குறைந்த செலவு.. 4 மடங்கு வேகம்.. புதிய 'Gemini 3.5 flash'!
கூகுள் நிறுவனம், ஜெமினி 3.5 ஃபிளாஷ் என்ற புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது முந்தைய மாடல்களைவிட நான்கு மடங்கு வேகமாகவும், பாதியளவு குறைந்த செலவிலும் இயங்கும். இதன் மூலம் கூகுள் தேடுபொறி, யூடியூப், இமெயில் போன்றவற்றில் பயனர்களின் வேலைகளை இந்த ஏஐ எளிமைப்படுத்தும். இதனால் பெரிய நிறுவனங்கள் ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலருக்கும் மேல் சேமிக்க முடியும் என்று கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
ஆந்த்ரோபிக் மற்றும் ஓபன் ஏஐக்கு போட்டியாக ஏஐ துறையில் தடம்பதிக்க கூகுள் தீவிர முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், இது கோடிங் மற்றும் செயற்கை நுண்ணறிவு முகவர்களுக்கான மிக வலிமையான மாதிரி என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.
நிறுவனத்தின் வருடாந்திர கூகுள் I/O டெவலப்பர் மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த மாதிரி, தன்னிச்சையாக கோடிங் செயல்முறைகளைச் செயல்படுத்தவும், ஆராய்ச்சித் திட்டங்களை நிர்வகிக்கவும், மேலும் உள்சோதனைகளில், ஓர் இயக்க முறைமையை முற்றிலும் புதிதாக உருவாக்கவும் திறன் கொண்டது.
இது செயற்கை நுண்ணறிவை ஓர் உரையாடல் கருவியாக முன்வைப்பதிலிருந்து, அதை ஒரு முகவர் கருவியாக முன்வைக்கும் நிலைக்கு கூகுள் மாறியிருப்பதைக் குறிக்கிறது. இது வெறும் கேள்விகளுக்குப் பதிலளிப்பது மட்டுமல்லாமல், குறைந்தபட்ச மனித உள்ளீட்டுடன் உண்மையான பணிகளைத் திட்டமிட்டு, உருவாக்கி, மீண்டும் மீண்டும் செம்மைப்படுத்துகிறது என்றும் கூறப்படுகிறது.

