சீனா | உயிரைக் காப்பாற்றிய குதிரைக்கு நேர்ந்த சோகம்.. சிலை வைக்கும் நகர நிர்வாகம்!
தாங்கள் பிரியமாய் வளர்த்த உயிரினங்கள் தம்மைவிட்டுப் பிரியும்போது, அவர்கள் பெரும் மனத் துயரத்திற்கு ஆளாகின்றனர். தவிர, அதன் நினைவைப் போற்றும் வகையில் சிலை வைத்து வணங்குகின்றனர். அந்த வகையில், சீனாவைச் சேர்ந்த நபர் ஒருவரைக் காப்பாற்றி இறந்துபோன குதிரைக்கு சிலை வைக்கப்பட உள்ளது.
சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள சியான்டாவோ நகரைச் சேர்ந்தவர், யிலிபாய். இவர், பைலாங் எனப் பெயரிடப்பட்ட குதிரை ஒன்றை வளர்த்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 4ஆம் தேதி, யிலிபாயும் பைலாங்கும் அப்பகுதியில் பயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது, ஆற்றின் பாலத்தில் இருந்து ஒருவர் ஆற்றுக்குள் தவறி விழுவதைக் கண்டனர். ஆற்றங்கரையில் நின்றிருந்த அந்த நபரின் மகள் உதவிக்காகக் கூச்சலிட்டாள். உடனே சற்றும் தயக்கமின்றி குதிரையுடன் ஆற்றுக்குள் சென்றார், யிலிபாய். ஆற்றுக்குள் ஆபத்து இருந்தபோதிலும், பைலாங் 40 மீட்டருக்கு மேல் தண்ணீரில் நீந்தியது. இறுதியில், யிலிபாய் ஒரு கையில் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டு, மற்றொரு கையில் நீரில் மூழ்கிய நபரை இழுத்து காப்பாற்றினார்.
இந்த வியத்தகு மீட்பு சம்பவம், ஒரு வைரல் வீடியோவில் பதிவாகி இருந்தது. துணிச்சலான மீட்பு சம்பவம் நடந்த ஆறு நாட்களுக்குப் பிறகு, பைலாங் கடுமையாக நோய்வாய்ப்பட்டது. கடுமையான காய்ச்சலில் அவதிப்பட்ட குதிரைக்கு சிகிச்சை அளிக்க கால்நடை மருத்துவர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டனர். எனினும் சிகிச்சை பலனின்றி குதிரை பிப்ரவரி 11 அன்று இறந்தது.
குதிரை இறந்த துக்கம் தாளாமல் பேசிய யில்பாய், “பைலாங்கும் நானும் ஒன்றாக பல விஷயங்களை அனுபவித்திருக்கிறோம். தயவுசெய்து என்முன் அதைப் பற்றி தவறாகப் பேசாதீர்கள். அதைப் பற்றி அனைத்து நினைவுகளும் என்னை அழவைக்கும். பைலாங் புத்திசாலி. என் குதிரையும் நானும் ஒரு குடும்பம்போல. நான் அதை நம்பினேன், அதுவும் என்னை நம்பியது. பைலாங்கின் மரபை மதிக்கும் வகையிலும், அதன் துணிச்சலை அங்கீகரிக்கும் விதமாக, சியான்டாவோ நகர நிர்வாகம், ஆற்றின் அருகே ஒரு சிலையை அமைக்கும் திட்டத்தை அறிவித்துள்ளது” எனத் தெரிவித்தார்.