காஸாவை கைப்பற்ற தீவிர நடவடிக்கை.. தாக்குதலைத் தொடங்கிய இஸ்ரேல்.. ஐ.நா. கவலை!
இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னை என்பது பல தசாப்தங்களாக நீடித்து வரும் நிலையில், காஸா நகரை கைப்பற்றுவதற்கான புதிய ராணுவ நடவடிக்கைகளை இஸ்ரேல் ராணுவம் தொடங்கியுள்ளது. இது கவலையளிப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. இதுதொடர்பான செய்தியை இந்தக் கட்டுரை விவரிக்கிறது
காஸாவை முழு கட்டுப்பாட்டில் கொண்டுவர இஸ்ரேல் திட்டம்
இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னை என்பது பல தசாப்தங்களாக நீடித்து வரும் நிலையில், காஸா பகுதியை ஆளும் ஹமாஸ் அமைப்பினர் அக்டோபர், 2023இல் இஸ்ரேல் மீது நடத்திய திடீர் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டதுடன், 252 பேர் பணயக் கைதிகளாகவும் பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்குப் பதிலடியாக காஸா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இடையில் பேச்சுவார்த்தை ஏற்பட்டு சில நாட்கள் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தாலும், மறுபடியும் அங்கு இன்றுவரை போர் தொடர்கிறது.
இதுவரை அங்கு 61,000க்கும் மேற்பட்ட மக்கள் பலியாகி உள்ளனர். இதற்கிடையே, ஹமாஸ் வசம் உள்ள தங்கள் நாட்டு பிணைக்கைதிகள் 58 பேர் விடுவிக்கப்படும் வரை தாக்குதல்கள் தொடரும் என எச்சரித்துள்ள இஸ்ரேல், காஸாவை தங்கள் முழு கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளது. காஸாவின் 80 சதவீத பகுதி தற்போது இஸ்ரேல் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், மீதமுள்ள 20 சதவீத பகுதிகளிலும் தாக்குதல்களை தீவிரப்படுத்தி, தங்கள் வசப்படுத்த இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. இதற்காக, இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை, ஒப்புதல் வழங்கியுள்ளது நினைவுகூரத்தக்கது.
புதிய ராணுவ நடவடிக்கைகளை தொடங்கிய இஸ்ரேல்
இந்த நிலையில், காஸா நகரை கைப்பற்றுவதற்கான புதிய ராணுவ நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பின் முக்கிய கோட்டையாகக் கருதப்படும் காஸா நகரை குறிவைத்து, இஸ்ரேல் வான்வழி மற்றும் பீரங்கித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. கடுமையான கடற்படை மற்றும் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து, நகரின் புறநகரில் உள்ள ஜெய்டவுன் பகுதியில் இரண்டு காலாட்படை மற்றும் டாங்கிப் படைகள் இப்போது தரையில் செயல்பட்டு வருகின்றன. ஜபாலியா மாவட்டத்தில் மற்றொரு காலாட்படை படை செயல்பட்டு வருகிறது. மேலும், வரும் வாரங்களில் 1,20,000க்கும் மேற்பட்ட ரிசர்வ் வீரர்கள் களத்தில் நிறுத்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கத்தார் மற்றும் எகிப்து முன்மொழிந்த தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஹமாஸ் ஏற்றுக்கொண்டதை பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கம் பரிசீலித்து வரும் நிலையில், மறுபுறம் இஸ்ரேலிய இராணுவம், 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வசிக்கும், மிகப்பெரிய நகரத்தை குறிவைத்து தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது. இந்த புதிய தாக்குதல்கள், அங்கிருந்து ஆயிரக்கணக்கான மக்களை இடம்பெயரச் செய்துள்ள நிலையில், மனிதாபிமான நெருக்கடி நிலையை மேலும் மோசமாக்கும் என ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. பிணைக்கைதிகள் விடுவிப்பு மற்றும் போர்நிறுத்த பேச்சுவார்த்தைகள் தொடரும் நிலையில், இந்த ராணுவ நடவடிக்கை பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.