திணறடித்த 4000+ வெள்ளி புதையல்.. 131 ஆண்டுகால சாதனை! 1000 ஆண்டு ‘சிஸ்மா’ பின்னணி!
பின்லாந்தின் சிஸ்மா (Sysma) பகுதியில் மெட்டல் டிடெக்டர் (Metal Detector) மூலம் கண்டுபிடிக்கப்பட்ட சுமார் 4.5 கிலோ எடையுள்ள 4,000-க்கும் மேற்பட்ட பழங்கால வெள்ளி நாணயங்கள் மற்றும் ஆபரணங்கள் அடங்கிய மெகா புதையல், வரலாற்று ஆர்வலர்களிடையேயும் தொல்பொருள் ஆய்வாளர்களிடையேயும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
பின்லாந்தின் சிஸ்மா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் பழங்கால மற்றும் இடைக்கால வரலாற்றுச் சின்னங்களுக்குப் பெயர் பெற்றவை. மேலும் இப்பகுதிகள் வெள்ளி நாணயங்கள் மற்றும் ஆபரணங்கள் அவ்வப்போது கிடைக்கப்படுவதுண்டு. அந்த வகையில், காலே லப்பினைனன் (Kalle Lappinen) என்பவர், கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி பின்லாந்தின் சிஸ்மா பகுதியில் மெட்டல் டிடெக்டர் மூலம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவருக்கு அந்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க மிகப்பெரிய வைக்கிங் காலத்து வெள்ளிப் புதையல் சிக்கியுள்ளது. சுமார் 4.5 கிலோ (கிட்டத்தட்ட 10 பவுண்டுகள்) எடையுள்ள 4,000-க்கும் மேற்பட்ட பழங்கால வெள்ளி நாணயங்கள் மற்றும் ஆபரணங்கள் அதில் இருந்துள்ளன.
இதையறிந்த தொல்பொருள் ஆய்வாளர்கள், அங்குச் சென்று பார்த்தபோது அவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, நிலத்திற்கு அடியில் 45 சென்டிமீட்டர் ஆழத்தில் கற்களுக்கு நடுவே புதைக்கப்பட்டிருந்த இந்த இரட்டைப் புதையல் 1,000 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தவிர, இந்தப் புதையல் ஒரே இடத்தில் புதைக்கப்படவில்லை. மாறாக, 12 மீட்டர் (சுமார் 39 அடி) இடைவெளியில் இரண்டு தனித்தனி மரப் பெட்டிகளில் வைத்துப் புதைக்கப்பட்டுள்ளது. ஆராய்ச்சியாளர்களின் முதற்கட்ட ஆய்வில், இந்நாணயங்கள் கி.பி. 1000 முதல் 1050 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்தவை எனவும், இது வைக்கிங் காலம் என அறியப்படும் காலகட்டத்திற்குள் அடங்குகிறது எனவும், இந்த நாணயங்கள் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்துள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்தக் காலகட்டத்தில் வெள்ளி எவ்வளவு பரவலாகப் புழக்கத்தில் இருந்தது என்பதை இந்த நாணயங்கள் வெளிப்படுத்துகின்றன. இந்தக் கண்டுபிடிப்புகளில், தற்கால ஸ்வீடன், பிரிட்டன் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளை தொடர்புடைய நாணயங்களும், தற்போதைய துருக்கி மற்றும் ஈரான் ஆகிய பிராந்தியங்களைச் சார்ந்த பகுதிகளில் இருந்து உருவான இஸ்லாமிய திர்ஹம்களும் அடங்கும். ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து நாணயங்களைச் சுத்தம் செய்து ஆய்வு செய்து வருகின்றனர்.
அதேநேரத்தில், இந்தப் புதையலைப் புதைத்தவர் யார், அதை மீண்டும் எடுக்க வராதது ஏன் உள்ளிட்ட கேள்விகளுக்கு இன்னும் மர்மம் விலகவில்லை. வியாபாரி எவராவது தனது பாதுகாப்பிற்காக பணத்தைப் புதைத்து வைத்துவிட்டுப் பின்னர் எடுக்க முடியாமல் போயிருக்கலாம் அல்லது போர்ப் பதற்றம் மற்றும் எதிரிகளின் தாக்குதலுக்குப் பயந்து உள்ளூர் பணக்காரர் ஒருவர் இதை புதைத்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. மறுபுறம், பின்லாந்தின் இந்த மெகா புதையலே அதிகமான நாணயங்களுடன் கண்டெடுக்கப்பட்டுள்ள புதையலாக மாறியுள்ளது. இதற்கு முன்பு, 1895-ஆம் ஆண்டு நௌசியனென் (Nousiainen) பகுதியில் கண்டெடுக்கப்பட்ட 1,700 நாணயங்கள் அடங்கிய புதையலே பின்லாந்தின் மிகப்பெரிய வைக்கிங் காலத்துப் புதையலாக இருந்தது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பின்லாந்து சட்டப்படி, நிலத்தில் கிடைக்கும் 100 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுப் புதையல்கள் அரசுக்கு உடனடியாகத் தெரிவிக்கப்பட வேண்டும். புதையலை அரசிடம் ஒப்படைத்த பிறகு, தொல்பொருள் துறையினர் அதன் வரலாற்று மற்றும் நிதி மதிப்பை மதிப்பீடு செய்து, புதையலைக் கண்டுபிடித்தவருக்குச் சட்டப்பூர்வ சன்மானத்தை வழங்குவர். பின்னர், அந்தப் பொருட்கள் தேசிய அருங்காட்சியகத்தில் சேர்க்கப்பட்டு பாதுகாக்கப்படும்.

