அமெரிக்காவில் போலீசாரால் தடுத்து நிறுத்தம்.. ட்ரம்பிடம் பேசிய பிரான்ஸ் அதிபர் மேக்ரோன்!
ஐ.நா. விவாதத்தில் பங்கேற்கச் சென்ற பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் வாகனமும் தடுத்து நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்வை தொலைபேசியில் தொடர்புகொண்டார்.
காஸாவில் தொடரும் போர்
இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்னை என்பது 19ஆம் நூற்றாண்டில் இருந்தே இருந்து வருகிறது. இருந்தபோதும், அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 815 பொதுமக்கள் உட்பட 1,195 இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர். அதோடு, 251 பேர் பிணைக்கைதிகளாகப் கொண்டு செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் இன்றுவரை போர் தொடுத்து வருகிறது. இப்போரால், இதுவரை அங்கு 65,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர். ஆயினும், அதைப் பொருட்படுத்தாத இஸ்ரேல் ராணுவம், அங்கு தரைவழித் தாக்குதலை அங்கு தீவிரப்படுத்தியுள்ளது. இதிலிருந்து தப்ப வடக்கு, மத்திய காஸாவில் உள்ள மக்கள் தெற்கு நோக்கி கூட்டம்கூட்டமாகப் படையெடுத்துச் செல்கின்றனர். மறுபுறம், காஸாவில் போரை உடனடியாக நிறுத்தவும், பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கவும் பிரிட்டன், பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.
பாலஸ்தீனம் குறித்துப் பேசிய ட்ரம்ப்
இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் பொது அவைக் கூட்டத்தில் நேற்று உரையாற்றிய ட்ரம்ப், ”நான் இதுவரை 7 போர்களை நிறுத்தியுள்ளேன். இதைச் செய்ததில் நான் பெருமை கொள்கிறேன். இதற்காக எனக்கு நோபல் பரிசு கிடைக்க வேண்டும் என்று அனைவரும் கூறுகிறார்கள். ஆனால், விருதுகளைத் தேடுவதைவிட மோதல்களை முடிவுக்குக் கொண்டுவந்து உயிர்களைக் காப்பாற்றுவதில்தான் கவனம் செலுத்துகிறேன். அதேபோல், நான் காஸா போர் நிறுத்தத்திலும் ஈடுபட்டு வருகிறேன். ஆனால், ஹமாஸ்தான் அமைதிக்கான பேச்சுவார்த்தைகளை மறுத்து வருகிறது. சிலர், பாலஸ்தீனத்தை ஒருமனதாக ஒரு நாடாக அங்கீகரித்து வருகிறார்கள். ஆனால், அது ஹமாஸ் தீவிரவாதத்தின் அட்டூழியங்களுக்கு பெரிதும் உதவும்” என்றார். இக்கூட்டத்தில் ட்ரம்ப் 2ஆவது முறை அதிபரானபின் ஐநா சபையில் பேசுவது இதுவே முதல்முறையாகும். ட்ரம்ப் பாலஸ்தீனத்தை கடுமையாக எதிர்க்கும் நிலையில் அவரது பேச்சு முக்கியத்துவம் பெற்றது.
ஐநா பொதுச்செயலர் பேச்சு
முன்னதாக இக்கூட்டத்தில் பேசிய ஐநா பொதுச்செயலர் அன்டோனியோ குட்டரஸ், “பாலஸ்தீன நாடு என்பது அம்மக்களின் உரிமை. அவர்களுக்கு வழங்கும் சலுகை அல்ல. பாலஸ்தீனத்திற்கு தனி நாடு அந்தஸ்து மறுப்பது பயங்கரவாதிகளுக்கு வழங்கும் பரிசு. இப்பிரச்னை நீடிப்பது மத்திய கிழக்கில் அமைதியின்மையை நீடிக்கவே வழிசெய்யும்” என வலியுறுத்தினார்.
பின்னர் இதே கூட்டத்தின்போது BFMTVயிடம் பேசிய பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரோன், ”போரை நிறுத்த இஸ்ரேலுக்கு அழுத்தம் கொடுக்கும் சக்தி அமெரிக்காவுக்கு மட்டுமே உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் ஏதாவது செய்யக்கூடிய ஒரே ஒரு நபர் என்றால், அது அமெரிக்க அதிபர் மட்டுமே. அவர், இந்த விஷயத்தில் நம்மைவிட அதிகமாக செய்ய முடியும்? பாலஸ்தீன அரசை நிறுவுவது இறுதியில் இஸ்ரேலின் அங்கீகாரத்தைப் பொறுத்தது. இஸ்ரேல் அரசு, அதை அங்கீகரிக்கும் நாளில் ஒரு பாலஸ்தீன அரசு உண்மையிலேயே உருவாக்கப்படும்” என்றார். இதன்மூலம் ஐ.நாவில் பாலஸ்தீனத்தை ஒரு நாடாக பிரான்ஸ் அங்கீகரித்தபோதிலும் அமெரிக்கா, இஸ்ரேல் மீது அதிக செல்வாக்கைக் கொண்டுள்ளது என்பதை மக்ரோன் ஒப்புக்கொண்டார்.
அமெரிக்காவில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்ட மேக்ரோன்
முன்னதாக, ஐ.நா. பொது அவையில் பங்கேற்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று முன்தினம் மாலை சென்றார். அப்போது, நியூயார்க் நகரில் பொதுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால், ஐ.நா. விவாதத்தில் பங்கேற்க வந்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் வாகனமும் தடுத்து நிறுத்தப்பட்டது. ட்ரம்ப் வருகைக்காக அனைத்துச் சாலைகளும் அடைக்கப்பட்டிருந்ததால், நியூயார்க்கின் தெருக்களில் மேக்ரோன் சிக்கித் தவித்தார். இதனால் பதற்றமடைந்த மேக்ரோன், தனது காரில் இருந்து இறங்கி, சாலைத் தடுப்பு குறித்து விசாரிக்க காவல்துறையை அணுகினார்.
ட்ரம்பின் வாகன அணிவகுப்பு கடந்து செல்லவிருப்பதாக போலீசார் அவரிடம் கூறியதைத் தொடர்ந்து, தெருவில் நின்றபடியே மேக்ரோன் அமெரிக்க அதிபர் ட்ரம்புவை போனில் தொடர்புகொண்டார். "எப்படி இருக்கீங்க? என்ன நடந்தது என்று யூகிக்கிறீர்களா? எல்லாம் உங்களுக்காக மூடப்பட்டிருப்பதால் நான் தெருவில் காத்திருக்கிறேன்" என மேக்ரோன் ட்ரம்பிடம் பேசியதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், அதற்குள், ட்ரம்பின் வாகனத் தொடரணி கடந்து சென்றுவிட்டது. அதேநேரத்தில், பிரெஞ்சு அதிபர் மேக்ரோன் தனது காருக்கு திரும்பாமல் கால்நடையாகவே தனது பயணத்தைத் தொடர்ந்தார். அமெரிக்கர்களுக்கு, இது ஓர் அரிய காட்சியாக இருந்தது. இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியது.