பிரான்ஸ், பிரிட்டன் வரிசையில் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் அடுத்த நாடு; சர்வதேச அளவில் பெருகும் ஆதரவு
இஸ்ரேல் - பாலஸ்தீனப் பிரச்னை என்பது பல தசாப்தங்களாக நீடித்து வருகிறது. கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் தொடர்ந்து நடைபெற்று வரும் போரில், இதுவரையில், 60,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்திருப்பதாக ஐ.நா. தெரிவித்துள்ளது. மறுபுறம், காஸாவில் உள்ள மக்களுக்கும் குழந்தைகளுக்கும் அவசர உதவிகள்கூடக் கிடைக்காமல் பட்டினியில் சாகும் நிலை உருவாகி வருகிறது. இதுகுறித்து ஐ.நா. தொடர்ந்து தனது கவலைகளைப் பதிவு செய்து வருகிறது.
இந்த நிலையில், பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்திருந்தது சர்வதேச அளவில் பேசுபொருளானது. இதற்கு அமெரிக்காவும், இஸ்ரேலும் எதிர்ப்பு தெரிவித்தன. பிரான்ஸைத் தொடர்ந்து, பிரிட்டனும் ஆதரவு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், கனடாவும் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாகத் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக கனடா பிரதமர் மார்க் கார்னி, “மத்திய கிழக்கில் இஸ்ரேல் ஒரு சுதந்திர நாடாக இருப்பதை கனடா எப்போதும் உறுதியாக ஆதரிக்கும். இஸ்ரேல் அரசுடன் அமைதியுடனும், பாதுகாப்புடனும் வாழும் ஒரு சுதந்திரமான, சாத்தியமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடு பாலஸ்தீனம். இருநாடுகள் இடையே நடக்கும் மோதலுக்கு தீர்வு காண, கனடா நீண்ட காலமாக உறுதிபூண்டு உள்ளது. ஐ.நா சபையில் வருகிற செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்கும் உலகத் தலைவர்களின் வருடாந்திர கூட்டத்தில் பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்போம். அங்கு 2026-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல்களை நடத்த வேண்டும். அதில் ஹமாஸ் அமைப்பு எந்தப் பங்கையும் வகிக்கக்கூடாது. மேலும் பாலஸ்தீன அரசை ராணுவ மயமாக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.
அதேபோல் மால்டா நாடும் ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மால்டா வெளியுறவு அமைச்சகச் செயலாளர் கிறிஸ்டோபர் கட்டஜார், “பாலஸ்தீன மக்களுக்கான சுயநிர்ணய உரிமையை மால்டா நீண்ட காலமாக ஆதரித்து வருகிறது. இரு நாடு தீர்வு என்ற கருத்தை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். இதனால் செப்டம்பரில் நடைபெறவிருக்கும் ஐ.நா. பொதுச் சபையில் பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிப்பதற்கான கொள்கைரீதியான முடிவை மால்டா அரசாங்கம் எடுத்துள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
காஸா மீதான இஸ்ரேலின் போருக்கு சர்வதேச அளவில் கண்டனம் அதிகரித்து வரும் நிலையில், பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க பல்வேறு சர்வதேச நாடுகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. பாலஸ்தீன அரசை இப்போது அங்கீகரிக்கும் அல்லது அங்கீகரிக்கத் திட்டமிடும் 142 நாடுகளில், தற்போது பிரான்ஸ், பிரிட்டன், கனடா, மால்டா ஆகிய நாடுகளும் இணைந்திருப்பது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, கடந்த ஆண்டு தொடக்கத்தில் பாலஸ்தீன அரசை ஸ்பெயின் அங்கீகரித்திருந்தது.
அதைத் தொடர்ந்து அயர்லாந்து மற்றும் நார்வே ஆகிய நாடுகளும் கூட்டாக பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்தன என்பது குறிப்பிடத்தக்கது. 1967 மத்திய கிழக்குப் போரின்போது இஸ்ரேல் கைப்பற்றிய மேற்குக் கரை, கிழக்கு ஜெருசலேம் மற்றும் காஸா ஆகிய பகுதிகளில் ஒரு சுதந்திர அரசை உருவாக்க பாலஸ்தீனியர்கள் பல தசாப்தங்களாக முயன்று வருகின்றனர். இங்கு இரண்டு மில்லியன் மக்கள் உள்ளனர். இதற்கு இஸ்ரேலும், அதன் ஆதரவு பெற்ற நாடுகளும் நீண்டகாலமாக எதிர்த்து வருகின்றன.