பிரான்ஸில் வெடித்த மக்கள் புரட்சி.. தீ வைப்பு, கடைகள் சூறை.. என்ன நடக்கிறது?
செய்தியாளர் - M.மீரா
பிரான்ஸில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு, எரிபொருள் விலை உயர்வு, மக்களின் வாங்கும் சக்தி குறைவு ஆகியவை போராட்டங்களுக்கு முக்கியக் காரணங்களாக உள்ளன. அரசின் செலவுக் குறைப்பு நடவடிக்கைகளால் கல்வி உள்ளிட்ட பொதுச் சேவைகள் பாதிக்கப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
குறிப்பாக, பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை, மோசமான உள்கட்டமைப்பு ஆகியவற்றைக் கண்டித்து மாணவர்கள் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் பரவியது. இதனுடன், ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்ற தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளும் இணைந்தன. அரசின் பொருளாதாரக் கொள்கைகள் மீதான அதிருப்தியும் அரசியல் நம்பிக்கையின்மையும் போராட்டத்தைத் தீவிரப்படுத்தின.
இந்த போராட்டம் அக்டோபர் 17 அன்று நாடு முழுவதும் பிரம்மாண்ட போராட்டங்களாக விஸ்வரூபம் எடுத்தது. பிரான்ஸ் உள்துறை அமைச்சகத்தின் கணக்குப்படி, சுமார் 5.5 லட்சம் பேர் போராட்டத்தில் பங்கேற்றனர். தொழிற்சங்கங்கள் இந்த எண்ணிக்கை 8 லட்சம் வரை இருக்கலாம் எனத் தெரிவித்தன. மாணவர்களுடன் தொழிற்சங்கத்தினரும், அரசின் பொருளாதாரக் கொள்கைகளால் அதிருப்தியடைந்த மக்களும் போராட்டத்தில் இணைந்தனர்.
தொடக்கத்தில் அமைதியாக நடைபெற்ற பேரணிகள், பாரிஸ், மார்செய், லியோன், லிமோஜ் உள்ளிட்ட நகரங்களில் வன்முறையாக மாறின. பாரிஸில் கடைகள் சூறையாடப்பட்டதுடன், வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. மார்செய் நகரில் போராட்டக்காரர்கள் நகராட்சி அலுவலகத்திற்குள் புகுந்தனர். லிமோஜ் நகரில் சுமார் 143 ஆண்டுகள் பழமையான நகராட்சி கட்டடம் தீப்பற்றி பெரும் சேதமடைந்தது. லியோனிலும் சுற்றுலா அலுவலகம் தீக்கிரையானது. பல அரசு அலுவலகங்கள் தீக்கிரையாகியது.
இதையடுத்து, போலீசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும், தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் கூட்டத்தைக் கலைக்க முயன்றனர். இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சில இடங்களில் கடைகள் சூறையாடப்பட்டதுடன், வணிக நிறுவனங்களும் சேதப்படுத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், தீ வைப்பு, கடைகள் சூறையாடல் மற்றும் அரசு கட்டடங்கள் மீதான தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
பிரான்ஸில் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்தப் போராட்டங்கள் அரசியல் பதற்றத்தையும் அதிகரித்துள்ளன. விலைவாசி உயர்வு, பொதுச் சேவைகளின் பாதிப்பு ஆகியவற்றால் மக்களின் அதிருப்தி அதிகரித்துள்ளது. இதனால் ஆளும் தரப்புக்கு அரசியல் அழுத்தம் அதிகரிப்பதுடன், தேர்தலில் இந்த விவகாரங்கள் முக்கியப் பங்கு வகிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

