உலகையே திகைக்க வைத்தன.
ட்ரம்ப் தந்த நெருக்கடியால் பிரான்ஸ், இத்தாலி போன்ற நேட்டோ நாடுகள் ராணுவத்துக்கு ஒதுக்கிய தொகை வரலாறு காணாத அளவு அதிகரித்தது. இதனால் மக்கள் நலத்திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறைந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் சாலைகளில் இறங்கி போராட ஆரம்பித்துவிட்டனர். அங்கு நடந்த தீ வைப்பு... கல்வீச்சு... கொள்ளைச் சம்பவங்கள் போன்றவை உலகையே அதிரவைத்தன. பிரேசில் போன்ற நாடுகளில் உள்நாட்டு விவகாரங்களில் ட்ரம்ப்பின் தலையீடு நேரடியாகவே இருந்தது. வெனிசுலாவில் தலைநகருக்குள் புகுந்த அமெரிக்க படைகள் அதிபரை சில மணி நேரங்களில் கடத்திச்சென்று சிறை வைத்தன.
ஈரான் அணுஆயுத வலிமையை பெறுவதைத் தடுக்கிறேன் என ட்ரம்ப் ஆரம்பித்த போர் 9ஆவது மாதத்தை நெருங்குகிறது. இதனால் பெட்ரோலிய பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு விலையும் உயர்ந்து பல நாடுகள் பரிதவிக்கின்றன. எங்கோ யாரோ எதற்காகவோ நடத்தும் போர் நாம் குடிக்கும் டீ விலையிலிருந்து சமையல் எரிவாயு சிலிண்டர் வரை தாக்கம் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில்தான் ட்ரம்ப்பின் செயல்பாடுகளுக்கு அமெரிக்கர்கள் கடிவாளம் போடுவார்களா என உலகமே எதிர்பார்க்கிறது

