காஸாவை ஆக்கிரமிக்கும் அமெரிக்கா.. அதிருப்தியில் மத்திய கிழக்கு நாடுகள்!
பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கு இடையேயான போர், பல தசாப்தங்களாக நடைபெற்று வருகிறது. இதில் காஸாவில் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த போரை முடிவுக்குக் கொண்டுவர இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையே ஒப்பந்தம் ஏற்கப்பட்டது. அதன்படி, கடந்த ஜனவரி 19ஆம் தேதி முதல் போர்நிறுத்தம் அமலுக்கு வந்தது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். மேலும் தொடர் போர் நிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசினார்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “காஸா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்கள் வேறு இடங்களில் மீள்குடியேற்றப்படுவார்கள். காஸா முனையில் உள்ள பாலஸ்தீனியர்கள் எகிப்து மற்றும் ஜோர்டான் போன்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்படுவர். காஸா பகுதியில் வாழ முடியாது. அவர்களுக்கு இன்னொரு இடம் தேவை என்று நினைக்கிறேன். பாலஸ்தீனியர்கள் வேறு இடத்தில் குடியேறிய பிறகு, போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸாவை அமெரிக்கா கைப்பற்றும். அப்பகுதியில் பாதுகாப்புப் பணிகளில் அமெரிக்க ராணுவம் ஈடுபடுத்தப்படும். காஸாவில் உள்ள வெடிக்காத குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்களும் அகற்றப்படும்; சிதைந்த கட்டடங்கள் தரைமட்டமாக்கப்படும். போரினால் பாதிக்கப்பட்ட காஸா பகுதியை அமெரிக்காவே சொந்தமாக்கி, அப்பகுதி மக்களுக்கான வேலைவாய்ப்பு, வீட்டுவசதி உள்ளிட்ட பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களைச் செய்யும். காஸாவில் குண்டுவீசி அழிக்கப்பட்ட கட்டடங்களின் இடுபாடுகளை அகற்றுவதும், ஆபத்தான வெடிக்காத குண்டுகள் மற்றும் பிற ஆயுதங்களை அகற்றுவதும் வாஷிங்டன் பொறுப்பு. அமெரிக்கா அமைதியை விரும்புவதாகவும், இஸ்ரேல், காஸா, சவூதி அரேபியா என மத்திய கிழக்கில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் தான் செல்வேன்” என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்.
பல தசாப்தங்களாக இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் தொடரும் நிலையில், காஸா தொடர்பான ட்ரம்பின் இந்த அறிவிப்பு, பாலஸ்தீன ஆதரவாளர்களுக்கு மிகவும் அதிர்ச்சி அளிக்கக்கூடியதாக அமைந்துள்ளது. ட்ரம்பின் இந்த அறிவிப்புக்கு சவூதி அரேபியா அதிருப்தியைத் தெரிவித்துள்ளது. ”பாலஸ்தீனத்தில் சுதந்திரமான அரசை ஏற்படுத்துவதில் சவூதி அரேபியாவின் நிலைப்பாடு உறுதியானது. அதனை யாரும் மாற்ற முடியாது என்பதை வெளியுறவு அமைச்சகம் உறுதிப்படுத்துகிறது. கிழக்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்டு சுதந்திர பாலஸ்தீன நாட்டை உருவாக்க சவூதி அரேபியா தனது இடைவிடாத முயற்சிகளை தொடரும். இதனை ஏற்படுத்தாமல் இஸ்ரேலுடன் தூதரக உறவுகளை சவூதி அரேபியா ஏற்படுத்தாது” என அது தெரிவித்துள்ளது.
அதேபோல், ட்ரம்பின் இனவெறி கருத்துகளை பாலஸ்தீனிய இஸ்லாமிய ஜிஹாத் குழுவும் கண்டித்துள்ளது. ”பாலஸ்தீனியர்களை அவர்களின் பிரதேசங்களிலிருந்து வெளியேற்றும் எந்தவொரு திட்டத்திற்கும் எதிராகப் போராட இருக்கிறோம்” என அது எச்சரித்துள்ளது. மேலும், எகிப்தின் வெளியுறவுத் துறை அமைச்சரும் பாலஸ்தீன பிரதமரும் காஸாவை, அதன் பாலஸ்தீன மக்களை வெளியேற்றாமல் மீண்டும் கட்டியெழுப்ப அழைப்பு விடுத்துள்ளனர்.
துருக்கி வெளியுறவுத் துறை அமைச்சர் ஹக்கன் ஃபிடன், ”காஸா பகுதி குறித்த அதிபர் டொனால்டு ட்ரம்பின் கருத்துகள் ஏற்றுக்கொள்ள முடியாதவை” எனத் தெரிவித்துள்ள அவர், “பாலஸ்தீனியர்கள் தங்கள் நிலங்களிலிருந்து கடந்த காலங்களில் இடம்பெயர்ந்ததும், அந்தப் பகுதிகளில் இஸ்ரேலியர்கள் குடியேறியதும் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதலுக்கு மூல காரணம்” என அவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர், ”ஹமாஸால் பிடிக்கப்பட்ட அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளையும் விடுவித்ததைத் தொடர்ந்து, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு காசா மீதான தாக்குதல்களை மீண்டும் தொடங்கக்கூடும்“ என எச்சரித்துள்ளார். அதேபோல் சீனாவும் ஹவுதி கிளர்ச்சி அமைப்பும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதேநேரத்தில், ட்ரம்பின் இந்த அறிவிப்பு இஸ்ரேல் பிரதமர், அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ, லூசியானாவின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் மைக் ஜான் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர், 2023இல் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 252 பேர் பணயக் கைதிகளாகவும் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 15 மாதங்களாக இஸ்ரேல் நடத்திய இந்தப் போரில், காஸாவில் 17,400-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்பட 47,700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும், 20.3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் காஸாவில் இருந்து புலம்பெயர்ந்தனர். காஸாவில் உள்ள 4,36,000 (92%) கட்டடங்கள் இஸ்ரேலிய தாக்குதலில் அழிக்கப்பட்டுள்ளன; 546 பள்ளிகளில் 496 பள்ளிகள் சேதமடைந்துள்ளன. மேலும், 36 மருத்துவமனைகளில் 17 மட்டுமே செயல்படுகின்றன என தகவல்கள் தெரிவிக்கின்றன.