பருவநிலை மாற்றம்! கடலில் தொடங்கிய ஆபத்து… உலக உயிரினங்களுக்கு எச்சரிக்கை
சின்ஸ்ட்ராப் பென்குயின்களின் எண்ணிக்கை 2011-ல் 10.9 லட்சமாக இருந்தது, 2025-ல் 4.02 லட்சமாகக் குறைந்துள்ளது. பருவநிலை மாற்றம் மற்றும் உணவுக்குறைவால் இவை அழியும் அபாயத்தில் உள்ளன.
செய்தியாளர் - M.மீரா
அண்டார்டிகா அருகே உள்ள தெற்கு சாண்ட்விச் தீவுகளில் (South Sandwich Islands) அமைந்துள்ளது சவோடோவ்ஸ்கி (Zavodovski) தீவு. இங்கு சின்ஸ்ட்ராப் (Chinstrap) வகை பென்குயின்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வந்தன.
பிரிட்டிஷ் அண்டார்டிக் ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்வில், 2011 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் இந்தத் தீவில் வாழ்ந்த சின்ஸ்ட்ராப் பென்குயின்களின் எண்ணிக்கை சுமார் 63 சதவீதம் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. ட்ரோன் மற்றும் செயற்கைக்கோள் படங்களை ஆய்வு செய்ததில், 6.8 லட்சத்துக்கும் அதிகமான பென்குயின்கள் குறைந்திருப்பது தெரியவந்துள்ளது.
2011-ல் சுமார் 10.9 லட்சமாக இருந்த இனப்பெருக்கம் செய்யும் பென்குயின்களின் எண்ணிக்கை, 2025-ல் சுமார் 4.02 லட்சமாகச் சரிந்துள்ளது. ஆண்டுதோறும் இந்தப் பென்குயின்களின் எண்ணிக்கை சுமார் 7 சதவீதம் குறைந்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பென்குயின்கள் உயிர்வாழ்வதற்கு கிரில் (Krill) எனப்படும் சிறிய இறால் போன்ற கடல்வாழ் உயிரினங்கள் முக்கிய உணவாக உள்ளன.
ஆனால், பருவநிலை மாற்றத்தால் கடலின் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதனால், கிரில் உயிரினங்கள் குளிர்ச்சியான கடல் பகுதிகளை நோக்கி நகர்கின்றன. இந்த மாற்றத்தால் சின்ஸ்ட்ராப் பென்குயின்களுக்குத் தேவையான உணவு கிடைப்பது குறைந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
2016-ல் இந்தத் தீவில் உள்ள எரிமலை வெடித்ததால் பென்குயின்களின் எண்ணிக்கை குறைந்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்தது. ஆனால், பென்குயின்களின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது எரிமலை வெடிப்பதற்கு முன்பே என்பதால், அதுவே முக்கியக் காரணம் இல்லை என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால் இதே தீவில் வாழும் மக்கரோனி (Macaroni) வகை பென்குயின்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2011-ல் சுமார் 3.38 லட்சமாக இருந்த இவற்றின் எண்ணிக்கை, 2025-ல் 4.33 லட்சமாக உயர்ந்துள்ளது. இவை பல்வேறு வகையான உணவுகளைச் சாப்பிடுவதால், சுற்றுச்சூழல் மாற்றங்களைச் சமாளிக்க முடிகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது, ஒரு மில்லியனுக்கும் அதிகமான பென்குயின்களைக் கொண்ட கேப் அடேர் பகுதியில் உள்ள அடேலி (Adélie) பென்குயின் கூட்டமே உலகின் மிகப்பெரிய பென்குயின் கூட்டமாகக் கருதப்படுகிறது.
மேலும், சின்ஸ்ட்ராப் (chinstrap) பென்குயின்களின் எண்ணிக்கை வேகமாகக் குறைந்து வருவதால், அவற்றை அழியும் அபாயத்தில் உள்ள உயிரினங்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
பருவநிலை மாற்றம் கடல் உணவுச் சங்கிலியையே மாற்றி, உயிரினங்களின் வாழ்விடத்தையும் எதிர்காலத்தையும் எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கு இந்த ஆய்வு முக்கிய எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

