இஸ்ரேல் தொடர் தாக்குதல் |ஒரேநாளில் 15 பேர் பலி.. காஸாவில் பட்டினியால் அதிகரிக்கும் மரணங்கள்!
இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னை என்பது பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. இந்த நிலையில், காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர், 2023இல் இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 252 பேர் பணயக் கைதிகளாகவும் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இடையில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு, இரு நாடுகளும் பிணைக்கைதிகளை பரிமாறிக் கொண்டன. எனினும், இன்றுவரை அங்கு போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடர்ந்து நடைபெற்று வரும் போரில், இதுவரையில், 57,800க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்திருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. மறுபுறம், காஸாவில் உள்ள மக்களுக்கும் குழந்தைகளுக்கும் அவசர உதவிகள்கூட கிடைக்காமல் பட்டினியில் சாகும் நிலை உருவாகி வருகிறது. இதுகுறித்து ஐ.நா. தொடர்ந்து தனது கவலைகளைப் பதிவு செய்து வருகிறது.
இஸ்ரேலின் கொடூரத் தாக்குதலில் காஸா மக்கள் ஒருபுறம் மாண்டு வரும் நிலையில், மறுபுறம் பட்டினியால் உயிரை விடும் பேரவலமும் நிகழ்ந்து வருகிறது.
உணவு கிடைக்காததால் நேற்று ஒரே நாளில் மட்டும் 15 பேர் இறந்துள்ளனர். இதில் 6 வார பச்சிளம் குழந்தை ஒன்றும் அடக்கம். இதுவரை 80 குழந்தைகள் உட்பட 101 பேர் இறந்துள்ளதாக காஸா சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். 21 மாத தாக்குதலில் சுமார் 60 ஆயிரம் பேர் இறந்துவிட்ட நிலையில் எஞ்சியுள்ளோருக்கான உணவு உதவிகளை அனுமதிப்பதை இஸ்ரேல் பெரும்பாலும் நிறுத்திவிட்டது. உணவு வழங்கப்படும் சில இடங்களிலும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. வாட்டும் பட்டினியில் உணவுக்காக தட்டேந்தி நின்றவர்கள் ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
காஸாவில் பொதுமக்கள் மட்டுமல்லாமல் செய்தி சேகரிக்கச் சென்றுள்ளவர்கள் நிலையும் பரிதாபமானதாக இருக்கிறது என AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. காஸா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் 21 மாதங்களாக நீடிக்கிறது. இடையில் ஒரு மாத போர் நிறுத்தம் தவிர தொடரும் குண்டு மழையால் 60 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். ஏராளமான கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன. போரை நிறுத்துவதற்கான முயற்சிகளும் கைகூடாத நிலையில் காஸாவில் வாழ்க்கை நரகமாக மாறியுள்ளது.
மறுபுறம், காஸாவில் குண்டுகளுக்கும் பட்டினிக்கும் மக்கள் மாண்டுகொண்டுள்ள நிலையில் தாக்குதல்களை நிறுத்த இஸ்ரேலில் மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். பட்டினியால் பரிதவித்து வரும் காஸா குழந்தைகளின் படத்தை போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர். இந்தநிலையில் காஸாவில் உணவு வினியோகத்தை தாங்கள் நிறுத்தவில்லை என இஸ்ரேல் அரசு விளக்கம் அளித்துள்ளது.