காஸாவை ஆக்கிரமிக்கும் அமெரிக்கா | ட்ரம்பின் பேச்சுக்கு ஹமாஸ் எதிர்வினை!
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றுள்ளார். இவர், பதவியேற்ற நாள் முதல் பல்வேறு உத்தரவுகளில் கையெழுத்திட்டு வருகிறார். தவிர கனடா, பனாமா, கிரீன்லாந்து உள்ளிட்ட நாடுகளை வாங்குவது குறித்தும் அவ்வப்போது பேசி வருகிறார். சமீபத்தில் காஸாவை அமெரிக்கா கைப்பற்றும் எனப் பேசியிருந்ததும் விவாதமானது. அப்போது அவர், “காஸா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள் வேறு இடங்களில் மீள்குடியேற்றப்படுவார்கள். காஸா பகுதியில் வாழ முடியாது. பாலஸ்தீனியர்கள் வேறு இடத்தில் குடியேறிய பிறகு, போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸாவை அமெரிக்கா கைப்பற்றும்” எனத் தெரிவித்திருந்தார். பல தசாப்தங்களாக இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் தொடரும் நிலையில், காஸா தொடர்பான ட்ரம்பின் இந்த அறிவிப்பு, பாலஸ்தீன ஆதரவாளர்களுக்கு மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக அமைந்துள்ளது. இனவெறி தொடர்பாக ட்ரம்ப் கருத்தை, எகிப்து, ஜோர்டான், சவூதி அரேபியா உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகள் கண்டனம் தெரிவித்திருந்தன.
இந்த நிலையில் காஸாவை அமெரிக்கா வாங்க உள்ளதாக ட்ரம்ப் தெரித்துள்ளார். அவர், “காஸாவை வாங்குவதற்கும் சொந்தமாக்குவதற்கும் நான் உறுதிபூண்டுள்ளேன். அதை ஒரு ரியல் எஸ்டேட் தளம் என்று எண்ணிக்கொள்ளுங்கள். எனவே அதை மாற்றியமைக்க வேண்டும். அந்த பொறுப்பை மத்திய கிழக்கில் உள்ள பிற நாடுகளுக்கு நாங்கள் கொடுக்கலாம். எங்கள் அனுமதியுடன்தான் செய்லபட முடியும். காஸாவை சொந்தமாக்குவதற்கும், அதை எடுத்துக்கொள்வதற்கும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். ஹமாஸ் மீண்டும் தலைதூக்காமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் . மக்கள் மீண்டும் உள்ளே செல்ல காஸாவில் எதுவும் இல்லை. அந்த இடம் ஓர் இடிபாடு தளம். மீதமுள்ளவையும் இடிக்கப்படும். காஸா மக்கள் இன்னும் அங்கு திரும்ப விரும்பவில்லை. அவர்கள் காஸாவுக்குத் திரும்புவதற்கு ஒரே காரணம் அவர்களிடம் மாற்று வழி இல்லை என்பதுதான். அவர்களுக்கு பாதுகாப்பான பகுதியில் ஒரு வீட்டைக் கொடுக்க முடிந்தால் அவர்கள் திரும்ப விரும்பமாட்டார்கள்” எனத் தெரிவித்திருந்தார்.
ட்ரம்பின் இந்தக் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஹமாஸ் அமைப்பு, ”காஸா வாங்கவும், விற்பனை செய்வதற்குமான சொத்து கிடையாது, அது தங்களிடம் இருந்து பறிக்கப்பட்ட பாலஸ்தீன நிலத்தின் ஒருங்கிணைந்த பகுதி” எனக் குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து ஹமாஸ் அரசியல் பணியகத்தின் உறுப்பினர் இஸ்ஸாத் அல்-ரிஷேக் தெரிவித்துள்ள அறிக்கையில், "ஒரு ரியல் எஸ்டேட் வியாபாரியின் மனநிலையுடன் பாலஸ்தீனப் பிரச்னையைக் கையாள்வது தோல்விக்கான செய்முறையாகும். எங்கள் பாலஸ்தீன மக்கள் அனைத்து இடப்பெயர்ச்சி மற்றும் நாடுகடத்தல் திட்டங்களையும் முறியடிப்பார்கள். காஸா அதன் மக்களுக்கு சொந்தமானது” எனத் தெர்வித்துள்ளார்.
காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர், 2023இல் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 252 பேர் பணயக் கைதிகளாகவும் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 15 மாதங்களாக இஸ்ரேல் நடத்திய இந்தப் போரில், காஸாவில் 17,400-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்பட 47,700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 20.3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காஸாவில் இருந்து புலம்பெயர்ந்தனர். காஸாவில் உள்ள 4,36,000 (92%) கட்டடங்கள் இஸ்ரேலிய தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளன; 546 பள்ளிகளில் 496 பள்ளிகள் சேதமடைந்துள்ளன. மேலும், 36 மருத்துவமனைகளில் 17 மட்டுமே செயல்படுகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.