6 லட்சம் பேரல்.. இந்தியா வர வேண்டிய எண்ணெய் கப்பல்.. திசை மாறி சீனா நோக்கி பயணம்!
ஈரானிலிருந்து இந்தியாவை நோக்கிப் புறப்பட்ட கச்சா எண்ணெய் கப்பல், நடுவழியில் தனது இலக்கைச் சீனாவுக்கு மாற்றியுள்ளது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதல்களால் அப்பகுதி முழுவதும் போர்ப் பதற்றம் நிலவுகிறது. இன்னொரு புறம் இந்தப் போர்ச் சூழலால் உலகளவில் எரிபொருள் தேவைக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. இதற்குக் காரணம், ஹார்முஸ் நீரிணைப் பகுதியை ஈரான் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுதான். இந்தப் பாதை வழியாகத்தான் உலகின் கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் சுமார் 20% போக்குவரத்து நடைபெறுகிறது. இந்த நிலையில், ஈரானிலிருந்து இந்தியாவை நோக்கிப் புறப்பட்ட கச்சா எண்ணெய் கப்பல், நடுவழியில் தனது இலக்கைச் சீனாவுக்கு மாற்றியுள்ளது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
6 லட்சம் பீப்பாய் ஈரானிய எண்ணெய்யை ஏற்றி இந்தியாவுக்கு வரவிருந்த, ஈஸ்வதினி கொடியை ஏந்திய 'பிங் ஷுன்' என்ற கச்சா எண்ணெய் கப்பல், குஜராத்தின் வதினார் துறைமுகம் அருகே சீனாவை நோக்கித் திசைமாறிச் சென்றுள்ளது. அந்த கப்பல், சீனாவின் டோங்கியிங் துறைமுகத்திற்குச் செல்ல சமிக்ஞை அனுப்பப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த வாரத் தொடக்கத்தில், அந்த எண்ணெய்க் கப்பல் குஜராத்தில் உள்ள வதினார் மாவட்டத்திற்கு வருவதாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஈரானிய எண்ணெய் இறக்குமதியில் சர்வதேசக் கட்டுப்பாடுகள் நிலவும் சூழலில், கப்பலின் இந்த திடீர் திசைமாற்றம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பணம் செலுத்துதல் தொடர்பான பிரச்னைகளுடன் இந்த வழிமுறை மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும், பெரும்பாலான வணிகக் கப்பல்களுக்கான கட்டாயக் கண்காணிப்பு அமைப்பான, கப்பலின் தானியங்கி அடையாள அமைப்பில் (AIS) காட்டப்படும் சேருமிடம் உறுதியானது அல்ல, மேலும் அது பயணத்தின் எந்தக் கட்டத்திலும் மாற்றப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம், சீனாவிற்கு அப்பால் உள்ள இடங்களுக்கு ஈரானிய கச்சா எண்ணெய் செல்வதைத் தீர்மானிப்பதில், தளவாடக் காரணிகளைப் போலவே வர்த்தக நிலைமைகளும் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகின்றன என்பதை இந்த நிகழ்வு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
ஒரு காலத்தில் இந்தியாவின் மொத்த இறக்குமதியில் ஈரானிய கச்சா எண்ணெய் 11.5 சதவீதமாக இருந்தது. 2018-ல் அந்நாடு ஒருநாளைக்கு 518,000 பீப்பாய்களை இறக்குமதி செய்தது. அமெரிக்காவின் தடைக்குப் பிறகு, இது வெகுவாகக் குறைந்து, ஒருகட்டத்தில் இறக்குமதியே நிறுத்தப்பட்டது. கடுமையான அமெரிக்கத் தடைகள் அமலுக்கு வந்ததையடுத்து, 2019-இல் கொள்முதல் நிறுத்தப்பட்ட பிறகு, ஈரானிய கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்வது இதுவே முதல் முறையாகும். மத்திய கிழக்கில் நிலவும் போருக்கு மத்தியில், எண்ணெய் விலைகளைக் குறைக்கும் முயற்சியாக, கடந்த மாதம் அமெரிக்கா கடல் வழியாக ஈரானிய எண்ணெயைக் கொள்முதல் செய்ய 30 நாள் விலக்கு அளித்தது. அதன்படியே, உலக நாடுகள் எண்ணெய் கொள்முதலைச் செய்து வருகின்றன.

